பொருள்தனைப் போற்று! 5 - எல்ல்ல்லாம் பணமுங்க... பணம்!

By செய்திப்பிரிவு

பொருளாதார நடவடிக்கைகளில், முதலாளிகளின் பங்கு என்ன? 'குழந்தையைக் கேட்டாக்கூட சொல்லுமே. அவர்கிட்டதானே பணம் இருக்குது? அவருதானே முதல் போடறாரு?'. மிகச் சரியான விடை. நூற்றுக்கு நூறு தரலாம்.

மக்களாட்சி அரசியலில், முக்கிய அம்சம் என்ன? ஓட்டு. ஆன்மிகத்தின் மையப் புள்ளி? கடவுள் நம்பிக்கை. இலக்கியம்? மொழி வளம். சரித்திரம்? போர். பூகோளம்? நதிகள், மலைகள். அறிவியல்? புதிய புதிய க‌ண்டுபிடிப்புகள்.

இந்த வரிசையில், பொருளாதாரத்தின் அச்சாணி எது? சந்தேகத்துக்கு இடமில்லாமல், பணம்தான்!

கண்காட்சி, திருவிழா போன்ற மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் இடங்களில் எல்லாம், ‘காசு ஈட்டுகிற' ஒரு விளையாட்டு, தவறாமல் இடம் பெறும். ஒரு வட்ட வடிவத் தட்டு. அதன் மேல் பல உருவங்கள் வரையப்பட்டிருக்கும். அந்தத் தட்டை, ஒருவர் சுழலவிடுவார். அது சுழன்று நிற்கும்போது எந்த உருவத்தை அம்புக்குறி காட்டுகிறதோ, அதன் மீது பணம் வைத்தவர் வென்றவர் ஆவார். எதற்காக இப்போது இந்த உதாரணம் என்கிறீர்களா?

பொருளாதாரம் என்கிற சக்கரத்தைச் சுழலவிட்டால், அதன் அம்புக் குறி எப்போதுமே பணம் என்கிற கட்டத்தைத்தான் காட்டும். விந்தை எதுவுமில்லை.

இந்தச் சக்கரத்தில் உள்ள எல்லாக் கட்டங்களிலும், பணம் மட்டுமே வரையப்பட்டிருக்கிறது. பணம் தவிர்த்து வேறு எதுவுமே, ஆம், எதுவுமே, பொருளாதாரத்தில், ஒரு பொருட்டே அல்ல. அதனால்தான், முதலாளிகளுக்கு முதல் மரியாதை. அவர்கள்தான் தீர்மானிக்கும் சக்திகள். முன்னரே சொன்னதுபோல, இது யதார்த்தம் சார்ந்த உண்மை. இந்த இடத்தில் நாம் வேறொரு கருத்தையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

முதலாளிகள் என்றாலே மோசமானவர்கள், சுரண்டல்காரர்கள் என்கிற ‘சினிமாத்தனமான' எண்ணம் தயவு செய்து யாருக்கும் வேண்டாம். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கும் சமுதாயச் சிந்தனை கொண்ட முதலாளிகள் நிறைய பேர் உண்டு.

பொருளாதாரப் பாடத்தைப் பொறுத்தவரை, முதலீடு என்பது, பொருளாதாரக் கட்டமைப்பில் ஓர் அடிப்படைக் கட்டுமானப் பொருள். அதைக் கொண்டு வந்து சேர்க்கிற முதலாளிகள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், பிரிக்கப்பட முடியாத அங்கங்கள்.

ஒருவர், ஏதோ ஒரு தொழில் தொடங்க முதல் போடுகிறார். அவர், ஏன் இதைச் செய்ய வேண்டும்? தான் போட்ட முதலுக்கான வட்டிக்கும் மேலாக லாபம் வரும் என்கிற எதிர்பார்ப்பு அவருக்கு இருக்கிறது. இந்த லாப நோக்கம்தான், பின்னால் இருந்து இயக்குகிற சக்தி.

‘எலேய்... நான் வேற தொழில் தெரியாமலாய்யா, இந்த ‘பிசினஸ்'ல இறங்கினேன்? இதுல முதல் போட்டா, ஒண்ணு பத்தாகும். பத்து நூறாகும். இல்லை?' இதுதான் சரியான அணுகுமுறை. இத்தகைய மனநிலையில் செயல்படுகிறவர்கள்தான், பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றனர்.

இவரது ‘வியாபாரம்' பெருகப் பெருக, மேலும் மேலும் பலருக்கு வேலை கிடைக்கிறது. இவரின் வெற்றியைப் பார்த்து, இன்னும் பலர் தொழில் தொடங்க முன்வருவர். இவ்வாறாக, சங்கிலித் தொடர் போல நல்லன நடக்கும்.

‘வந்தா வரட்டும், போனா போவட்டும். நமக்குக் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு விட்டுர வேண்டியதுதான்' என்று சொல்லிக்கொண்டு சோம்பேறிகளாய்த் திரிபவர்களால், பொருளாதாரம் சீர்குலைகிறது. சந்தையில் ஒருவித மந்த நிலை உருவாகிவிடுகிறது.

ஆக, சந்தையின் வேகமும் தொய்வும், முதலீட்டாளர்களின் வேகத்தையும் தொய்வையும் பொறுத்தே அமையும்.

ஆமாம். தொழில் தொடங்க வருகிறவர்கள், முக்கியமாக என்னென்ன அம்சங்களைப் பார்ப்பார்கள்? நல்ல சாலைகள், விரைந்த போக்குவரத்து வசதி, தரமான தண்ணீர், தாராளமான‌ இட வசதி. இவ்வளவுதானா? ஆம் என்றால், ஆப்பிரிக்க நாடுகளை ஏன், பலரும் ஆசையுடன் பார்ப்பதில்லை? மேலும் மூன்று அம்சங்கள் இருந்தாக வேண்டும்.

முதலாவது, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை இல்லாத, கலவரமற்ற அமைதியான அரசியல், சமுதாய அமைப்பு மிக முக்கியம். ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வன்முறை வெடிக்கலாம் என்கிற நிலையில் எப்படி நிம்மதியாகத் தொழில் செய்வது?

தீவிரவாதம், சாமானிய மக்களின் நலனுக்கு எதிரானது என்று ஏன் சொல்கிறோம்? அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்து என்பதனால் மட்டும் அல்ல. அது, பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும். உலகில் எந்தெந்த நாடுகளில் தீவிரவாதிகள் ஆழமாக வேரூன்றி இயங்கிக் கொண்டிருக்கிறார்களோ அங்கே எல்லாம் என்ன நிலைமை? பசியும் பஞ்சமும்தான் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன.

மக்கள் எல்லாரும் பேதங்களைத் துறந்து, சகோதர பாசத்துடன் இணைந்து வாழ்கிற சமுதாயத்தில் பொருளாதாரம் மிகவும் வலுவாக இருக்கும். தண்ணீர் நிறைந்திருக்கிற இடங்களை நாடிப் பறவைகள் வருவதைப் போல, அமைதி நிலவுகிற நாடுகளைத் தேடி, முதலீட்டாளர்கள் படை எடுக்கிறார்கள்.

இரண்டாவது, குறைந்த சம்பளத்தில், கடுமையாக உழைக்கக்கூடிய, தொழிலாளர்கள். இவர்களில், இரண்டு வகைகள் உண்டு. திறமையுடன் பணி புரிகிறவர்கள் (skilled force); திறமை தேவையற்ற, பெரும்பாலும் உடல் உழைப்பு மட்டுமே தேவைப்படுகிற வேலையைச் செய்கிறவர்கள் (un-skilled force). சில நாடுகளில் மட்டுமே, இவ்விரு வகைப் பணியாளர்களும், அபரிமிதமாக உண்டு. அப்படிப்பட்ட நாடு, ஒரு ‘சொர்க்க பூமி', வேறெந்த நாடு... இந்தியாதான்!

மூன்றாவதாக, உற்பத்தியாகிற பொருட்களை எளிதில் விற்பதற்கான, முறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான சந்தை. இந்தச் சந்தையில் எந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் புழங்குகிறார்களோ அந்த அளவுக்கு லாபம் கொழிக்கும்.

மேலே சொன்ன அத்தனை சாதகமான விஷயங்களும் ஒரே இடத்தில் அமைந்துவிட்டால்? இனிப்புக்கு ஓடி வரும் எறும்பு, ஈக்கள் போல முதலீட்டாளர்கள் வந்து மொய்த்துவிட மாட்டார்களா? போதாக் குறைக்கு, தொழில் முனைவோருக்கு, ஊக்கமும் முன்னுரிமையும் சலுகைகளும் தரப்பட்டால்?

ஏன் அயல் நாட்டு முதலீட்டாளர்கள், அதிக எண்ணிக்கையில், இந்தியாவைத் தேடி வருகிறார்கள் என்பது இப்போது புரிகிறதா?

வேலை தேடுகிற இளைஞர்கள், தொழில் சூழல் பற்றிய இந்த விவரங்களை எல்லாம் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நேர்முகத் தேர்வுக்குப் பெரிதும் பயன்படும்.

மேற்கொண்டு தொழில் முன்னேற் றத்துக்காக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் சிறப்புத் திட்டங்கள், வங்கிகளின் கடன் கொள்கைகள், தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆகியன குறித்து தொடர்ந்து செய்தித்தாள்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

சரி, தொழில் தொடங்கியாகி விட்டது. உற்பத்தி கன ஜோராக நடைபெறுகிறது. இவ்வாறு உற்பத்தியான பொருட்களை மொத்த விலைக்கு விற்றுவிடலாம். வாங்குகிறவர், அதன் பின்னர் சில்லரை வியாபாரத்துக்குப் பொருட்களைத் தள்ளிவிடுகிறார். நுகர்வோர், அவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறார்.

இது மேலோட்டமான பார்வை. சற்றே கீழிறங்கி வருவோம். அதோ ஒரு தொழிற்சாலை. அதற்குள் நுழைவோமா?

‘இருங்க... இருங்க. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்க முதல்ல. அப்புறமா, தொழிற்சாலைக்குப் போவோம்'.

‘தொழில் உற்பத்தியைப் பத்தி பேசுனீங்களே. ஏன் வேளாண் உற்பத்தியைப் பத்தி எதுவுமே சொல்லலை? நெல்லு, கோதுமை, கரும்பு, பருத்தி, நிலக்கடலை இதெல்லாம் உற்பத்தி பண்றாங்களே. நெசம்மா, தெரியாமத்தான் கேட்கறேன். விவசாயம், பொருளாதாரத்துல வராதா?'

(வளரும்)

தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்