ஒளியில் தெரிந்த இருள் நொடிகள்: வெள்ளத்தினூடே கேமராவின் பயணம்

“இன்னமும்கூட போட், ஹெலிகாப்டர், மக்கள் தண்ணிக்குள்ள நிக்கிறது, தண்ணி-சாப்பாடு கேட்டு கெஞ்சுறது எல்லாம்தான் என் தலைக்குள்ள சுத்திக்கிட்டே இருக்கு. அடுத்த நாள் காலைல எந்தப் பேப்பர்ல எந்தப் படம் வரும்னு தெரியாது. ஆனா நம்ம படம் வந்தா, சின்னதா ஒரு சந்தோஷம் எட்டிப் பார்க்கும். என்னுடைய வாழ்நாள்ல இதுக்கு முன்னாடி இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்தது இல்லை. இதுக்கு முன்னாடி நான் பார்த்த மிகப் பெரிய பேரழிவு சுனாமிதான்.”

வெள்ளத்தில் சிக்கி இறப்பின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நபர், விடாத பெருமழைக்கு இடையே உயிர் தப்பும் பச்சிளங்குழந்தைகள், உடைமைகளை இழந்து தெருவே வீடாக மாறிவிட்ட குழந்தைகள் - பெண்கள் - முதியவர்கள், மனிதர்களை விசுவாசமாகத் தொடரும் நாய்கள், வெள்ளத்தில் சிக்கி திக்குத் தெரியாமல் போன மான்கள், மகனை இழந்து கதறும் தாய்… சென்னையைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளம் தொடர்பான அவருடைய ஒவ்வொரு படத்தையும் புதிதாகப் பார்க்கும்போது, புதிய கதைகளை மௌனமாகச் சொல்கின்றன.

சில நம்மை துயருற வைக்கின்றன, சில அதிர்ச்சியடையச் செய்கின்றன, சில வருந்தச் செய்கின்றன. அத்துடன் நின்றுவிடவில்லை. இன்னும் சில உதட்டோர புன்னகையை வரவழைக்கின்றன, நம்பிக்கையும் உத்வேகமும் ஊட்டுகின்றன.

அழுத்தமான சித்திரம்

சென்னை பெருவெள்ளம் பற்றி அழுத்தமானதொரு சித்திரத்தை ஏற்கெனவே நம் மனதில் பதித்துவிட்ட இந்தப் படங்களை எடுத்தவரின் முகம் நமக்குத் தெரியாது. அழிவின் தீவிரத்தை உறைய வைத்த இந்த ஒளிப்படங்களை எடுத்தவர் ஆர். செந்தில்குமார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை பிரிவுக்கான முதல் அதிகாரப்பூர்வ ஒளிப்படக் கலைஞர். டிசம்பர் முதல் வாரத்தில் பல்வேறு நாளிதழ்களின் முதல் பக்கப் படங்கள், பத்திரிகைகளின் அட்டைப்படங்கள், தேசிய, சர்வதேசிய நாளிதழ்களில் வெளியான சென்னை பெருவெள்ளப் படங்களில் பலவும் இவருடையவையே.

அன்றைக்கு பெருவெள்ளத்தால் சென்னையே முடங்கிக் கிடந்தது. மின்சாரம், அலைபேசித் தொடர்பு, இணையத் தொடர்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால், மற்றொன்று இல்லாத நிலை. ஒவ்வொரு பகுதிக்கும் சென்றவர்கள், அடுத்த இடத்துக்குப் போக முடியாமல் அந்தந்த இடத்திலேயே சிக்கிக் கொண்டார்கள்.

ஆனால், வெள்ளம் ஆக்ரோஷத்தைக் காட்டிய பல இடங்களுக்கு அவருடைய கேமரா பயணித்தது. உயிர் தப்பவே பலரும் திண்டாடிக் கொண்டிருந்த நிலையில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதற்கு அவர் எப்படிக் கஷ்டப்பட்டிருப்பார் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அந்த இடங்களுக்கு பாதுகாப்பாகச் செல்வது ஒரு சவால் என்றால், தன் ஒளிப்படக் கருவிகளையும் குழந்தைகளைப்போல பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் மற்றொரு சவால்.

எல்லாமே வேலைதான்

“வெள்ளம் வந்த முதல் ரெண்டு நாள் ஓடிக்கிட்டேதான் இருந்தேன். படம் எடுக்கிறது, அனுப்புறதைத் தாண்டி அப்போ எதுவுமே மூளைக்குள்ள போகல. ஓய்வு ஒழிச்சலே இல்லாம வேலை பார்க்கும்போது உடம்புக்கு எதுவும் தெரியாது. சும்மா உட்கார்ந்துட்டாதான் என்னவோ போலிருக்கும். நம்ம வேலை அப்படிப்பட்டது.

இந்த வெள்ளத்துல எத்தனையோ மக்கள், எவ்வளவோ மோசமா கஷ்டப்பட்டுட்டாங்க. வாய்ப்பு கிடைச்ச சிலதை மட்டும்தான் படமா எடுத்திருக்கேன். இப்போ வெள்ளம் வடிஞ்சிடுச்சு. இன்னும் பல இடங்களை மிஸ் பண்ணிட்டோமே, இன்னும் நிறைய நல்ல ஷாட்ஸ் எடுத்திருக்கலாமேன்னுதான் தோணுது. எவ்வளவு படம் எடுத்தாலும், நம்ம மனசு திருப்தியே அடையாது” ஆர்ப்பாட்டமில்லாத வார்த்தைகளுடன் அமைதியாகப் பேசுகிறார் செந்தில்குமார்.

பேரழிவின் சாட்சிகளாக விளங்கும் இந்தப் படங்கள் காலாகாலத்துக்கும் பல சேதிகளை கடத்தும், மனித மனங்களில் உணர்ச்சிகளைப் பாய்ச்சிக் கொண்டுதான் இருக்கும்.

பிரெட்டால் பிழைத்த பாட்டியும் தப்பிய பச்சைக் குழந்தைகளும்

ஒளிப்படங்களுக்காக சென்னையின் வெள்ளக்காட்டில் நீந்திப்போன நேரத்தில் பல நெகிழ்ச்சியான அனுபவங்கள் செந்தில்குமாருக்குக் கிடைத்துள்ளன:

l தாம்பரம் பகுதியில் ஒரு பாட்டி சொன்ன வார்த்தை இது: “சாவோட விளிம்புக்குப் போய்ட்டேன் கண்ணுகளா. மூணு நாளைக்கு மழை தண்ணிய குடிச்சுத்தான் நாளைக் கடத்துனேன். ஹெலிகாப்டர்ல போட்ட பிரெட்டை சாப்பிட்டதுக்குப் பின்னாடிதான், தள்ளாடுன உயிருக்கு தெம்பு கிடைச்சுது”.

l தாம்பரம் அரசு மருத்துவமனைலேர்ந்து அடாத மழைல பச்சைக் குழந்தைங்க, சிசேரியன் ஆன தாய்மார்கள் எல்லாம் தண்ணில நடந்து வந்து சாரிசாரியா வெளியேறினதைப் பார்த்தப்ப மனசுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு.

l போகுமிடமெல்லாம் மக்கள் உயிர் தப்பிக்கிறதுக்காக தவிச்சதை பார்க்க முடிஞ்சது. ‘நாங்க எப்படியாவது புழைச்சுக்குவோம். எங்க குழந்தைகளையாவது உடனே காப்பாத்துங்க’ன்னு பல அப்பா, அம்மாக்கள் கதறுனாங்க. பலரும் தங்களோட குழந்தைகளைப்போலவே பாவிக்கும் நாய், பூனை, கிளி, ஆடு போன்ற செல்லப் பிராணிகளையும் வளர்ப்புப் பிராணிகளையும் கைவிட மனசில்லாம, காப்பாத்த வந்த படகுல ஏத்திக்கங்கன்னு கெஞ்சினாங்க.

l சென்னை மக்களைப்போல வேற யாரும் எங்களை நல்லா கவனிச்சுக்கிட்டதில்லைன்னு போற எடமெல்லாம் ராணுவ வீரர்கள் பாராட்டுனாங்க. ராணுவ வீரர்களும் பேரிடர் மீட்புப் படையினரும் தெளிவான திட்டத்துடன், ரொம்ப ஸ்டிரிக்ட்டா செயல்படுவாங்கங்கிறது நமக்குத் தெரியும். அதேநேரம் நாய்க்கு பிஸ்கட் கொடுக்கிறது, பயந்துபோன குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுறதுன்னு நல்ல மனுஷங்களாகவும் இருந்ததை நேர்ல பார்த்தேன்.

வெள்ளத்துக்கு முன்; வெள்ளத்துக்குப் பின்

“கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதிக்கு வெள்ளத்துக்கு முந்தைய நாள் (டிசம்பர் 1, செவ்வாய்க்கிழமை) சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் போயிருந்தேன். அப்போது கணுக்கால்வரைதான் தண்ணீர் இருந்துச்சு. எந்தப் பிரச்சினையும் இல்ல, எல்லாம் இயல்பா இருந்துச்சு. அடுத்த நாள் டிசம்பர் 2-ம் தேதி, அதே இடம். என் கண் முன்னாலேயே அங்குலம் அங்குலமாகத் தண்ணி ஏறிட்டு இருந்துச்சு. காய்ஞ்சிருந்த தரைல நான் நிறுத்தியிருந்த பைக்கை, மூழ்கடிக்கும் அளவு தண்ணி கொஞ்ச நேரத்திலேயே ஏறிடுச்சு.

குடியிருப்போட தரைத்தளம் மூழ்கிப்போய் முதல் மாடியைத் தொட்டு, சுழிச்சு ஓடிக்கிட்டிருந்துச்சு வெள்ளம். ரோட்ல நின்ன ஆட்டோ, கார்கள் எல்லாம் முழுசா தண்ணில மூழ்கிக் கிடந்தன. இக்கட்டான அந்த நேரத்துல கோட்டூர்புரத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு செஞ்சேன்.

மழை கொஞ்சம்கூட ஓயலை. படம் எடுத்தாச்சு. ஆனால் எப்படி படத்தை அனுப்புறது? ஆபிசுக்குப் போறது? என் வண்டியை ஸ்டார்ட் பண்ண முடியாது. கோட்டூர்புரத்துல புறப்பட்டு தேனாம்பேட்டை சிக்னல் வரைக்கும் நடந்தே வந்தேன். அங்கே தம்பியை வரச் சொல்லியிருந்தேன்.

ஆனா, அங்கே போனா செல்போன் சிக்னல் கிடைக்கலை. பாண்டி பஜார் முழுக்க மார்பளவு தண்ணி. எதைப் பத்தியும் யோசிக்கலை. வெள்ளத்தைக் கடந்து கோடம்பாக்கம்வரை நடந்தே ஆபிசுக்கு போய் சேர்ந்தேன். படங்களை அனுப்பின பின்னாடிதான் அன்னைக்கு சாப்பிட முடிஞ்சது. இரண்டு நாள் கழிச்சுதான் வண்டியை எடுத்தேன்.” என்கிறார் செந்தில்குமார்.

வெள்ளத்துக்கு முன்: கோட்டூர்புரம் அரசு குடியிருப்பில் வெள்ளத்துக்கு முந்தைய நாள் டிசம்பர் 1-ம் தேதி மாலையில் வெள்ளத்தின் சுவடு எதுவுமில்லாத, இயல்பான மழை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்