அந்தக் கப்பல் சென்னையை அடைந்தபோது, தமிழ் மொழியின் சிறப்பு அதிலிருந்து இறங்கிய ஜப்பானியர்களின் மனதைத் தொட்டிருக்க வேண்டும்.
‘வண்க்கம் சென்னை!' என்று தங்களின் புருவங்களற்ற கண்களைச் சுருக்கிச் சிரித்துக் கொண்டே சொல்லும்போது, அடடா... தமிழ் எவ்வளவு அழகாக இருக்கிறது!
ஜப்பானியர்கள் மட்டும் என்றில்லை... ஆஸ்திரேலியா, பஹ்ரைன், சிலி, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, ரஷ்யா, இலங்கை, தான்சானியா மற்றும் அரபு நாடுகளிலிருந்து வந்திருந்த இளைஞர்களும் ‘வண்க்கம், நமஸ்தே' என்ற சொற்களை உதிர்த்து இந்திய இளைஞர்களைப் பெருமிதம் கொள்ள வைத்தார்கள்.
இளைஞர் கப்பல்
இன்றைய இளைஞர்கள் தங்களின் கல்வி மற்றும் பணியிடங்களில் முன்னேற முக்கியத் தடையாக இருப்பது எது என்று நினைக்கிறீர்கள்? சந்தேகமே இல்லாமல் ‘தொடர்புகொள்ளல்' எனும் பிரச்சனைதான்!
தன்னோடு பணிபுரியும் வேறு மொழியினர், வேறு மாநிலத்தவர், வேறு நாட்டவர் ஆகியோருடன் தன்னால் இயல்பாகப் பழக முடியாமல் போவதுதான் பெரும்பாலான சமயங்களில் இளைஞர்கள் தங்கள் ‘கரியர் கிராஃபில் சறுக்குவதற்குக் காரணமாக இருக்கிறது.
அந்த 'தொடர்புகொள்ளல்' பிரச்சனையை மாணவர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் இருந்து களைய வேண்டும், மற்ற நாட்டினரின் கலாச்சாரங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாட்டு இளைஞர்களைக் கப்பலில் அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கிறது ஜப்பான் அரசு. இந்தக் கப்பல் பயிற்சித் திட்டத்தின் பெயர், ‘ஷிப் ஃபார் வேர்ல்டு யூத்'.
திட்டத்தின் வரலாறு
சர்வதேச அளவிலான இந்த 'யூத் கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்ச்' திட்டம் முதன்முதலில் 1959ம் ஆண்டு ஜப்பான் அமைச்சரவை அலுவலகத்தால் 'ஜப்பானிய இளைஞர் நல்லெண்ணத் தூதரகத் திட்டம்' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1967ம் ஆண்டு பேரரசர் மெய்ஜியின் கீழ் ஜப்பானில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்தத் திட்டம் 'ஜப்பானிய இளைஞர் நல்லெண்ணக் கப்பல் சுற்றுப்பயணம்' என்று மாறியது.
ஆரம்பத்தில் இந்தத் திட்டத்தின் கீழ், ஜப்பானிய இளைஞர்களைப் பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்று பல்வேறு கலாச்சாரங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் நோக்கமாக இருந்தது. அதன் பிறகு இந்தத் திட்டத்தில் இதர நாடுகளின் இளைஞர்களும் கலந்துகொண்டால், இளைஞர்களுக்கிடையே கலாச்சாரப் பரிமாற்றமும், உலகளாவிய அறிவும் மேம்படும் என்ற காரணத்தால் 1988ம் ஆண்டு முதல் 'ஷிப் ஃபார் வேர்ல்டு யூத்' என்ற பெயரில் இத்திட்டம் அழைக்கப்பட்டு வருகிறது.
என்ன தகுதி?
இந்தத் திட்டத்தில் ஜப்பான் உட்பட பல்வேறு நாட்டு இளைஞர்களும் கலந்துகொள்வர். ஒவ்வொரு ஆண்டும் 12 நாடுகளுக்கு ஜப்பான் அரசால் விண்ணப்பம் அனுப்பப்படும். அந்த நாடுகள் எவை என்பது ஜப்பான் அரசின் முடிவுக்குட்பட்டதாகும். எனினும், இந்தியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பம் அனுப்பப்படுகிறது.
விண்ணப்பம் கிடைக்கப் பெற்ற நாடுகள் தங்கள் நாட்டில் கல்வி, விளையாட்டு, சமூக சேவை எனப் பல துறைகளில் சிறந்து விளங்கும் 10 இளைஞர்களைத் தேர்வு செய்து இந்தத் திட்டத்துக்கு அனுப்பி வைக்கும். ஜப்பான் அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால், அந்த நாட்டிலிருந்து மட்டும் சுமார் 120 இளைஞர்கள் கலந்துகொள்வார்கள். ஆக மொத்தம் 240 இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், சிலி, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, ரஷ்யா, இலங்கை, தான்சானியா மற்றும் ஐக்கிய அரபு நாடு ஆகிய 10 நாடுகள் கலந்துகொண்டன.
தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஜப்பானில் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பிறகு கப்பல் பயணம் தொடங்கும். பயணத்தின்போது குறிப்பிட்ட சில நாடுகளில் இறங்கி அந்த நாடுகளில் சுற்றுச்சூழல், ஊடகம், பேரிடர் மேலாண்மை, சமூக மேம்பாடு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயிற்சி பெறுவார்கள். இதனை ‘போர்ட் ஆஃப் கால் ஆக்டிவிட்டீஸ்' என்கிறார்கள்.
இந்தியாவின் பங்களிப்பு
1988-ம் ஆண்டு முதல் 27 ‘எடிஷன்'களாக இந்தத் திட்டம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 28-வது எடிஷன். இந்தத் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு 2வது எடிஷனிலிருந்தே ஆரம்பித்துவிட்டது (பார்க்க பெட்டி). இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 12 பேர் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தமிழர். புதுவைக்காரர். இந்த ஆண்டு இந்தியாவில் சென்னையிலும், இலங்கையிலும் ‘போர்ட் ஆஃப் கால் ஆக்டிவிட்டீஸ்' நடத்தப்பட்டன.
பள்ளியிலும், கல்லூரியிலும் எப்படி ‘முன்னாள் மாணவர்கள் சங்கம்' இருக்கிறதோ அதே போல இந்தத் திட்டத்தில் பங்கேற்றவர்களுக்காகவும் ‘ஷிப் ஃபார் வேர்ல்டு யூத் அலுமினி அசோஸியேஷன் ஆஃப் இந்தியா' என்ற பெயரில் ஒரு சங்கம் உள்ளது. இந்த ஆண்டு இந்த சங்கத்தைச் சேர்ந்த 50 பேர் கலந்துகொண்டனர்.
“இளைஞர்களிடத்தில் தலைமைப் பண்புகளையும், தகவல் தொடர்புத் திறன்களையும் வளர்ப்பதற்காக ஒவ்வொரு வருடமும் இந்தத் திட்டத்தை ஜப்பான் அரசு நடத்தி வருகிறது. இதில் பங்கேற்கும் இளைஞர்களின் மொத்த பயண செலவுகளையும் ஜப்பான் அரசே ஏற்றுக்கொள்கிறது” என்றார் இந்தக் கப்பலின் நிர்வாகி ஹிடேகி யுமுரா.
“மனசு நல்லாருந்தா எல்லாமே கிடைக்கும் சார்!”
இந்தக் கப்பல் பயணத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் தேர்வாகியிருக்கிறார். அவர் வீரகரிகாலன். புதுவைக்காரர். வழக்கறிஞர். இந்த வாய்ப்பு தனக்குக் கிடைத்த வெற்றி நிமிடங்களை நம்முடன் பகிர்கிறார்...
"பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே புதுவையிலதாங்க. லா படிச்சேன். யூ.ஜி.லயும், பி.ஜி.யுலயும் யுனிவர்ஸிட்டி ரேங்க் ஹோல்டரா வந்து கோல்ட் மெடல் வாங்கினேன்.
சின்ன வயசுலருந்தே என்.எஸ்.எஸ்., என்.சி.சி.ன்னு ‘கோ கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்ல' ஆர்வமா இருப்பேன். என்.எஸ்.எஸ்.ல தேசிய அளவிலான ‘பெஸ்ட் வாலண்டியர்'னு செலக்ட் ஆகி 'இந்திரா காந்தி' விருது வாங்கினேன்.
இதெல்லாம் போக நான் கடந்த 10 வருஷமா என்னால முடிஞ்ச அளவுல ‘சர்வீஸ்' மாதிரி ஏதோ செஞ்சிட்டுவர்றேன். இது எல்லாத்துக்கும் சேர்த்து வெச்ச மாதிரி போன வருஷம் மத்திய அரசு கிட்டயிருந்து தேசிய அளவிலான 'சிறந்த இளைஞர்' விருது கிடைச்சுது.
என்னோட சேர்ந்து 25 பேருக்கு இந்த விருது கிடைச்சுது. இந்த விருது வாங்குனவங்களுக்கு அடுத்த ஒரு வருஷத்துல உலகம் முழுவதும் நடக்கப்போற இளைஞர்கள் தொடர்பான நிகழ்ச்சிகள், விழாக்கள்ல கலந்துக்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கல்வி, விளையாட்டு, சமூக சேவை, இதர திறன்கள்னு பல தகுதிகளை வெச்சுத்தான் அந்த வாய்ப்பே நமக்குக் கிடைக்கும். அப்படி எனக்கு இந்த வருஷம் 'ஷிப் ஃபார் வேர்ல்டு யூத்' வாய்ப்பு கிடைச்சுது.
ஜப்பானுக்குப் போனேன். அங்க ‘நேஷனல் ஒலிம்பிக் மெமோரியல் யூத் சென்டர்'ல 10 நாள் தங்கினோம். அங்க லீடர்ஷிப் சம்பந்தமான பயிற்சிகள் கொடுத்தாங்க. அப்புறம் ஒவ்வொருவரும் அந்த நாட்டுல வாழுறவங்களோட வீட்ல போய் தங்கணும்.
நான் ‘ஃபுக்கூயி'ங்கிற நகரத்துல போய் லூயிஸ் மாரிஸ்ங்குறவரோட வீட்ல போய் தங்கியிருந்தேன். அவர் ஒரு யுனிவர்ஸிட்டி புரொஃபசர். அவர் வீட்ல மூணு நாள் தங்கினேன். தங்களோட மகன் மாதிரி அப்படி பார்த்துக்கிட்டாங்க.
சாப்பாட்டுல ஆரம்பிச்சு போக்குவரத்து விதிகள் வரைக்கும் அங்க அத்தனையும் வித்தியாசமா இருக்கு. அவ்ளோ ‘டிஸிப்ளின்ட்' ஆக இருக்காங்க. ‘இந்தியாவுலருந்து வந்திருக்கேன்'னு சொன்னா அவ்ளோ மரியாதை. கப்பல்லகூட நம் நாட்டுக் கல்வி முறை பத்தி பல நாட்டைச் சேர்ந்தவங்களும் ரொம்பப் பெருமையா சொன்னதைக் கேட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
அப்புறம் கப்பல்ல ஏத்திவிட்டுட்டாங்க. ஜப்பான்ல தொடங்கி சிங்கப்பூர் வழியா இந்தியா வந்துட்டு, அப்புறம் இலங்கைக்கு ஒரு ‘விசிட்' அடிச்சிட்டு மறுபடியும் சிங்கப்பூர் வழியாவே போய் ஜப்பான்ல இறங்குறோம். ஜனவரி 14ம் தேதி ஆரம்பிச்ச பயணம் மார்ச் 1ம் தேதிதான் முடியுது. அதுக்கு நடுவுல 34 நாள் கப்பல்லயும், 7 நாள் கப்பலுக்கு வெளிலயும் பயிற்சி. ஏழு ஃப்ளோர் இருக்குற கப்பல்ல இன்டர்நெட்டும், போனும்தான் இல்லை. மத்தபடி அந்தக் கப்பலே குட்டி தேசம்தான்!
சின்ன வயசுலருந்தே நிறைய அடிபட்டுத்தான் சார் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். ஒண்ணே ஒண்ணுதான் சார்... மனசு நல்லாருந்தா நமக்கு எல்லாமே கிடைக்கும் சார்!"
தலைநிமிர வைத்தாயடா தமிழா!
கப்பல் அனுபவம் பகிர்ந்ததால் கிடைத்தது அரசு வேலை!
இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே பங்கேற் றிருக்கும் பூனாவைச் சேர்ந்த அஜிங்கியா தேஷ்பாண்டேவிடம் பேசினோம். இவர் இந்த ஆண்டு கப்பல் சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்துள்ளார்.
"நான் 20வது எடிஷன்ல இந்தத் திட்டத்துக்கு செலக்ட் ஆனேன். அது 2008ம் வருஷம். இப்ப இந்தத் திட்டத்துக்கு செலக்ட் பண்றதுக்கு என்ன அளவுகோல்னு தெரியலை. ஆனா, அப்போ ஜப்பானிய மொழியில 'புரொஃபீஷியன்ஸி' இருக்கா அப்படினு எல்லாம் கேட்டாங்க.
பொதுவா இந்தியாவுலருந்து செலக்ட் ஆகக் கூடிய கேண்டிடேட்ஸ் பலரும் டெல்லியைச் சேர்ந்த வங்களா இருப்பாங்க. காரணம், அவங்களுக்கு இருக்குற 'எக்ஸ்போஷர்!'.
இந்தத் திட்டத்துல கலந்துக்கிட்டதுக்கு அப்புறம்தான் 'நான் எங்கே இருக்கேன்? நம் நாடு எந்த இடத்துல இருக்கு? வருங்காலத்துல நாம் எங்க இருக்கணும்?' அப்படிங்கிற பல விஷயங்களைப் பத்தி ஒரு தெளிவு கிடைச்சுது.
சுற்றுப்பயணம் முடிஞ்சவுடன் அந்தக் கப்பல் அனுபவங்களை எல்லாம் ஒரு கவெர்மென்ட் ஸ்கூல்ல படிக்கிற ஸ்டூடன்ட்ஸ்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன். அப்படிக் கிடைச்சதுதான் இந்த வேலை. இன்னிக்கு நான் ஒரு காலேஜ் புரொஃபசர்!" என்றார்.
இந்தப் பயணத்தில் கலந்துகொண்ட ஜப்பானிய மாணவர்களிடம் இந்தியா எப்படியிருக்கிறது என்று கேட்டோம். ‘ஆஹா... ஓஹோ...' என்று புகழ்ந்தவர்களைக் கொஞ்சம் தனியே அழைத்து, 'இரண்டொரு ஜப்பானிய வார்த்தை கற்றுக்கொடுங்கள்' என்று கேட்டதற்கு புன்னகைத்துக்கொண்டே இப்படிச் சொன்னார்கள்: ‘அரிகாட்டோ' சென்னை! ஜப்பானிய மொழியில் ‘அரிகாட்டோ' என்றால் ‘தேங்க் யூ'வாம்!
'யோகோஸோ' ஜப்பான்! (அப்படின்னா ‘வெல்கம்'னு அர்த்தமாம்!)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago