கையில நூறு ரூபாய் எடுத்துக்கிட்டு, காய்கறி வாங்கப் போறோம். “கத்திரிக்கா என்ன விலை?”
“கால் கிலோ அஞ்சு ரூவா..”
“என்னது. அஞ்சு ரூபாவா? போன வாரம்தான் மூணு ரூபாய்க்குக் குடுத்தீங்க?”
“அது போன வாரம். இது இந்த வாரம்”
"ஆனா எங்களுக்குப் போன வாரக் கூலிதானே இந்த வாரமும் வருது? ம்ம்ம்... அரை கிலோ வாங்கலாம்னு வந்தேன். சரி. கால் கிலோ குடு. போதும். வேற என்ன பண்றது?"
மேலே சொன்ன உதாரணம் நமக்கு நன்கு பரிச்சயம் ஆனதுதான். இதுல எத்தனை பொருளாதாரத் தத்துவங்கள் இருக்கின்றன தெரியுமா? 'என்னாது? பொருளாதார தத்துவமா? இதுலயா?" என்று கேட்கத் தோன்றுகிறதா? தவறில்லை. என்னதான் இருக்குன்னு பார்த்துடுவோமே...
முதல் வாக்கியம் - ‘கையில நூறு ரூபாய் எடுத்துக்கிட்டு, காய்கறி வாங்கப் போறோம்'. கையில இருக்குற நூறு ரூபாயைத்தான், ‘ரிசோர்சஸ்'னு சொல்றோம். பணம், பண்டம், ஏன் நமது உழைப்பு, திறமை இவையெல்லாமே பொருளாதாரக் கோணத்தில், ‘ரிசோர்சஸ்' அதாவது வளங்கள். அதனால்தான், மக்கள் தொகையைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், ‘மனித வளம்' என்று சொல்கிறோம்.
ஏன் அப்படி?
‘ஒவ்வொரு மனிதனும் வயிறுடன் பிறக்கிறான்'. மக்கள் தொகையில் ஓர் உயிர் கூடினாலும், ஒரு வயிறுக்குத் தேவையான கூடுதல் உணவு தேவை ஆகிறது. இது, நாணயத்தின் ஒரு பக்கம்தான். மறு பக்கத்தையும் பார்க்கிறது பொருளாதாரம்.
அந்தப் பக்கம் இது: ‘ஒவ்வொரு வயிறும், உற்பத்திக்கான இரண்டு கைகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது!' பொருளாதாரத்தின் அடிப்படைத் தத்துவங்களில் இதுவும் ஒன்று.
ஒரே ஒருவன் உழைத்து, ஒரு குடும்பத்தையே காப்பாற்றுகிறானே. தனது வயிறுக்கு உணவு ஈட்டுவதா முடியாமல் போய் விடும்? வயிறு மட்டுமே மனிதன் அன்று. கூடவே வருகிற, மூளையும், இரு கைகளும், கால்களும், உடல், மன வலிமையும்தான். இல்லையா?
அதனால்தான், மக்கள் தொகையை, மனித வளம் என்று குறிப்பிடுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
உழைப்பதற்குத் தேவையான உடலும் திறனும் கொண்ட, ஒரு புதிய உயிர் வந்து சேர்ந்து இருக்கிறது என்பதைக் கணக்கில் கொள்ளாமல், கூடுதலாக ஒரு வயிறு, நமது உணவைப் பங்கிட்டுக்கொள்ள வந்துவிட்டதே என்று கவலைப்பட்டுக்கொண்டிருப்பது அறியாமைதானே?
நம் கையில் நூறு ரூபாய் இருக்கிறது. இது அதிகமா, குறைவா? 'அது, நமது தேவையைப் பொறுத்தது' என்று சொன்னால், அது ஐம்பது சதவீதம்தான் சரி. வேறு என்ன சொல்வது?
இப்பொழுது கடைத் தெருவில், காய்கறி வாங்குவதற்கு என்று என்னிடம் மட்டுமே நூறு ரூபாய் இருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் அதிகபட்சமாக, பத்து ரூபாய் மட்டுமே செலவு செய்யவிருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள். நூறு ரூபாய் என்பது அதிகமா, குறைவா?
இதே சூழ்நிலையில், ஒவ்வொருவரும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவு செய்யத் தயாராய் இருக்கிறார்கள் என்றால்? எனது நூறு ரூபாய், மிகவும் குறைவு. அப்படித்தானே?
என் கையில் உள்ள நூறு ரூபாய் என்பது, என்னுடைய ‘வாங்குகிற சக்தி' ('பையிங் பவர்'). சந்தையைப் பொறுத்தமட்டில் ஒருவன், ஏழை அல்லது பணக்காரன் என்பதை, அவனின் வாங்குகிற சக்தியே தீர்மானிக்கிறது. இதுவும் ஒரு ‘தத்துவம்'தான்.
பல சமயங்களில், இந்த ‘சக்தி'தான், விலைவாசி ஏறவும் இறங்கவும் காரணம் ஆகிறது. ஒரு முழம் மல்லிகைக்கு, நூறு ரூபாய் தர வல்லவர்கள் சந்தையில் நிரம்பி இருந்தால், முழ மல்லிகை என்ன விலைக்கு விற்கும்?
ஐந்து ரூபாய்க்கு மேல் ‘தம்பிடி' தர மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களே கடைத் தெரு முழுக்க என்றால், அப்பொழுது முழம் மல்லிகை என்ன விலைக்குக் கிடைக்கும்?
ஆங்கிலத்தில், ‘மார்க்கெட் பிஹேவியர்' என்கிறார்களே (தமிழில், 'சந்தை நடத்தை') ஒரு வகையில் அதுதான் இது.
கடையில் விதவிதமாய், பசுமையாய், புதியதாய்ப் பல காய்கள் இருக்கலாம். எல்லாவற்றையும் வாங்கிவிட வேண்டும் என்று நமக்கு ஆசையும் இருக்கலாம். முடியுமா? ஊஹூம். நூறு ரூபாய்தான் செலவு செய்ய முடியும். அதுதான் நமது ‘வளம்'.
இந்த ‘வளம்' நமக்கு எதிலிருந்து வருகிறது? நம்முடைய வருமானத்திலிருந்து. இதற்கு உள்ளேதான் நாம் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல்? கஷ்டம்தான்.
அதனால்தான், எது நமக்கு கட்டுப்படி ஆகும் என்று பார்த்துப் பார்த்து, மனதுக்குள் கணக்குப் போட்டு, செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கு என்ன பெயர்?
அளவிட முடியாத ஆசைகளுக்கும், வரையறைக்கு உட்பட்ட வளங்களுக்கும் இடையிலான இடையறாத போராட்டமே - பொருளாதாரம்!
ஒருவேளை, அவற்றின் விலை தெரியாமலேயே, காய்களை வாங்கிவிட்டு, பிறகு கணக்கு செய்கிற போது, 110 ரூபாய் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். நம்மிடம் 10 ரூபாய் குறைவாக உள்ளது. இதனை, ‘பற்றாக்குறை' ('deficit) என்கிறோம். ஒருவேளை, 90 ரூபாய்தான் ஆயிற்று என்றால், அதுதான் ‘உபரி' ('Surplus'). உதிரி அல்ல, உபரி.
‘உபரி' பற்றிய இன்னொரு செய்தியையும் பார்த்தால்தான், இந்தப் பகுதி நிறைவடையும். ஒரு நாளிதழ் வாங்குகிறோம். ஐந்து ரூபாய் என்று கொள்வோம். இந்த விலை, நாளுக்கு நாள் மாறப் போவது இல்லை.
ஆனால், அந்த இதழின் மூலம் கிடைக்கிற ‘திருப்தி' நாளுக்கு நாள் மாறுபடும். ஆனாலும், அநேகமாக எல்லா நாட்களிலுமே, நாளிதழை வாசிப்பதால் ஏற்படும் மன நிறைவின் மதிப்பு, நாம் தருகிற ஐந்து ரூபாயைவிட, அதிகமாகத்தான் இருக்கிறது.
‘இதுக்கு நூறு ரூபா குடுக்கலாம்பா.. அவ்வளவு வொர்த்!' என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். உண்மையில் கொடுத்தது எவ்வளவு? ஐந்து ரூபாய்.
பெற்ற மன நிறைவின் மதிப்பு நூறு ரூபாய். 95 ரூபாய் அளவுக்கு, கூடுதலான மதிப்பை நாம் பெற்றதாக உணர்கிறோம்.
இந்த மதிப்பை (ரூபாய் 95) பொருளாதாரத்தில், ‘நுகர்வாளரின் உபரி' ('கன்ஸ்யூமர்ஸ் சர்ப்ளஸ்' - Consumers' Surplus) என்கிறோம். போட்டித் தேர்வுக்குச் செல்கிற இளைஞர்கள், இதை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்து, நினைவில் ஏற்றிக்கொள்ளவும்.
முன்னமே சொன்னோம். 100 ரூபாய் எடுத்துக் கொண்டு காய்கறி வாங்கச் செல்கிறோம். கையில் உள்ள நூறு ரூபாய் என்பது நம்மிடம் உள்ள ‘வளம்'. ‘காய்கறி வாங்குதல்' என்பதுதான் நமது நோக்கம். நமது விருப்பப்படி என்ன காய் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால், கடைத் தெருவில் என் கண்ணில் படுகிற ‘வேறு ஏதோ ஒன்று' என்னை ஈர்க்கிறது. அதற்கு என் பணத்தை நான் செலவு செய்தால்? அதுதான் ‘திட்டமிடப்படாத' செலவு (non-plan expenditure) என்று சொல்லப்படுகிறது. இப்படிச் செலவு செய்தல் சரியா, தவறா? எல்லாரும் ஒப்புக் கொள்வர்கள் - ‘தவறுதான்'. இது குறித்தும் பிறகு பார்ப்போம்.
சரி. இனி, அடுத்த பாடத்திற்குச் செல்வோம். ‘கத்திரிக்கா என்ன விலை?'
டிப்ஸ்:
ஆதி காலத்துல, தன்னிடம் இருக்குற பொருளைக் கொடுத்து, தன்னிடம் இல்லாத பொருளை வாங்குற வழக்கம்தான் இருந்துச்சு. இதைத்தான் நாம ‘பண்ட மாற்று முறை'ன்னு (barter system) சொல்றோம். அப்புறம் ‘இது சரியில்லை. எல்லாருக்கும் பொதுவா, ஒரே மாதிரியான மதிப்பு (value) இருக்கற மாதிரி, 'ஏதேனும் ஒண்ணு' இருந்தா நல்லது'ன்னு யோசிச்சப்போதான், ‘காசு' பொறந்துச்சு.
ஆக, சமதர்மம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில்தான், ‘பணம்' என்பதே பிறந்தது. அதுவேதான், இன்றைக்கு எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணமாக அமைந்துவிட்டது வரலாற்று முரண்!
ஆமாம். ‘ரேஷன்' கடைகள்ல விலையில்லாமல் தருகிறார்களே. அப்போ அது எப்படி ‘கடை' ஆகும்? அங்கேயும் விலை உண்டு. அதை நாம் தருவதில்லை. நமக்காக அரசாங்கம் தருகிறது. அவ்வளவுதான்.
(வளரும்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago