இளைஞர்களுக்கு என்ன சொல்கிறார் சாகா?

மேக்நாட் சாகாவின் நினைவு நாள் பிப்ரவரி 16.

அணுசக்தித் துறையில் இன்று எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எத்தனையோ முன்னேற்றங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. அந்தத் துறை சார்ந்த கொள்கையில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருக்கின்றன. அவ்வளவு ஏன்? அந்தத் துறையை எதிர்த்தே இன்று வரை மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. அந்தத் துறை மேற்கொள்கிற ரகசியத் தன்மையால் இன்று அணு விஞ்ஞானிகளுக்கு அறிவார்ந்த மக்களிடையே எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை.

ஆனால், அணுசக்தித் துறையை முற்றிலும் எதிர்ப்பவர்கள் கூட ஒரே ஒருவரை மட்டும் சிரம் தாழ்ந்து போற்றுவர். அவர் வேறு யாருமல்ல... மேக்நாட் சாகா! அணுசக்தித் துறையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்றும், அணுசக்தியை மருத்துவத் துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி அதற்காக அயராது நேருவை எதிர்த்து வந்ததுதான் அவரை மக்கள் கொண்டாடுவதற்குக் காரணம்!

அரசியல் துறையில் டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு மற்ற தலைவர்களால் ஒதுக்கப்பட்டாரோ அதேபோல அறிவியல் துறையில் டாக்டர் மேக்நாட் சாகாவை மற்ற விஞ்ஞானிகள் ஒதுக்கித் தள்ளினர். காரணம் அவர் பிறந்த சாதி!

தற்போது வங்கதேச நாடென்பது அன்று கிழக்கு வங்காளமாக இருந்தது. அங்கு 'சாகா' எனும் தாழ்ந்த சாதியில் பிறந்தார் மேக்நாத் சாகா. ஆம். அவருக்குப் பெற்றோர்கள் சூட்டிய பெயர் மேக்நாத் சாகா என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அந்தப் பெயர் தேவலோக இந்திரனின் இன்னொரு பெயர். அந்தப் பெயரை அவர் வெறுத்தார். பின் தனது பதின் பருவத்தில் ராமாயணத்தைப் படித்தார். அதில் ராவணனின் மகனாகப் பிறந்து ராம லட்சுமண சகோதரர்களை எதிர்த்த 'மேக்நாட்' என்ற கதாபாத்திரத்தால் கவரப்பட்டார். அதன் காரணமாக 'மேக்நாத்' என்றிருந்த தனது பெயரை 'மேக்நாட்' என்று மாற்றிக் கொண்டார்.

தனது பெயர் மாற்றத்திற்கு மேற்சொன்னதுதான் காரணம் என்று பொதுவாக அறியப்பட்டாலும் இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு. 'மேக்நாட்' என்ற அந்த ராமாயணக் கதாபாத்திரம் ராம லட்சுமண சகோதரர்களின் வீரத்தால் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக விபீஷணின் துரோகத்தால்தான் அது சாத்தியமானது. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், சாகா கூட 'சர்' சி.வி.ராமன், ஹோமி பாபா போன்ற இந்திய விஞ்ஞானிகளாலேயே துரோகத்துக்கு உள்ளானவர்தான்.

இப்படி பல உண்மைகளை எடுத்துரைக்கிறது தேவிகாபுரம் சிவா என்பவர் எழுதிய 'மேக்நாட் சாகா: ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை' எனும் புத்தகம். இந்தப் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

மேக்நாட் சாகா எனும் மேன்மை பொருந்திய ஆளுமையைப் பற்றி ஆங்கிலப் புத்தகங்களுக்கு நிகராக பல வரலாற்று, ஆய்வுத் தகவல்களுடன் இந்தப் புத்தகம் மிளிர்கிறது. 'இன்னும் ஒரு விஞ்ஞானியின் சுயசரிதை. அவ்வளவுதானே?' என்று சாதாரணமாகக் கடந்துவிட முடியாத ஒரு நூல் இது. காரணம் அது இளைஞர்களுக்குச் சொல்லும் சேதி. அப்படி என்ன சொல்கிறார் சாகா?

எட்டுப் பிள்ளைகள் கொண்ட தன் பெற்றோருக்கு சாகா ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு சின்ன பெட்டிக் கடை மட்டுமே வைத்திருந்தார். இதிலிருந்தே ஒருவர் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் குடும்பத்தில் எவ்வளவு வறுமை இருந்திருக்குமென்று! அவ்வளவு வறுமையிலும் சாகா ஆர்வமாகப் படித்தார். ஆனால் அவரது தந்தையோ 'படிப்பெல்லாம் வேண்டாம். கடைக்கு வந்து உதவியாக இரு' என்று பணித்தார். அந்த வேலையும் பார்த்துக் கொண்டு படிக்கவும் செய்தார்.

ஆரம்பக் கல்விக்குப் பிறகு ஒரு மருத்துவரின் உதவியால் அவரின் வீட்டு வேலைக்காரனாக இருந்துகொண்டே தனது படிப்பைத் தொடர்ந்தார். வங்கப் பிரிவினையின் போது சாகா வெள்ளையரை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவருக்கு வயது வெறும் 12. அதன் காரணமாகவே அவர் தான் படித்துக் கொண்டிருந்த பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். கல்வி உதவித் தொகையும் பறிக்கப்பட்டது.

மனம் தளர்ந்தாரா சாகா? இல்லையே! தனது அறிவால் வேறொரு பள்ளியில் அவருக்கு இடம் கிடைத்தது. கல்லூரியிலும் கல்வியில் முதன்மை வகிக்கும் மாணவராகவே இருந்தார். எனினும், அதற்காகவெல்லாம் அவருக்கொன்றும் பெரிய மரியாதை கிடைத்துவிடவில்லை. தாழ்ந்த சாதியினருக்கென்று தனி விடுதி, தனி உணவறை இருந்தது. அதை அவர் எதிர்த்தார். பேராசிரியர் பணிக்குச் சேர்ந்தார். அங்கு அவர் ஆய்வு செய்வதற்குத் தேவையான உபகரணங்கள் கூட கிடைக்கவில்லை.

அருகிலிருந்த கல்லூரிகளில் அவர்கள் வைத்திருந்த உபகரணங்களை வாங்கி வந்து ஆய்வு செய்தார். அவ்வாறு அவர் மேற்கொண்ட அயராத உழைப்புக்குப் பலனாக அவர் 'வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டை' கண்டடைந்தார். வானியலின் பல்வேறு புதிர்களை விடுவிக்க அதுதான் காரணமாக இருந்தது.

நோபல் பரிசே கிடைத்திருக்க வேண்டிய சாகாவுக்கு அதற்குப் பிறகாவது மதிப்பு கிடைத்ததா என்றால் அதுதான் இல்லை. தான் கண்டுபிடித்த 'தெரிவுசெய் கதிர்வீச்சு அழுத்த கோட்பாட்டுக்கு' கிடைத்திருக்க வேண்டிய காப்புரிமை அவருக்குக் கிடைக்காமல் போனது. ஆனால் வெளியான இந்த கோட்பாட்டுக் கட்டுரையை வைத்து மேற்கத்திய நாடுகளில் பல விஞ்ஞானிகள் மேலதிக ஆய்வுகளைச் செய்து புகழ் தேடிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, தொடர்ந்து வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து வந்ததால் இவருக்குச் சரியான நேரத்தில் கிடைத்திருக்க வேண்டிய 'லண்டல் ராயல் கழக உறுப்பினர்' அனுமதியும் கிடைக்கவில்லை.

புற ஊதாக் கதிர் தொடர்பான ஒரு ஆய்வு செய்வதற்கு ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் அறிவியல் நிதியுதவிப் பிரிவின் தலைவராக இருந்த அன்ட்ரியு மில்லிக்கனுக்குக் கடிதம் எழுதினார். அந்த கடிதம் குறித்து சி.வி.ராமனிடம் கருத்து கேட்டார். அவர் சொன்ன பதில், "சாகா ஒரு நல்ல கோட்பாடு அறிவியலாளரே தவிர ஆராய்ச்சியாளர் அல்ல". இந்த வகையில் அந்த நிதியுதவி சாகாவுக்குக் கிடைக்காமல் போனதற்கு ராமன் இப்படி ஒரு துரோகத்தைச் செய்தார்.

அதற்குப் பிறகு அணு தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள 'சைக்ளோட்ரான்' எனும் கருவியை வாங்க நிதியுதவி அளிக்கும்படி அரசுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இப்படி தன் வாழ்க்கை முழுவதும் மேக்நாட் சாகா நிராகரிப்புகளையும், துரோகங்களையும், புறந்தள்ளுதல்களையுமே சந்தித்து வந்தார்.

இன்றைக்கெல்லாம், கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் 'அது இல்லை. இது இல்லை. அது சரியில்லை. அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். எங்களை இப்படி கேவலமாக நடத்துகிறார்கள்' என்றெல்லாம் காரணம்காட்டி கடிதங்களை எழுதிவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்கள் இளைஞர்கள். இன்றைய இளைஞர்களைப் போல சாகாவும் நினைத்திருந்தால் அவர் எவ்வளவு முறை தற்கொலை செய்துகொள்ள வேண்டியிருந்திருக்கும்?

இளைஞர்களே யோசியுங்கள். மேக்நாட் சாகாவின் பக்கம் சற்று மனதைத் திருப்புங்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்