இணையம் கொண்டாடும் ஓவியர்!

By சைபர் சிம்மன்

பாப் ராஸ் (Bob Ross) என்பவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இதுவரை அறியாமல் இருந்தாலும் நாம் அறிமுகம் செய்துகொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ். ‘அமெரிக்க ஓவியர், ஒவியப் பயிற்சியாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்' என்கிறது இவருக்கான விக்கிபீடியா அறிமுகப் பக்கம்.

கூடுதல் விவரம் வேண்டும் என்றால் இவரது ‘ஜாய் ஆஃப் பெயிண்டிங்' தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் கூறலாம். பி.பி.எஸ். தொலைக்காட்சியில் 1980களில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிதான் பாப் ராஸை மிகவும் பிரபலமாக்கியது. எல்லோருக்கும் நெருக்கமான‌து. அந்தக் கால அமெரிக்கர்களுக்கு நிச்சயம் பாப் ராஸின் மகிமை தெரிந்திருக்கும். அவரது பெயரை கேட்டவுடனே, 'ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்து வாழ்க்கை பற்றிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்த மனிதர் அல்லவா' என்று அவரைப்பற்றி நினைவுகூரக்கூடும்.

எல்லாம் சரி, பாப் ராஸை இப்போது ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? அதிலும் அவரைப் பிரபலமாக்கிய தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இப்போது என்ன அவசியம் என்று கேட்கலாம்.

இணைய யுகத்திலும் அவரது ஆளுமை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது என்பதே இதற்குக் காரணம்.

ராஸ் வழங்கிய ‘ஜாய் ஆஃப் பெயிண்டிங்' தொலைக்காட்சி நிகழ்ச்சி கடைசியாக 1994-ம் ஆண்டு ஒளிபரப்பான நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சித்தொடர் இணையத்தில் மறுஒளிபரப்பாகி ஹிட்டாகியிருக்கிறது. அதுவும் எப்படித் தெரியுமா? நேரடி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகி லட்சக்கணக்கானோரைக் கவர்ந்திருக்கிறது.

‘அப்படியா' என்று நீங்கள் ஆச்சர்யமடைந்தால் டிவிட்ச்.டிவி (www.twitch.tv) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த இணைய சேவையில்தான் ராஸ் மறு அவதாரம் எடுத்திருக்கிறார்.

டிவிட்ச் உண்மையிலேயே சுவாரஸ்யமான இணைய சேவை. முதல் முறையாக கேள்விப்படும்போது நம்ப முடியாத, வியப்பில் ஆழ்த்தக்கூடிய சேவை. டிவிட்ச் வீடியோ கேம்களுக்கான பிரத்யேக இணைய ஒளிபரப்புச் சேவை. அதாவது இது வீடியோ கேம் ஆடுவதற்கான சேவை அல்ல. வீடியோ கேம் ஆடுவதைப் பார்ப்பதற்கான சேவை.

வேறுவிதமாகச் சொல்வதென்றால் இது வீடியோ கேம்களுக்கான யூடியூப் போன்றது. இதில் வீடியோ கேம் பிரியர்கள் தாங்கள் கேம் ஆடுவதை நேரடியாக ஒளிபரப்புவார்கள். சக வீடியோ கேம் பிரியர்கள் அதைப் பார்த்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். இணைய நேரடி ஒளிபரப்புச் சேவையான ஜஸ்ட்ன் டி.வி.யின் கிளையாகத் தொடங்கி மரமாக வளர்ந்து பின்னர் அமேசான் நிறுவனத்தால் வாங்கப்பட்ட டிவிட்ச்.டிவி இணைய உலகின் முன்னணி தளங்களில் ஒன்றாக உருவாகி இருக்கிறது.

வீடியோ கேம் விளையாடுவதை எல்லாம்கூட யாராவது பார்ப்பார்களா? எனும் கேள்வியோ, சந்தேகமோ தேவையில்லாத ஒன்று. ஏனெனில் இதை இப்போது இ-ஸ்போர்ட்ஸ் என்று கொண்டாடுகின்றனர். மற்ற விளையாட்டு போல இதிலும் நட்சத்திரங்கள் உருவாகி இருக்கின்றனர்.

டிவிட்ச்.டிவி பற்றியும் அது உருவாக்கியுள்ள இணைய விளையாட்டு கலாச்சாரம் பற்றியும் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இப்போது தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன என்றால் டிவிட்ச்.டிவி புதிதாக ஒரு சேனலை தொடங்கியுள்ளது என்பதும் அது படைப்பாற்றல் கலைக்கானது என்பதும்தான்.

டிவிட்ச்.டிவியில் எப்படி வீடியோ கேம் ஆடுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாமோ, அதேபோல புதிதாகத் தொடங்க‌ப்பட்டுள்ள டிவிட்ச் கிரியேட்டிவ் பகுதியில் ஓவியர்களும், போட்டோஷாப் கலைஞர்களும் தாங்கள் உருவாக்கத்தை நேரடியாக ஒளிபரப்பலாம்.

டிவிட்ச், அடிப்படையில் வீடியோ கேம் ஒளிபரப்பிற்கான தளமாக இருந்தாலும்கூட, பல பயனாளிகளின் போட்டோஷாப் உருவாக்கம் மற்றும் ஓவியங்கள் வரைவதை ஒளிபரப்பவும் இதைப் பயன்படுத்தி வந்ததை உணர்ந்ததால் இதற்கென்றே தனிசேவை தொட‌ங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேம் ஆடி ஆடி அலுத்துப்போகும் போது, கலை உருவாக்கத்தில் லயித்துப்போவது பலருக்கும் பிடித்திருக்கிறது. இதை மேலும் ஊக்குவிக்கத்தான் டிவிட்ச் கிரியேட்டிவ் உதயமாகியுள்ளது.

இந்த இடத்தில் பாப் ராஸ் உங்கள் நினைவில் வந்திருந்தால் சபாஷ் போட்டுக்கொள்ளவும்.

ஓவியம் வரைதலை நேரடியாக ஒளிபரப்ப வழி செய்யும் ஒரு இணையதளத்தின் பயன்பாட்டுக்கு ஓவியம் மூலம் மக்களுடன் பேசிய ஒருவரைவிடப் பொருத்தமானவர் யார் இருக்க முடியும்? அதனால்தான் டிவிட்ச் கிரியேட்டிவில் அன்மையில் பாப் ராஸ் தொலைக்காட்சியில் தொகுத்து அளித்த ‘ஜாய் ஆஃப் பெயிண்டிங்' நிகழ்ச்சி அப்படியே மறு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சும்மா இல்லை. அந்த நிகழ்ச்சித் தொகுப்பு அனைத்தும் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டன. நிகழ்ச்சியின் 403 பகுதிகளையும் எட்டரை நாட்களில் ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டது.

டிவிட்ச் ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் இந்த ஒளிபரப்பைப் பார்த்து ரசித்துள்ளனர். முதல் நாளில் மட்டும் 80 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். அது மட்டும் அல்ல. குறிப்பட்ட நேரத்தில் 60 ஆயிரம் பேருக்கு மேல் நேரடியாகப் பார்த்து ரசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஓவியம் வரையும் கலை எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என நினைத்தவர் ராஸ். அந்த நோக்கத்துடன்தான் அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்தார். நீங்களும் ஓவியம் வரையலாம் எனும் செய்தியுடன் அவர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு ஓவியம் வரைந்து காட்டுவதைப் பார்த்தால் உற்சாகமாக இருக்கும் என்கின்றனர் பாப் ராஸ் ரசிகர்கள். அவரது மென்மையான பேச்சு மற்றும் நம்பிக்கை அளிக்கும் பாணி பார்ப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடியது என்றும் அவரைக் கொண்டாடுகின்றனர்.

ஒரு முறை ராஸ், நிறக் குறைபாடு கொண்ட ஒருவருக்காக அவரால் பார்க்கக்கூடிய கிரே வண்ணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அதன் பல்வேறு நிற வேறுபாட்டைப் பயன்படுத்தி அழகிய ஓவியம் ஒன்றை வரைந்து காட்டியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அவர் மக்களின் ஓவியர். அதனால்தான் டிவிட்ச் கிரியேட்டிவில் அவரைப் பார்த்து ரசித்திருப்பதுடன் ஒவ்வொரு பகுதி (ஓவியம்) முடிந்ததும் ‘குட் கேம்' என கருத்துச் சொல்லி மகிழ்ந்துள்ளனர். வீடியோ கேம் உலகில் மிகப்பெரிய பாராட்டுச்சொல் இது.

பல பயனாளிகள் ராஸ் ஓவியம் வரைவது மூலம் கொண்டு வந்த உற்சாகம், நம்பிக்கை ஆகியவற்றையும் அடையாளம் கண்டு பாராட்டியிருக்கின்றனர்.

தொலைக்காட்சி யுகத்தில் கோலோச்சிய பாப் ராஸ் இணைய யுகத்தில் மறு அவதாரம் எடுத்திருப்பது படைப்பாற்றல் காலத்தால் அழியாதது என்பதை உணர்த்துகிறது.

டிவிட்ச் கிரியேட்டிவில் நேரடியாகப் பார்க்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். ராஸின் நிகழ்ச்சிகள் அனைத்தும் யூடியூப்பில் காணக் கிடைக்கின்றன. அவருக்கான இணையதளம், ட்விட்டர் பக்கம் எல்லாமும் இருக்கின்றன.

டிவிட்ச் கிரியேட்டிவ் இணையதளம்: >http://www.twitch.tv/bobross

பாப் ராஸ் யூடியூப் சேனல்: >https://www.youtube.com/user/BobRossInc

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்