கோவிந்த் பன்சாரே நினைவு தினம் பிப்ரவரி 20
2015, பிப்ரவரி 20! இந்த நாளில்தான் கோவிந்த் பன்சாரே எனும் சமூகச் செயற்பாட்டாளரின் உயிர் பிரிந்தது. தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கைகள், மதவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும், மாணவப் பருவத்திலேயே மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகத் தன்னை சி.பி.ஐ. கட்சியில் இணைத்துக்கொண்டு அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தும், பேசியும் எழுதியும்வந்தவர் கோவிந்த் பன்சாரே.
பன்சாரே மகாராஷ்டிரக்காரர். மராட்டிய வீரர் சிவாஜியை சிவ சேனா இந்துத்துவப் பின்னணியில் மக்களிடையே கொண்டு சென்றபோது, அதனைத் தடுத்து நிறுத்தும் விதமாக ‘சிவாஜி யார்?' எனும் புத்தகத்தை எழுதினார். அதன் காரணமாகவே இந்துத்துவவாதிகளின் எதிரியும் ஆனார்.
இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் அதிகார வர்க்கத்தின் துவேஷங்கள், காவிகளின் வரலாற்றுத் திரிபுகள் ஆகியவற்றை எதிர்த்து வந்தார். அதன் காரணமாக அவரின் தலைக்கும் ஒரு தோட்டா ‘இலக்கு' நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை நோக்கிச் சுட்டார்கள். அவரின் மனைவியைக் கீழே தள்ளிவிட்டுச் சென்றார்கள். நான்கு நாட்கள் கழித்து பன்சாரே உயிர் பிரிந்தது. அவரின் மனைவிக்குத் தலையில் அடிபட்டதால் அவர் இன்று வரை பக்கவாத நோயாளியாகப் படுக்கையில் இருக்கிறார்.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை மட்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு கைது செய்தது காவல்துறை. இது தொடர்பான விசாரணை மெத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதோ... இந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி, பன்சாரேவின் முதல் நினைவு தினம்!
இந்தத் தருணத்தில் 'தி ரிபப்ளிக் ஆஃப் ரீசன்' எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொலைக்குப் பிறகு, பன்சாரே கொல்லப்பட்டார். பன்சாரேவின் கொலைக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தில் எம்.எம்.கல்புர்கி கொலை செய்யப்பட்டார். இந்த மூவரின் கொலையும் நிகழ்கால இந்திய வரலாற்றின் பக்கங்களில் சிவப்பு மையால் அடிக்கோடிடப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. காரணம், இவர்கள் மூவரும் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதால் அல்ல. இவர்கள் மூவரின் உயிரும் துப்பாக்கித் தோட்டாவால் பறிக்கப்பட்டது என்பதால் அல்ல... இவர்கள் மூவரின் பணியும் இந்துத்துவத்துக்கு எதிராக இருந்தது என்பதுதான்!
'நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது' என்ற பாப்லோ நெரூடாவின் வரிகளுக்கு ஏற்ப, இவர்கள் மூவர் இறந்துபோனாலும், இவர்களின் பணி, சுவடு தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக, இவர்கள் எழுதிய மிக முக்கியமான சில கட்டுரைகளைத் தொகுத்து ‘தி ரிபப்ளிக் ஆஃப் ரீசன்' எனும் புத்தகமாக சஃப்தார் ஹாஷ்மி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இது சென்ற ஆண்டு இறுதியில் வெளியானது.
இதில் கோவிந்த் பன்சாரே எழுதியிருக்கும் கட்டுரை மிகவும் முக்கியமானது. ‘மதம் மக்களுக்கு ஓபியத்தைப் போன்றது' எனும் கார்ல் மார்க்ஸின் வரியை நம்மில் பலர் பலமுறை கேட்டிருப்போம். சொல்லியிருப்போம். ஆனால் அந்த வரியின் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்குமா நமக்கு?
‘புரட்சியாளர்கள் மதத்தை எவ்வாறு அணுக வேண்டும்?' என்ற தலைப்பில் அமைந்த தன் கட்டுரையில், ‘இதுவரையில் மார்க்ஸின் இந்த வரியை நாம் தவறாகவே புரிந்துகொண்டு வந்திருக்கிறோம். ஏனெனில், இந்த வரி, தனியான வரி அல்ல. மார்க்ஸ் எழுதிய பத்தி ஒன்றில் வரும் வரி இது. இந்த வரிக்கு முன்பு உள்ள வரிகளை எல்லாம் நாம் மறந்துவிட்டோம். அதனால் இந்த வரியின் உண்மையான அர்த்தம் நமக்கு விளங்கவில்லை' என்கிறார் பன்சாரே.
‘ஒடுக்கப்படுபவர்களின் இளைப்பாறலாக, இதயமற்ற உலகத்தில் அவர்களுக்கான இதயமாக, உயிரற்ற நிலையிலிருக்கும் தங்களுக்கு உயிராக மதம் இருக்கிறது. அது அவர்களுக்கு ஓபியம் போன்றதாக இருக்கிறது' என்று எழுதுகிறார் மார்க்ஸ்.
‘இதன் மூலமாக மார்க்ஸ் கூற வருவது என்னவென்றால், ‘மதம் தருகிற மாயையான இன்பத்தில் மூழ்காமல், மக்களை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து உண்மையிலேயே இன்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு மதம் தருகிற மாயையான இன்பம் என்பது ஓபியம் தரும் போதைக்கு நிகராக உள்ளது ‘என்பதுதான்' என்று புதிய விளக்கத்தைத் தருகிறார் பன்சாரே.
‘மதத்தைப் பற்றி நாம் எளிய மக்களிடையே விளக்கும்போது அலங்காரப் பூச்சுகள் இல்லாமல் நேரடியான மொழியைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரத்தையும், செல்வத்தையும் அடைவதற்கு மதம் ஆதிகாலத்திலிருந்து இன்று வரை எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் அதே சமயம், மதத்தின் சூழ்ச்சிக்குப் பலியானவர்களிடம் நாம் இரக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்களின் உண்மையான முகத்தை நாம் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். அவர்களைத் தோற்கடிப்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்' என்று அதே கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் பன்சாரே.
அந்த ஓபியத்தின் தன்மையைப் புரிந்துகொள்வோம். போராடுவோம்!
கோவிந்த் பன்சாரே
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago