உறுமலுடன் சீறிப் பாயும் மோட்டார் பைக்கில் அமர்ந்து, அந்தரத்தில் சில நிமிடங்கள் பயணித்து, தரைக்குத் திரும்பி வருபவரைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. பல்வேறு சாகசங்களை அநாயாசமாகச் செய்து முடித்த பிறகு, ஹெல்மெட்டைக் கழற்றுகிறார் பெனாஸ் ஷஃபி. அவர் ஒரு பெண் என்பதை அறிந்து ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் வாய் பிளக்கிறது கூட்டம்.
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் ஈரானில் மோட்டார் பந்தய வீராங்கனையாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் பெனாஸ் ஷஃபி. பெண் களுக்கு எதிரான சட்டங்கள், பழமைவாதங்கள், பாலினப் பாகுபாடுகளையும் தகர்த்தெறிந்திருக்கிறார்.
‘பைக்' காதலி
பெனாஸ் மோட்டார் பந்தய வீராங்கனையாக மாறிவிட்டதால், ஈரான் பெண்கள் அனைவருக்கும் வாகனங்களை ஓட்ட அனுமதி கிடைத்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ள இயலாது. சிறப்பு அனுமதி வாங்கியே பெனாஸ் மோட்டார் பைக்கை ஓட்டி வருகிறார். அதுவும் மக்கள் புழங்கும் சாலைகளில் அவர் பைக் ஓட்டிச் செல்லக் கூடாது. அவருக்கு என்று விதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே ஓட்ட முடியும். இதுவரை பெனாஸ் உட்பட 6 பெண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் பெனாஸ் ஒருவருக்கு மட்டுமே தொழில்முறை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
26 வயது பெனாஸ், கடந்த 10 ஆண்டுகளாக பைக் ஓட்டிவருகிறார். “சின்ன வயதில் இருந்தே பைக் மீது ஒரு ‘கிரேஸ்' வந்துவிட்டது. ஆனால் 15 வயது வரை தெருக்களில் பெண்கள் பைக் ஓட்டி நான் பார்த்ததே இல்லை. அதனால் என்னால் பைக் ஓட்ட முடியும் என்றே நினைத்ததில்லை. ஒருநாள் ஸான்ஜன் கிராமத்தில் மோட்டார் பைக் ஓட்டிக்கொண்டு ஒரு பெண் கடந்து போனார். நான் ஆச்சரியத்தில் உறைந்துபோனேன். உடனே நானும் பைக் வீராங்கனையாக வருவேன் என்று முடிவு செய்துகொண்டேன்" என்கிறார் பெனாஸ்.
தனியாகப் பயிற்சி…
மனதில் உறுதி எடுத்துக் கொண்டாலும் எங்கே பயிற்சி எடுத்துக்கொள்வது? சாலைகளில் பைக் ஓட்டக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனாலும் அவருக்கு வேறு வழியில்லை. இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். பயிற்சியாளர் என்று யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. பிரேக், கியர் பாக்ஸ், பெடல் என்று தானே ஒவ்வொன்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொண்டார். முறையாகக் கற்றுக்கொள்ளாததால் பைக் ஓட்டுவதில் உள்ள நுணுக்கங்கள் அவருக்கு எளிதில் கைவரவில்லை. அடிக்கடி பைக்கோடு விழுந்துவிடுவார். காயங்களுக்குப் பஞ்சமிருக்காது. இன்னொரு பக்கம் யாருக்கும் தெரியாமல் பைக் ஓட்டுவது அச்சமாக இருக்கும். யாராவது கண்டு பிடித்துவிட்டால் என்ன செய்வது?
ஆண்கள் வலிமையானவர்கள், திறமையானவர்கள் என்பதால் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்ய வேண்டும் என்பதும் பெண்கள் வலிமையற்றவர்கள் என்பதால் வீட்டுக்குள் வேலை செய்ய வேண்டும் என்பதும் ஈரான் மக்கள் காலம் காலமாக நம்பப்படும் விஷயங்கள்.
இன்று பெனாஸ் செய்திருக்கும் சாதனையை ஈரானைச் சேர்ந்த எந்த ஓர் ஆணும் இதுவரை செய்ததில்லை. சாலைகளிலும் கரடுமுரடான பாதை களிலும் தொழில்முறை பைக் பந்தயக் காரராக விளங்குகிறார் பெனாஸ்.
“மக்களும் சக ஆண் மோட்டார் பைக் ரேஸ் வீரர்களும் என்னைப் பாராட்ட வேண்டும் என்றெல்லாம் நான் நினைப்பதில்லை. என்னுடைய லட்சியம் மோட்டார் பைக் ஓட்டுவதும் அதில் சாம்பியன் பட்டம் பெறுவதும்தான். நான் பைக் ஓட்டும்போது என்னை ஒரு பெண்ணாக யாருக்குமே அடையாளம் தெரியாது. அங்கே என் திறமை மட்டும்தான் வெளிப்படும். அதுதானே நமக்கு வேண்டும்!
பெண் என்ற காரணத்துக் காகச் சிறப்புச் சலுகையோ, பாராட்டுகளோ தேவை இல்லை. ஒரு பெண் இப்படிச் செய்யலாமா என்று விமர்சிப்பவர்களையும் நான் கண்டு கொள்வதில்லை. ஒவ்வொன்றையும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தால், நம்மால் ஒரு அடி கூட முன்னேற முடியாது. விமர்சிப்பவர்களுக்கு நம் செயல் மூலம்தான் பதில் சொல்ல வேண்டும்".
வழிகாட்டி…
தைரியமான அம்மா, பயிற்சி பெற தனது பைக் கொடுத்து ஊக்குவித்த சகோதரன் ஆகியோரால்தான் பெனாஸின் கனவு நிறைவேறியிருக்கிறது. தன்னுடைய சம்பாத்தியத்தைச் சேர்த்து வைத்துத்தான் சொந்தமாக ஒரு பைக் வாங்கினார் பெனாஸ்.
பெனாஸை உதாரணமாகக் கொண்டு மேலும் சில பெண்கள், தங்கள் லட்சியத்தை அடைய முயற்சி செய்யலாம். ஆனால் லட்சியம் வைத்துக்கொள்ளக்கூட முடியாத அளவுக்குப் பெண்களுக்கு இருக்கும் தடைகளை ஈரான் நீக்க வேண்டும். அதேசமயம் பெண்கள் மோட்டார் பந்தயத்துக்குப் பெரிய அளவில் ஸ்பான்ஸர் கிடைக்காது. செலவு அதிகம் பிடிக்கக்கூடிய பந்தயம் இது என்கிறார் அவர்.
வலிமையும் தைரியமும்
"ஈரான் போன்ற நாட்டில் இருந்துகூட ஒரு பெண் முயன்றால் தன் லட்சியத்தை நிறைவேற்ற முடியும் என்பதற்கு நானே உதாரணம். அழகையும் மென்மையையும் சொல்லிப் பெண்களின் திறமைகளை அமுக்கி வைக்கப் பார்க்கும் சமூகத்திடமிருந்து பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். அழகும் மென்மையும் விட வலிமையும் தைரியமும்தான் பெண்களுக்குச் சிறப்பான அடையாளங்களாக இருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று, அந்நாடுகளின் சார்பாக விளையாட நான் விரும்பவில்லை. நான் சாம்பியன் ஆவது மட்டுமல்ல, ஈரான் பெண் சாம்பியன் ஆனார் என்பதும் என் லட்சியம்" என்று சொல்லி ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறார் பெனாஸ்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago