ஒரு சராசரி இந்திய இளைஞனின் கனவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அடுத்த பிரதமராக ஆவது? இன்னொரு சூப்பர் ஸ்டார் ஆவது? குறைந்தபட்சம் அர்னாப் கோஸ்வாமி ஆவது? ம்ஹும்... இதில் எதுவுமில்லை. அமெரிக்கன் ஆவது!
இன்று அமெரிக்காவில் வசிக்க வேண்டும். இதற்காகத்தான் இன்று ஒரு தலைமுறை இளைய சமுதாயம் கஷ்டப்பட்டுப் படிக்கிறது. மாநில அளவில் மதிப்பெண்கள் பெறத் துடிக்கிறது. தேசிய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் முதல் பத்து தரவரிசைகளுள் வர அயராது ஓடுகிறது, பந்தயக் குதிரைகளைப் போல!
கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, சிலிக்கான் வேலியில் ஒரு வேலை கிடைத்துவிட்டால் போதும். ‘அமெரிக்கன் ட்ரீம்' வாழ்க்கைக்கான என்ட்ரி கிடைத்துவிட்ட திருப்தியை உணர ஆரம்பித்துவிடுகிறார்கள்.
ஆனால் அமெரிக்க வாழ்வு அவ்வளவு அழகானதா? கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ‘டேட்டா'வைக் கொஞ்சம் பாருங்கள்.
# புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான ‘பசுமை இல்ல வாயுக்களை' அதிக அளவில் வெளியிட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதனால் அதற்கு வரலாற்றுபூர்வமான சுற்றுச்சூழல் கடன் அதிகமாக உள்ளது.
# அமெரிக்காவில் மின்சாரத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் அளவு இந்தியா பயன்படுத்தும் அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமானது.
# மாற்று எரிபொருட்களில் ஒன்றான இயற்கை எரிவாயுவைக் கடந்த ஆண்டு அமெரிக்கா பயன்படுத்திய அளவு 22 சதவீதம். இது உலகம் முழுக்கப் பயன்படுத்திய இயற்கை எரிவாயுவின் அளவுக்குச் சமமானது.
# இந்தியாவில் தனிநபர் ஒருவர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை விட 17 மடங்கு அதிகமாக அமெரிக்கர் ஒருவர் பயன்படுத்துகிறார்.
# இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 18 பேர் கார்கள் வைத்திருந்தால், அமெரிக்காவில் அதே ஆயிரம் பேருக்கு 786 பேர் கார்கள் வைத்துள்ளனர். அதாவது, இந்தியாவில் 15 சதவீதம் பேர் கார்களைப் பயன்படுத்தினால், அமெரிக்காவில் 85 சதவீதம் பேர் கார்களைப் பயன்படுத்துகின்றனர்.
# இந்தத் தரவுகளின் பின்னுள்ள முக்கிய அம்சம், உலகின் மிகத் தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சினையான பருவநிலை மாற்றத்துக்கு அமெரிக்காவின் பங்கு மிக அதிகமானது. முதன்மையானது!
அமெரிக்கப் புரட்சியின்போது அமெரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே நிலவிய நட்புறவை வெளிக்காட்டும் விதமாக, பிரான்ஸ் தேசம் அமெரிக்காவுக்கு சுதந்திர தேவி சிலையை நினைவுப் பரிசாக வழங்கும் அளவுக்கு இருநாடுகளுக்குமிடையே ஆழமான நட்புறவு உண்டு.
விளக்கின் அடியில் இருள் கவிழ்ந்திருக்கும் எனும் வார்த்தைகளுக்கு ஏற்ப, இன்று சுதந்திர தேவி சிலைக்குக் கீழும் இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த இருள் விலகுவதும் நீடிப்பதும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கையில் உள்ளது.
ஆம்! வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் 11-ம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் 21-வது பருவநிலை மாற்ற உலக மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற முதல் கருப்பர் இனத் தலைவர் ஒபாமா. தற்போது இரண்டாவது முறையாக அந்தப் பதவியில் நீடிக்கிறார். அவர் மூன்றாவது முறையாகவும் அதிபராக வருவதைத் தடுக்கும் விதத்தில் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் 22-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், நடக்க இருக்கும் பருவநிலை மாற்ற மாநாட்டில், ஒபாமா மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ‘அமெரிக்க மக்களின் ‘லைஃப் ஸ்டைலு'டன் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும்' என்பதுதான் அது! இந்த முடிவை எடுக்கும்பட்சத்தில், அமெரிக்காவில் ஒபாமாவுக்குக் கெட்ட பெயர் கிடைக்கும். ஆனால் உலக அளவில் அவருக்கு வரலாற்றுச் சிறப்பு கிடைக்கும். எதை அவர் தேர்வு செய்யப்போகிறார் என்பது இன்றைய தினத்தில் ‘மில்லியன் டாலர்' கேள்வி!
"நடக்கப்போகும் இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலகம் அனைத்துக்கும் பொதுவான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவோம். இந்த முடிவை யாருக்காகவும் நாங்கள் மாற்றிக்கொள்ள மாட்டோம்" என்று டெல்லியில் சமீபத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் பிரான்சுவா ரீஷியே கூறியுள்ளார்.
1995-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் சார்பில் இந்த பருவநிலை மாற்ற உலக மாநாடு நடைபெற்றுவருகிறது. இத்தனை ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் பிரச்சினையில், தனது பங்கைத் தட்டிக் கழித்து வந்திருக்கிறது அமெரிக்கா. மிகச் சமீபத்தில்தான் ‘பருவநிலை மாற்றம் உண்மை. இதனைச் சமாளிப்பதற்கு எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்கிறோம்' என்று கூறி தனது திட்டங்களைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த வரலாற்றுத் தருணத்தில், அமெரிக்காவின் திட்டங்களை முதன் முறையாக இந்தியாவைச் சார்ந்த ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்' (சி.எஸ்.இ) ஆராய்ந்துள்ளது. தனது ஆய்வை ‘கேபிடன் அமெரிக்கா' (Capitan America. கவனிக்க... Captain அல்ல!) என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் திட்டங்களில் உள்ள குறைகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ‘அமெரிக்காவின் திட்டங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கிய தெற்காசியாவிலிருந்து வந்திருக்கும் முதல் அறிக்கை இது' என்று போற்றப்படுகிறது இந்தப் புத்தகம்.
நமது வளி மண்டலத்தை வட்ட வடிவிலான ஒரு ‘கேக்' ஆக கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் சுமார் 60 சதவீதம் ஏற்கெனவே தின்று முடித்தாகிவிட்டது. அதாவது, வளி மண்டலத்தில் சுமார் 60 சதவீத இடத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் வெளியிட்ட பசுமை இல்ல வாயுக்கள் நிரம்பியிருக்கின்றன. கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களை நாம் பசுமை இல்ல வாயுக்கள் என்போம். இவற்றின் ஆயுட் காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலானது .
கடந்த 80 ஆண்டுகளில் அமெரிக்கா வெளியிட்ட பசுமை இல்ல வாயுக்கள்தான் அதிக அளவில் நிரம்பியிருக்கின்றன. இதன் காரணமாகத்தான் சூழலை மாசுபடுத்திய வரலாற்றுக் கடன் அமெரிக்காவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா அதை ஏற்க மறுக்கிறது. மாறாக, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைப் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கச் சொல்கிறது. அதாவது, நாம் நமது வளர்ச்சிப் பணிகளை எல்லாம் நிறுத்திக்கொண்டு ஏழையாகவே இருக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது கதை?
இப்போது மீண்டும் ‘கேக்'குக்கு வருவோம். மீதமிருக்கும் 40 சதவீத இடத்தில் எந்தெந்த நாடுகள் எவ்வளவு பசுமை இல்ல வாயுக்களைக் கொண்டு நிரப்பலாம், யாருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்பதுதான் கேள்வி.
இந்த இடத்திலும் அமெரிக்கா கை வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ‘மின்சாரத்தைச் சிக்கனமாக உபயோகிக்க வேண்டும், ஒருவருக்கு இரண்டு கார்கள் தேவையில்லை உள்ளிட்ட முழக்கங்களோடு அமெரிக்கர்கள் தங்கள் பணக்காரத்தனமான வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்' என்று அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தப் புத்தகத்தை எழுதியவர்களில் ஒருவரும், சி.எஸ்.இ.யின் இணை இயக்குநருமான சந்திரா பூஷண், "பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது அமெரிக்கா. அதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று அது படிம எரிபொருளான நிலக்கரியை அதிக அளவில் பயன்படுத்துகிறது. தற்போது, நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துகிறோம் என்கிறது அமெரிக்கா. அதற்காக நாம் அதைப் பாராட்டிவிடக் கூடாது. மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நல்ல காரணத்தால் அது இயற்கை வாயுவைப் பயன்படுத்தவில்லை. விலை மிகவும் குறைவு, அதனால்தான்.
அங்கு பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதைப் பெரும் பாவமாகக் கருதுகின்றனர் மக்கள். அங்கு வீடுகள் ஒவ்வொன்றும் பெருத்துவருகின்றன. 1980ம் ஆண்டில் 1,800 சதுர அடியாக இருந்த ஒரு வீடு 2002-ம் ஆண்டில் 2,400 சதுர அடியாகப் பெருத்திருக்கிறது. இதற்குக் காரணம் அங்கு குடும்ப அமைப்பின் அளவும் வளர்கிறது என்று நினைத்தால் நம்மைப் போல முட்டாள் வேறு யாருமில்லை. தான் சூழலை மாசுபடுத்துகிறோம் என்ற நினைவே இல்லாமல் மக்களை வழிநடத்திச் செல்லும் தலைவன் எங்களைப் பொறுத்தவரை ஒரு பயனற்ற தலைவன். அதனால்தான் இந்தப் புத்தகத்துக்கு ‘கேபிடன் அமெரிக்கா' என்று பெயர் வைத்தோம்" என்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடவுள்ள எந்த வேட்பாளரும் இதனை முன் வைத்து அமெரிக்க மக்களிடம் வாக்கு கேட்க மாட்டார் என்பதே நிதர்சனம் என்ற நிலையில், அதிபர் பொறுப்பிலிருந்து விடைபெறும் ஒபாமாவேனும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!
இந்தப் புத்தகத்தை எழுதிய இன்னொரு எழுத்தாளரும், சி.எஸ்.இ.யின் இயக்குநருமான சுனிதா நரேன் கூறும்போது, "இது 'லாபி' செய்யும் புத்தகமல்ல. இது முழுக்க முழுக்க உண்மைகளால் நிரம்பிய புத்தகம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவுகள் பெரும்பாலும், அமெரிக்க அரசுத் துறைகளிலிருந்தே எடுக்கப்பட்டவை. சமீபத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை நாங்கள் பல்வேறு மாநாடுகளில் முன்வைத்தபோது யாருமே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. யாருமே இதைப் பொய் என்று கூறவில்லை. அமெரிக்கர்கள் உட்பட! உண்மையில் அவர்கள் இது பற்றி விவாதிக்க விரும்புவதில்லை என்பதுதான் நடைமுறை யதார்த்தம்.
வரி விதிப்பு, கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் ஒரு சமூகத்தின் நடத்தையை மாற்ற முடியும். பொது இடத்தில் துப்புவது என்பது எப்படி ஒரு கெட்ட பழக்கமோ, அப்படியே ஒருவர் இரண்டு கார்கள் வைத்திருப்பதும் என்ற சிந்தனையை அமெரிக்க மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றம் நிகழ வேண்டும். அது காலத்தின் கட்டாயம்!" என்றார்.
இப்போது சொல்லுங்கள், நீங்கள் அமெரிக்கர் ஆக விரும்புகிறீர்களா?
சுனிதா நரேன் - சந்திரா பூஷண்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago