சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ச்சியாகப் பின்தொடராதவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பந்துவீச்சாளராகவே மனதில் பதிந்திருப்பார். ஆனால், அஸ்வின் அற்புதமான பேட்ஸ்மேன். சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு உள்ளூர்ப் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கியவர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தன்னுடைய பேட்டிங் - ஆல்ரவுண்டர் திறமையை மீண்டும் ஒரு முறை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பந்துவீச்சாளர்கள் என்றால், பந்துவீசுவதில் மட்டுமே திறமை காட்டுவது வழக்கம். அவ்வப்போது சிலர் ஆல்ரவுண்டராக உருவெடுத்தாலும், அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் காணாமல் போய்விடுவதும் உண்டு. ஆனால், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமாகி, பேட்டிங்கிலும் அழுத்தமாகத் திறமையைக் காட்டி ஆல்ரவுண்டராகப் பரிணமித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதற்கு அண்மையில் நடந்த முடிந்த ஆஸ்திரேலிய தொடரும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் இங்கிலாந்து தொடரும் ஓர் உதாரணம்.
ஆஸ்திரேலிய தொடர்
ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் மோசமானத் தோல்வியை இந்திய அணி சந்தித்த பிறகு, மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களின் விக்கெட்களைச் வீழ்த்தி அணியின் வெற்றிக்குப் பங்களித்தார் அஸ்வின். சிட்னி போட்டியில் அணியின் தோல்வி தவிர்க்கப்பட்டதற்கும் அஸ்வின் முக்கிய காரணமானார். டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் என்பது ரன்களைக் குவிப்பது மட்டுமல்ல. சூழலுக்கு ஏற்ற நிதானமாக ஆடுவதும் தேவைப்பட்டால் ரன்களை அடிக்காமல் இருப்பதும்தான்.
அஸ்வின் கடுமையான காயமடைந்திருந்த நிலையிலும் ஹனுமா விஹாரியோடு இணைந்து 40 ஒவர்களுக்கு விக்கெட் விழாமல் பொறுமைகாத்து பொறுப்புடன் களத்தில் நின்றார். இப்போட்டியில் அஸ்வின் 128 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை அடித்தார். இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டருக்கான இலக்கணத்தை அழகாக வெளிப்படுத்தினார் அஸ்வின்.
இங்கிலாந்து தொடர்
சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோற்றாலும், பிறந்து வளர்ந்த நகரில் அஸ்வின் சோடைபோகவில்லை. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள், இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் என 9 விக்கெட்டுகளை அள்ளினார். பேட்டிங்கிலும் முதல் இன்னிங்ஸில் 31 ரன்கள் அடித்ததோடு, இரண்டாம் இன்னிங்ஸில் பேட்ஸ்மென்கள் வரிசையாக நடையைக் கட்டியபோது தனியாளாகப் போராடிக்கொண்டிருந்த கேப்டன் விராட் கோலிக்கு நீண்ட நேரம் களத்தில் அஸ்வின் தோள்கொடுத்தார்.
இரண்டாம் டெஸ்ட் போட்டியில் தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை அஸ்வின் மீண்டும் அழுத்தமாகப் பதிவுசெய்தார். முதல் இன்னிங்ஸில் உலகத் தரமான பேட்ஸ்மேன்களைக் கொண்ட இங்கிலாந்து அணி 134 ரன்களுக்குச் சுருண்டுபோக அஸ்வின் வீழ்த்திய ஐந்து விக்கெட்டுகள் காரணமாகின. சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என்ற சர்ச்சைக்கு வழிவகுத்த நிலையிலும், இரண்டாம் இன்னிங்ஸில் தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் ஆடுகளத்தைக் குறை சொன்னவர்களுக்கு பதிலளித்தார். 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 106 ரன்களை எடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது சதத்தைப் பதிவுசெய்தார்.
டெஸ்ட் ஹீரோ
மொய்ன் அலி, ஜாக் லீச் ஆகியோரின் சுழலை சமாளிக்கத் தொடக்க நிலை பேட்ஸ்மேன்களே தடுமாறிய நிலையில் 8-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய அஸ்வின் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விதம் மிக நேர்த்தியாக இருந்தது. இந்தப் போட்டியின் மூலம் ஆல்ரவுண்டர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் 5ஆம் இடத்துக்கு அஸ்வின் முன்னேறினார். 2017 ஜூலைக்குப் பின் ஒருநாள், டி-20 போட்டிகளில் அஸ்வின் விளையாடவில்லை. கடந்த மூன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிவருகிறார். 2011-லிருந்து இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 394 விக்கெட்களையும் 2,626 ரன்களையும் குவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கபில்தேவ் போல் பந்துவீச்சை முதன்மையாகக் கொண்ட ஆல்ரவுண்டர்கள் மிக அரிது. 1990-களின் பிற்பகுதியிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டு களிலும் இப்படிப்பட்ட பவுலிங் ஆல்ரவுண்டர்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. இந்தப் பின்னணியில் அஸ்வினின் ஆல்ரவுண்டர் சாதனைகள் கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டத்துக் குரியவையாக மாறியுள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago