உலகத்தை மாற்ற நினைக்கும் அற்புதமான மனிதர்களின் செயல்களால்தான் உலகம் நல்ல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்து இன்று நேபாளத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறி, சி.என்.என். 2015ம் ஆண்டுக்கான ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார், மியாகி டோயென் எனும் 27 வயது பெண்.
வகுப்பறைக்கு வெளியே கல்வி
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் பிறந்து, வளர்ந்தவர் மியாகி. "பள்ளிப் படிப்பு முடித்தவுடன், பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும். வகுப்பறைக்கு வெளியே கற்றுக்கொள்ளவும், உலகத்தைப் புரிந்துகொள்ளவும் விரும்பினேன். அதனால் படிப்புக்கு ஒரு பிரேக் எடுத்துக்கொண்டேன்.
இந்தியாவில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் ஒன்றில் பணியாற்ற நினைத்தேன். நீண்ட தொலைவு என்பதால் வீட்டில் கொஞ்சம் தயங்கினார்கள். எல்லோரையும் சமாதானம் செய்து, இந்தியா வந்து சேர்ந்தேன். அங்கேதான் 13 ஆண்டுகளாக இமயமலை அடிவாரத்தில் இருக்கும் பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் அகதிகளாக வந்துகொண்டிருந்ததைக் கண்டேன்.
நேபாளத்தில் இருந்து 6, 7 வயதுகளில் வந்து சேர்ந்த குழந்தைகள் மீண்டும் தங்கள் நாட்டுக்குச் செல்லவில்லை என்பதை அறிந்தேன். உடனே நேபாளம் கிளம்பினேன். அந்த நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, குழந்தைகளின் நிலையை அறிந்தேன். உள்நாட்டுப் போரின் விளைவாக 10 லட்சம் ஆதரவற்றவர்கள் இருப்பதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்" என்கிறார்.
குழந்தைக் காப்பாளர்
படிக்கும் காலத்திலேயே குழந்தைக் காப்பாளர் போன்ற வேலைகளைச் செய்து, பணம் சேமித்து வைத்திருந்தார் மியாகி. அவரது பெற்றோர்களிடம் அனைத்து சேமிப்புகளையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். சுமார் 3 லட்சம் ரூபாய் வந்து சேர்ந்தது. உடனடியாக பள்ளி ஆரம்பிப்பதற்கான நிலத்தை வாங்கினார் மியாகி.
40 குழந்தைகளுடன் ஓர் இல்லமும் 50 குழந்தைகளுடன் ஒரு பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டன. புதிய இடம், புதிய மக்கள், அனுபவமின்மை, சிறிய வயது என்பதால் சவால்கள் வந்துகொண்டே இருந்தன. எல்லா பிரச்சினைகளுக்கும் அவரிடம் தீர்வுகள் இருக்கவில்லை. அடுத்தவர்களிடம் உதவி கேட்பதற்குத் தயக்கம். விரைவிலேயே அவருக்கு உதவக்கூடிய வழிகாட்டிகளும் ஆலோசகர்களும் கிடைத்தனர்.
ஆங்கிலம் தந்த நெருக்கம்
10 ஆண்டுகளில் மியாகியின் 'ப்ளிங்க்நவ்' அறக்கட்டளை வேகமாக வளர்ந்து விட்டது. பள்ளிக்கும் இல்லத்துக்கும் தேவையான நிதியை அமெரிக்காவில் திரட்டுகிறார் மியாகி. இன்று குழந்தைகள் இல்லத்தில் 51 குழந்தைகள் வசிக்கிறார்கள். இவர்களுக்கான இல்லம் பல மாடிகளைக் கொண்ட, வசதியான கட்டிடமாக மாறியிருக்கிறது. கோபிலா பள்ளத்தாக்குப் பள்ளியில் 230 குழந்தைகள் படித்து வருகிறார்கள். 14 முழு நேர ஆசிரியர்கள் இங்கே பணியாற்றுகிறார்கள்.
"ஆதரவற்றவர்களுக்கான இல்லம் என்ற பெயரையும் அது இயங்கும் விதத்தையும் நான் வெறுக்கிறேன். எங்கள் இல்லம் குழந்தைகளின் சொந்த வீடு போலவே இருக்கிறது. எங்கள் சொந்த பிள்ளைகள் போலவே அவர்களை நடத்துகிறோம். இங்குள்ள குழந்தைகள் மிகவும் சிறிய வயதில் வந்தவர்கள். அவர்களுக்குக் கடந்த காலம் நினைவே இல்லை.
எல்லோரும் என்னை அம்மா என்றுதான் அழைக்கிறார்கள். என் அம்மா, அப்பாவை தாத்தா, பாட்டி என்று கூப்பிடுகிறார்கள். இவ்வளவு பெரிய அன்பைக் காட்டுவதற்கு நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஆரம்பத்தில் எனக்கு நேபாளி தெரியாது. பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் எனக்குமான உறவு இப்போது நெருக்கமாகிவிட்டது" என்று மகிழ்கிறார் மியாகி.
காத்திருக்காதீர்கள்!
ஆரம்பத்தில் மியாகியின் பெற்றோருக்கு அவர் மேற்படிப்புப் படிக்காததிலும் நேபாளத்தில் தங்குவதிலும் விருப்பம் இல்லை. ஆனால் இன்று மியாகியைப் புரிந்துகொண்டார்கள். மகளைக் காணவேண்டும் என்றால் நேபாளம் வந்துவிடுகிறார்கள்.
உலகின் பல்வேறு அமைப்புகளிடமிருந்து விருதுகளைப் பெற்றிருக்கிறார் மியாகி. இவரைப் பார்த்து, சமூகத்துக்கு ஏதாவது பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று ஏராளமானவர்கள் உத்வேகம் கொள்கிறார்கள். இந்த ஆண்டு சி.என்.என். ஹீரோக்களில் ஒருவராக மியாகி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
நேபாளத்தில் மேலும் சில பள்ளிகளை உருவாக்க இருக்கும் இவர், "இந்த வாழ்க்கை கடினமானதுதான். அதற்காக ஒருநாளும் இதை விட்டு விலகிச் செல்ல நினைத்ததில்லை. இங்கேதான் என் குழந்தைகள் இருக்கிறார்கள். இங்கேதான் என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கின்றன. நான் குழந்தைகளுக்குச் செய்ததை விட அவர்கள்தான் எனக்கு அதிகம் செய்திருக்கிறார்கள்.
இளம் தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்பும் ஒரு செய்தி இதுதான். நீங்கள் உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் ஒரு நிமிடம் கூடக் காத்திருக்காதீர்கள். உங்கள் படிப்புக்காகவோ, பணத்துக்காகவோ காத்திருக்காதீர்கள். நான் அப்படிக் காத்திருந்தால் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கை இத்தனை நேர்த்தியாக மாறியிருக்காது. நன்றே செய்யுங்கள். அதை இன்றே செய்யுங்கள்!" என்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago