இளமை .நெட்: நேசக்கரம் நீட்டிய சமூக ஊடகங்கள்

By சைபர் சிம்மன்

வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்து, மெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பாதிப்பு தீவிரம் என்றாலும் தலைநகர் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இப்படி மழை வெள்ளம் தங்கள் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மழையின் கோரத் தாண்டவம் நம்முடைய உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமையையும், தயாரிப்பு இல்லாத நிலையையும் அம்பலமாக்கியது என்றால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சமூக ஊடகங்களின் உதவியோடு நெட்டிசன்கள் களத்தில் இறங்கிக் கைகொடுத்த விதம் மனிதாபிமானத்தின் எழுச்சியை உணர்த்தி நெகிழ வைத்தது.

மழை நீர் உள்ளே புகுந்த குடியிருப்புகளில் உதவிக்கு வந்தது படகுகள் மட்டும் அல்ல. சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகுகளும்தான். இடையே மழை உச்சத்தைத் தொட்டபோது இணைய இணைப்பு மற்றும் செல்போன் இணைப்புகள் சிக்கலுக்கு இலக்காகித் தகவல் தொடர்பே சோதனைக்கு உள்ளானாலும், மற்ற நேரங்களில் ட்விட்டர் குறும்பதிவுகளும், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகளும் பெருமளவு உதவியாக இருந்தன.

இயற்கைச் சீற்றங்களுக்கு நடுவே மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதில் சமூக ஊடகங்கள் உடனுக்குடன் உதவிக்கு வருவதே இணைய யுகத்தின் வழக்கமாக இருக்கிறது. பிலிப்பைன்ஸில் ஹயான் சூறாவளியின் போதும், நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்திலும் சமூக ஊடகங்கள் பயன்பட்ட விதம் பற்றி நெகிழ்ச்சியான கதைகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவிலேயேகூட கடந்த ஆண்டு காஷ்மீரில் வெள்ளம் சூழந்தபோது சமூக ஊடகங்கள் பேருதவியாக அமைந்தன.

இப்போது சென்னை நெட்டிசன்களும், மழை வெள்ளத்துக்கு நடுவே இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நேசக்கரம் நீட்டி இந்த வரிசையில் இணைந்துள்ளனர்.

புயல் மழையின்போதும், பேரிடர் காலங்களின் போதும் முதலில் தேவைப்படுவது தகவல்கள்தான். பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி விவரங்கள் தெரிய வேண்டும். சிக்கித் தவிப்பவர்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். உதவி கோருபவர்களின் நிலையும் மீட்புக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இன்னும் பல முக்கியத் தகவல்கள் பகிரப்பட வேண்டும்.

இவற்றுக்கு அரசு அமைப்புகளை மட்டும் சார்ந்திருக்க முடியாது. இங்குதான் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமாகிறது. சென்னையில் பல நெட்டிசன்கள் இப்படி தன்னார்வலர்களாக மாறினர்.

நெட்டிசன்களின் பங்களிப்பு இரண்டு கட்டங்களாக அமைந்திருந்ததைப் பார்க்கலாம். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்க்க ஆரம்பித்தபோது பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த பாதிப்புக்கு நடுவே '#சென்னைரெய்ன்ஸ்' ஹாஷ்டேக் எட்டிப்பார்த்தது. ட்விட்டரில் மழையின் நிலை பற்றி உணர்ந்த இந்த ஹாஷ்டேக் அடையாளத்துடன் வெளியான குறும்பதிவுகள் எந்தெந்தப் பகுதிகளில் மழையின் தீவிரம் எப்படி என உணர்த்தின.

நகரின் எந்த இடங்களில் வெள்ளப் பெருக்கு அதிகம், எந்தச் சாலைகள் வழியே செல்லலாம் என்பது போன்ற தகவல்கள் பகிரப்பட்டு வழிகாட்டியாக அமைந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான கோரிக்கைகளும் வெளியாயின. வானிலைப் பதிவர்களும் சுற்றிச் சுழன்று செயல்பட்டு மழை பற்றிய கணிப்புகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

ஃபேஸ்புக்கில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவ‌தற்கான பக்கங்களும் அமைக்கப்பட்டு உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. வாட்ஸ் அப்பிலும் உதவிக்கான கோரிக்கைகள் உலா வந்தன. இடையே வதந்திகளும் உலா வந்தன.

டிசம்பர் மாதத் தொட‌க்கத்தில் சென்னை மீண்டும் ஒரு பெருமழையை எதிர்கொண்டு நிலைகுலைந்தபோது சமூக ஊடகப் பங்களிப்பு விஸ்வரூபம் எடுத்தது. முழங்கால் அளவு தண்ணீருக்கும், தாழ்வான இடங்களில் இடுப்பளவு தண்ணீருக்கும் பழகியிருந்த சென்னை நகரம் பல இடங்களில் கழுத்தளவு நீர் உள்ளே புகுந்த நிலை கண்டு திடுக்கிட்டது.

முடிச்சூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களில் கீழ் தளம் முழுவதையும் வெள்ளம் சூழந்துகொண்டது. சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்த நிலையில் தன்னார்வலர்களாகக் களத்தில் இறங்குவதற்கு முன்னர் நெட்டிசன்கள் சமூக ஊடகங்கள் வழியே நேசக்கரம் நீட்டினர்.

#சென்னைஃப்ளட்ஸ், #சென்னைரெயின்ஸ், #சென்னைரெஸ்கியூ, #சென்னை ரெயின்ஸ்ஹெல்ப் உள்ளிட்ட ஹாஷ்டேகுகளுடன் பகிரப்பட்ட குறும்பதிவுகள் உணவு, உடை, உறைவிடம் என எல்லாவற்றையும் அளித்தன. ராணுவம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் எந்தக் குடியிருப்புகளில் உதவிக்குக் காத்திருக்கின்றனர் என்ற தகவலைக் குறும்பதிவுகளாக வெளியிட்டு வழிகாட்டினர்.

ஈக்காட்டுத்தாங்கலில் குறிப்பிட்ட தெருவில் இரண்டாவது தளத்தில் வயதான தம்பதி மீட்கப்படக் காத்திருக்கின்றனர் என்பது போன்ற தகவல்கள் ஆபத்தில் இருந்தவர்களை மீட்க உதவின.

இதனிடையே உதவிக்காக மற்றும் தகவல்களுக்காகத் தொடர்புகொள்ள வேண்டிய முக்கியத் தொலைபேசி எண்களையும் திரட்டிப் பகிர்ந்துகொண்டனர். உதவி தேவைப்படுபவர்கள் மற்றும் உதவத் தயாராக இருப்பவர்களையும் இணைக்கும் தகவல் பக்கம் கூகுள் டாக்குமண்ட் மூலம் உருவாக்கப்பட்டுப் பகிரப்பட்டது.

சென்னையில் வெள்ள பாதிப்பின் நிலையை உணர்த்தக்கூடிய வரைபடப் பக்கமும் ( >http://osm-in.github.io/flood-map/chennai.html#11/13.0000/80.2000) உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பங்களிப்பு கோரப்பட்டது. >https://twitter.com/AidOffered பக்கம் உதவி மற்றும் நிவாரணம் பற்றிய சரி பார்க்கப்பட்ட தகவல்களை வழங்கியது. >http://klipher.com/savechennai/ பக்கமும் இதே போன்ற தகவல்களை அளித்தது. மருத்துவ உதவி பற்றிய தகவல்களும் பகிரப்பட்டன.

இதனிடையே பல நல்ல இதயங்கள், வெள்ளத்தில் வீடுகளையும் உடமைகளையும் இழந்தவர்களுக்குத் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்துவிடுவதாகவும் அறிவித்தனர்.

பல நெட்டிசன்கள் களத்திலும் இறங்கி உதவி செய்தனர். நடிகர் சித்தார்த் போன்ற பிரபலங்களும் நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்ட, உதவிகள் பற்றிய தகவல்கள் #சென்னைமைக்ரோ எனும் ஹாஷ்டேக் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டன. என்னிடம் பால் பாக்கெட்டுகள் இருக்கின்றன, தருகிறேன். 250 பேருக்கு உணவு தரத் தயார், என்பது போன்ற தகவல்களும் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் குவிந்தன.

தலைநகர் சென்னைக்கு நிகராக பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டத்திலும் கவனம் தேவை எனக் குரல் கொடுக்கப்பட்டு தன்னார்வலர்கள் அங்கும் விரைந்தனர். நிவாரணப் பொருட்களும், உதவியும் எங்கு அதிகம் தேவைப்படுகின்றன என்ற விவரங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த உதவிகள் தொடர்கின்றன.

சென்னை நகரம் பெரும் நெருக்கடிக்கு இலக்கான நிலையில், மனிதநேயத்தின் எழுச்சிக்கு அடையாளமாக இவை விளங்குவதோடு சோதனையான நிலையில் சமூக ஊடகம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கான நெகிழ்ச்சியான வெளிப்பாடாகவும் அமைகிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

23 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்