‘ஓடணும்... பரிசு வாங்குறது முக்கியமில்லை. நமக்கு விதிக்கப்பட்ட அந்த எல்லைக் கோட்டை எப்படியாவது அடைஞ்சிடனும். அதுவே பெரிய வெற்றிதான்!"
அவர் கால்களில் உள்ள வேகம் அவரின் வார்த்தைகளிலும். சென்னையில் மராத்தான் ஓட்டப் பந்தயங்கள் எங்கு நடந்தாலும் அங்கு இவரைப் பார்க்க முடியும்.
"ஹலாவ்... ஐ ஆம் பிந்து!" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். மராத்தான் ரன்னர் என்பது இவரின் அடையாளம். ஆனால் பலருக்கும் தெரியாத ஆச்சர்யம். வறுமையில் வாடும் குழந்தைகளின் கல்விக்காக தனது ஓட்டத்தின் மூலம் நிதி திரட்டுபவர் என்பது!
“பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத். ஐ.ஐ.டி. மெட்ராஸில் இன்ஜினியரிங் படிச்சேன். இப்போ ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை. சின்ன வயசுல க்விஸ், டிராயிங்னுதான் என் ஆர்வம் எல்லாம். ‘வெளில போய் விளையாடும்மா'ன்னு சொன்னாலும் ‘போம்மா...'ன்னு சொல்லிட்டு புக் எடுத்து படிக்கிற ஆள் நான்.
இப்படி போயிட்டிருந்த வாழ்க்கையில எனக்கு ஒரு பிரச்சினை வந்துச்சு. ‘ஹைப்போ தைராய்ட்'! உடம்புல வெயிட் போடுறது, பீரியட்ஸ்ல பிரச்சினை, சீக்கிரமா டயர்ட் ஆகுறதுன்னு அப்பப்பா... ‘நமக்கு ஏன் இப்படி?'ன்னு யோசிச்சுக்கிட்டிருந்த சமயத்துல ‘நீங்க நல்லா ஓடணும்.. கொஞ்சமாச்சும் எக்சர்சைஸ் பண்ணனும்'னு டாக்டர்ஸ் ப்ரிஸ்கிரைப் பண்ணாங்க.
அப்படித்தான் நான் ஓட ஆரம்பிச்சேன். ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஜாகிங், ரன்னிங், சைக்ளிங் பண்றதுக்கு ஐடியலான இடம். அங்க ஒரு ப்ரொஃபசர் இருந்தார். அவரும் ஒரு மராத்தான் ரன்னர். திடீர்னு ஒரு நாள் வந்து ‘ரன்னிங்ல யாருக்கெல்லாம் இன்ட்ரஸ்ட்'னு கேட்டார். ஒரு 23 பேர் கைதூக்குனோம்.
‘ஓ... அப்படியா. சரி, நாளைக்கு எல்லோரும் கிரவுண்ட்ல அசெம்பிள் ஆகிடுங்க'ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். அடுத்த நாள் பார்த்தா என்னோடு சேர்த்து இன்னொரு பொண்ணு. நாங்க ரெண்டே பேர்தான். கம்பெனிக்கு யாருமில்லையேன்னுல்லாம் பார்த்தா முடியுமா? அன்னிலருந்து மெல்ல மெல்ல ஓட ஆரம்பிச்சோம்.
ஆரம்பத்துல ஷார்ட்ஸ், டீ ஷர்ட் போட்டுக்கிட்டு பல பேர் பார்க்குற மாதிரி ஓடுறதுன்னு நினைக்கவே கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு. ஆனா, எங்களுக்கு முன்னாடி, ஸேரி கட்டிக்கிட்டு, ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக்கிட்டு ஒரு வயசான அம்மா ஓடிட்டு இருந்தாங்க.
அதைப் பார்த்ததுக்கு அப்புறம், ‘என் நல்லதுக்காகத்தானே ஓடுறேன். இதிலென்ன வெட்கம்'னு சொல்லிட்டு களத்துல இறங்கிட்டேன். ஓட, ஓட எனக்கு நம்பிக்கை வந்துச்சு. கொஞ்ச நாள்லயே என் உடம்பு சரியாகிறதை உணர்ந்தேன்.
நான் ஓடுறதைப் பார்த்து இன்னும் கொஞ்ச நண்பர்கள் சேர்ந்தாங்க. ரன்னிங் கிளப் ஆரம்பிச்சோம். ‘ஃபாரஸ்ட் கம்ப்'ங்கிற பெயர்ல ஒரு ரன்னரைப் பத்தின ஹாலிவுட் படம் கூட இருக்கு. அதனால அந்தப் பெயரையே எங்க கிளப்புக்கும் வைச்சிட்டோம்.
இடையில ஒரு ரெண்டு மாசம் கால்ல அடிபட்டுருச்சு. மறுபடியும் வீட்ல முடங்கிக் கிடந்தேன். அப்ப ரன்னர்ஸைப் பத்தின படம், புக்ஸ்னு மனசளவுல நான் ஓடிக்கிட்டுத்தான் இருந்தேன். உடம்பு சரியானதுக்கு அப்புறம் இன்டர்ன்ஷிப்புக்காக பெங்களூருவுக்குப போயிட்டேன். அங்க கப்பன் பார்க்ல மீண்டும் ரன்னிங் பண்ண ஆரம்பிச்சேன்.
திரும்பவும் சென்னை வந்தேன். அப்ப இங்க ஒரு மராத்தான் போட்டி ஒன்னு அறிவிச்சிருந்தாங்க. நான் கலந்துக்கிட்டேன். ஆனா, போட்டிக்கு ரெண்டு நாள் முந்தி எங்க பாட்டி இறந்துட்டாங்க. மனசு முழுக்க நிரம்பியிருந்த பாரத்தை ஓடித்தான் குறைக்க வேண்டியிருந்துச்சு.
நான் முதன்முதல்ல கலந்துக்கிட்ட மராத்தான் போட்டி அதுதான். வீட்ல சொன்னப்ப என்னை நம்பாம பார்த்தாங்க. ‘நீ ஓடுவேன்னு எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் இந்தப் பணத்தை வைச்சுக்கோ பிந்து. பாதி வழியில உன்னால ஓட முடியலைன்னா, ஒரு ஆட்டோ பிடிச்சிக்கிட்டு வந்துடு'ன்னு சொன்னாங்க. ஆனா அதுக்கு தேவையே ஏற்படலை. எனக்கு நானே என்னை நிரூபிச்சுக்கிட்டேன்.
ஐ.ஐ.டி.ல படிக்கும்போது என்னோட சீனியர் ஒருவர் இந்த மாதிரி மராத்தான் போட்டிகள்ல கலந்துக்கிட்டு நிறைய விஷயங்களுக்கு ஃபண்ட் ரைஸிங் பண்ணிட்டிருந்தார். அவரைப் பார்த்துத்தான் நானும் ஃபண்ட் ரைஸிங் பண்ண ஆரம்பிச்சேன்.
ஒரு நாள் ‘நம்ம வீட்டு வாட்ச்மேனோட பேத்தியும், பேரனும் காசில்லாததால படிக்க முடியாம இருக்காங்க. உனக்குத் தெரிஞ்ச ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அவங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாரேன்'னு எங்க அம்மா சொன்னாங்க. அப்போதான் ‘நாம ஏன் மராத்தான் ஓடி ஃபண்ட் ரைஸிங் பண்ணக் கூடாது'ன்னு தீர்மானம் பண்ணேன்.
ஃபேஸ்புக் மூலமா இந்தத் தகவலை உலகத்துக்கு அறிவிச்சேன். நல்ல ரெஸ்பான்ஸ். நல்ல ஒரு அமவுண்ட் கிடைச்சுது. அந்தப் பசங்களை ஸ்கூல்ல சேர்க்க முடிஞ்சுது.
அப்பதான் ஒண்ணு தெரிய வந்தது. மக்கள் ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறாங்க. ஆனா, அதை யார் மூலமா செய்யறதுன்னுதான் தெரியலை. ஏன்னா, ‘நாம கொடுக்கிற இந்தப் பணம் சரியானவங்களைப் போய்ச் சேருமா'ன்னு அவங்க யோசிக்கிறாங்க.
அந்த சமயத்துலதான் எனக்கு ‘யுரேக்கா சைல்ட் ஃபவுண்டேஷன்' தொண்டு நிறுவனம் பத்தி தெரிய வந்துச்சு. அங்க இருக்குற குழந்தைகளுக்காக ஃபண்ட் ரைஸிங் பண்ண முடிவு பண்ணேன். டார்கெட் ரூ.1.5 லட்சம். கிடைச்சுது 1.75 லட்சம். சொல்ல முடியாத அளவுக்கு ஒரு மனநிறைவு" என்று நிறுத்தி, தேநீர் அருந்தினார்.
இப்போது வரை 7 ‘ஹாஃப் மராத்தான்' (21 கி.மீ.) போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். அவை அத்தனையும் ‘பேர் ஃபூட் ரன்னிங்!' "ஷூ போட்டுக்கிட்டா ரொம்ப வெயிட்டா இருக்கு. அதான்!" என்கிறார் சிரித்துக்கொண்டே. இவரின் அடுத்த இலக்கு, நீச்சல், சைக்கிளிங் மற்றும் ஓட்டம் ஆகியவை இணைந்த ‘ட்ரையத்லான்' போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது!
‘எனக்கு எக்சர்சைஸ் பண்ண டைம் இல்லப்பா'ன்னு இன்னிக்கு யாராவது சொன்னா, அதை நான் ஏத்துக்க மாட்டேன். ஒரு நாளைக்கு 20 நிமிஷம் ஒதுக்குங்க. உங்க வீட்டு மாடிப் படிகள்ல ஏறி இறங்குங்க. அதுவே கூட ஒரு நல்ல எக்சர்சைஸ்தான்.
கொஞ்சம் கொஞ்சமா ஓட ஆரம்பிங்க. ஒரு க்ரூப்பா சேர்ந்து ஓடுறது உங்களை இன்னும் உற்சாகப்படுத்தும். முக்கியமா, நீங்க ஓட ஆரம்பிக்கிற நாள்ல இருந்து நீங்க சாப்பாட்டுப் பழக்கம் ஒரு ஒழுக்கத்துக்கு வரும்.
வேறென்ன சொல்ல... ஓட்டமா ஓடுற இந்த வாழ்க்கையை ஓடித்தானே கடக்கணும்!" என்கிறார் பிந்து.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago