தென்னிந்தியாவின் முதல் ‘டைமண்ட் ப்ளே பட்டன்’ அந்தஸ்தைப் பெற்றுள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் அலைவரிசை. சமையல் கலைஞரான பெரியதம்பி தலைமையில் அணி திரண்டுள்ள இளைஞர் படைதான் இந்த முத்தான சாதனையைப் படைத்திருக்கிறது.
தாத்தாவும் பேரன்களும்
இவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் ஆகிய சகோதர்களுடன் அவர்களுடைய தாத்தா பெரியதம்பியும் இணைந்து உருவானதுதான் இந்த அலைவரிசை. இவர்களில் சுப்பிரமணியன்தான் இதன் மூலகர்த்தா.
கேமராவும் தொழில்நுட்பமும் சுப்பிரமணியன் இலாக்காக்கள். எம்.ஃபில். பட்டதாரியான இவர், 2018இல் உணவு தொடர்பான வீடியோக்களை உருவாக்க நினைத்தார். அது அவருடைய சகோதர்கள் வேலைக்காக வெளிநாடு செல்லத் தீர்மானித்திருந்த காலம். அப்போது ஒரு சிறு முயற்சியாக யூடியூப் வீடியோக்களை உருவாக்கியிருக்கிறார்கள். மற்ற வீடியோக்களில் இருந்து வித்தியாசப்பட்டுத் தனித்துவமான வீடியோக்களை உருவாக்கத் தொடங்கியபோது அவர்களது வீட்டியோக்களைப் பலரும் பார்க்கத் தொடங்கினர்.
பொதுவெளி புதுமை
வீட்டுக்குள் சமையல் வீடியோக்கள் அடைபட்டுக் கிடந்தபோது இவர்கள் அதை அசாலான கிராமத்து வெளிக்கு எடுத்துவந்தனர். வயக்காட்டுப் பகுதியில் கற்களை வைத்து, அடுப்பு மூட்டிச் சமைத்தனர். இதற்காகவே பலரும் இந்த அலைவரிசையைப் பார்க்கத் தொடங்கினர். அதிலும் அரிய பொருளாகிவிட்ட அம்மியில் மசாலா அரைப்பதைப் பார்ப்பதே அலாதியானது. அய்யனார் ‘மங்கலகரமான மஞ்சள்’ என வீடியோவில் பேசத் தொடங்கும்போது பார்ப்பதற்கே சுவையாக இருக்கும். இவருக்கெனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அதுபோல் காய்கறிகள் வெட்டுவதிலும் தனித்துவம். சமையல் செய்வதற்காக இடம் தேடி அலைவது, அதற்கான பாத்திரங்கள், அடுப்பு மூட்ட கல் எனத் தங்களுடைய வருமானத்தில் நான்கில் ஒரு பங்கைச் செலவிடுகிறார்கள். எந்தச் சமையல் செய்தாலும் குறைந்தது 100 பேருக்குச் சமைக்கிறார்கள். அதனால், அதற்கும் செலவாகிறது. சாப்பாட்டை முதியோர் இல்லம், ஊரார் ஆகியோருடன் இணைந்து உண்கிறார்கள்.
ராகுலுடன் ஒரு நாள்
இவர்கள் ஐவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ 48 மணி நேரத்தில் 90 லட்சம் பார்வைகளைக் கடந்தது. மட்டுமல்லாமல் அவர்களுடைய சந்தாதரர்களின் எண்ணிக்கையும் பன் மடங்கு அதிகரித்தது. கடந்த வாரம் கரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் அளித்து, அதற்கும் பெரும் பாராட்டைப் பெற்றார்கள். இவர்களுடைய வீடியோ வெறும் சமையலை மட்டுமின்றி, சுற்றுப்புறங்களையும் ஒரு வாழ்க்கை முறையையும் பதிவுசெய்கிறது. இதன் மூலம் சுவையுடன் பார்வையாளர்களின் ஞாபகங்களும் தூண்டப்படுகின்றன. இதுவே ‘வில்லேஜ் குக்கிங்’கின் வெற்றி எனலாம்.
அதென்ன டைமண்ட் பட்டம்?
‘யூடியூப் பிளே பட்டன்’ என்பது யூடியூபர்களுக்கு வழங்கப்படும் விருது. புகழ்பெற்ற யூடியூப் அலைவரிசைகளை அங்கீகரிக்கும் வகையில் இது வழங்கப்படுகிறது. 2012-லிருந்து வழங்கப்படும் இந்த விருதுகள், யூடியூப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கிராபைட் (1-999 சந்தாதார்கள்), ஓபல் (1000-9999), வெண்கலம் (10000 - 99999), வெள்ளி (1 லட்சம்), தங்கம் (10 லட்சம்), வைரம் (1 கோடி) ஆகியவை விருதுக்கான அளவீடுகள். அந்த வகையில் ‘வில்லேஜ் குக்கிங்’ ஒரு கோடி சந்தாதார்களைப் பெற்றதால் ‘டைமண்ட்’ கிரியேட்டர் விருது பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago