யூத் லைப்ரரி: எல்லாம் ஒரு விளம்பரம்!

By ந.வினோத் குமார்

‘உங்களுக்குப் பியுஷ் பாண்டேவைத் தெரியுமா?', என்று கேட்டால் நம்மில் பலர் தலையை இட வலப்பக்கமாக ஆட்டுவோம். சரி. '90-களில் தூர்தர்ஷனில் அவ்வப்போது ஒளிபரப்பான‌ ‘மிலே சுர் மேரா தும்ஹாரா' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா' என்றால், தலையை மேலும் கீழும் ஆட்டுவோம். இந்தியாவில் உள்ள மொழிகளைப் போற்றும் விதமாக உருவான அந்தப் பாடலை எழுதியவர்தான் இந்த பியுஷ் பாண்டே!

90-களில் பிறந்து வளர்ந்தவர்கள் 'டெய்ரி மில்க்' சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டு கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்து ஒரு பெண் ஆட்டம் போடும் விளம்பரத்தை அனைவரும் சிலாகித்திருப்போம். அதேபோல ராஜஸ்தானில் ஒரே ஒரு வண்டியில் ஊரே செல்ல, அந்த வண்டியின் பின்புறத்தில் 'ஃபெவிகால்' போர்ட் தொங்கும் விளம்பரம், தங்கள் கல்லூரியிலிருந்து பிரியாவிடை பெறும் பேராசிரியருக்கு, அவரின் மாணவர்கள் கடிகாரம் ஒன்றைப் பரிசளிக்கும் 'டைட்டன்' விளம்பரம் எனப் பல விளம்பரங்களை சேனல் மாற்றாமல் நாம் பார்த்து ரசித்திருப்போம் இல்லையா..?

அந்த விளம்பரங்களின் கர்த்தா பியுஷ் பாண்டே. விளம்பர உலகத்துக்கு ‘ஆகில்வி அண்ட் மேதர்' நிறுவனம் ஒரு அடையாளமென்றால், அந்த நிறுவனத்துக்கே அடையாளமாக விளங்கிவருபவர் பியுஷ் பாண்டே. தற்போது அந்த நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைவராக இருக்கிறார்.

கேட்பரிஸ், ஃபெவிகால், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன், வோடஃபோன் (அந்த நாய்க்குட்டி, ஸுஸு விளம்பரங்கள்) உள்ளிட்ட‌ பல 'படா படா' நிறுவனங்களுக்கு 'பளீர், ஜிலீர்' விளம்பரங்களை உருவாக்கிக் கொடுத்தவர், தனது விளம்பரங்களுக்காக சர்வதேச அளவில் 800-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர், விளம்பரங்களில் 'க்ளே அனிமேஷன்' என்ற உத்தியை இந்தியாவில் முதன்முதலில் பயன்படுத்தியவர், இந்திய தபால் துறைக்கான 'சைனேஜ்' (மஞ்சள் நிறத்தில் 'டிக்' வடிவத்தில் உள்ள சின்னம்) உருவாக்கியவர் எனப் பல பெருமைகளுக்கு உரியவர் பியுஷ்.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரத் துறையில் தான் பெற்ற அனுபவங்களைத் திரட்டி, 'பாண்டேமோனியம்' என்ற தலைப்பில் சமீபத்தில் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை பென்குவின் பதிப்பகக் குழுமம் வெளியிட்டுள்ளது.

அவரின் அனுபவங்களிலிருந்து, விளம்பரத் துறையில் ஈடுபட ஆர்வமுள்ள இளைஞ‌ர்களுக்கு மட்டுமல்லாது, பொதுவாகவே நமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கான வெற்றிச் சூத்திரங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.

# நாம் ஒரு துறையில் வெற்றி பெற, நம்மைச் சுற்றி விதவிதமான திறன்களைக் கொண்ட மனிதர்களை இணைத்து நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

# வாடிக்கையாளரின் திருப்திதான் அவரை நம்மிடம் திரும்பத் திரும்பக் கொண்டுவந்து சேர்க்கும்.

# உங்களுக்குள் இருக்கும் குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள். அவனோ, அவளோதான் ஜீனியஸ். நீங்கள் அல்ல!

# வெளிநாட்டு விளம்பர நிறுவனங்கள் நுகர்வோரின் மனநிலையைத் தொந்தரவு செய்யும் விதமாக விளம்பரங்களை அமைத்து, அதன் மூலம் பொருட்களையோ சேவைகளையோ வாங்க‌ச் செய்யும். ஆனால், இந்திய விளம்பர நிறுவனங்களோ, நுகர்வோர் மனம் விரும்பும்படியான விளம்பரங்களைச் செய்கின்றன.

# விருதுகளைக் குறி வைத்தே வேலை செய்வது நம்மை நாமே தோற்கடித்துக்கொள்வதற்கு ஒப்பாகும். விருதுகளைத் துரத்தாதீர்கள். நல்ல பணிகளைத் தேடுங்கள்.

இப்படி ஏகப்பட்ட அனுபவத் தெறிப்புகள். தான் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்துகொள்ளும் முறை அவரின் விளம்பரங்களைப் போலவே மிகவும் எளிமையானதாகவும், மனதைத் தொடும் விதமாகவும் அமைந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் 'பேண்டிமோனியம்' (pandemonium) என்ற சொல்லுக்கு 'அமளி' என்று அர்த்தம் காட்டுகின்றன அகராதிகள். ‘பாண்டேமோனியம்' (Pandeymonium) எனும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, பலரின் மனதில் ஆனந்த அமளியை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்