சுரேந்திரநாத் ரெட்டியிடம் ‘3டி பிரின்டிங்' குறித்துப் பேசினால், நாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அத்தனை தகவல்கள். “ஒண்ணு தெரியுமா...? நாம சாப்பிடற பீட்சாவைக்கூட 3டி பிரின்டிங் மூலமா நமக்கேத்த டிசைன்ல தயார் பண்ணி சாப்பிடலாம்!" என்று சொல்லும்போது நமக்கு வாயைப் பிளந்து ஆச்சரியப்படுவதைத் தவிர வேறு வேலையில்லை.
“பேரில்தான் தெலுங்கு. பூர்வீகம் ஆந்திரா. ஆனா பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் சென்னைதான்” என்று ஆரம்பிக்கிறார் சுரேந்தர்.
“பி.இ. எலக்ட்ரானிக்ஸ் பண்ணிட்டிருந்தேன். ரெண்டு வருஷம் போச்சு. சின்ன வயசுலருந்து டெக்னாலஜி சம்பந்தமான விஷயங்கள்ல ரொம்ப ஆர்வம். அதுல ஏதாவது புதுசா முயற்சி பண்ணிப் பார்க்கணும்னு ஒரு தேடல்ல இருந்தேன். அதனால காலேஜ் படிப்பைப் பாதில விட்டுட்டு, ஒரு ரோபோடிக்ஸ் நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன்.
ஒரு ரெண்டரை வருஷம். அந்த கம்பெனிய விட்டு வெளில வந்துட்டேன். அப்புறம் ஃப்ரீலான்ஸா எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான சில புராஜெக்ட்ஸ் பண்ணிட்டிருந்தேன்.
2013-ம் வருஷம். ‘ரெட் ரோபோட்டிக்ஸ்'ங்கிற கம்பெனியை நான் சொந்தமா ஆரம்பிச்சேன். அப்போதான் 3டி பிரின்டர்ஸ் பத்தி எனக்குத் தெரிய வந்துச்சு. அதை சைனாவுல இருந்து இறக்குமதி பண்ணி, இந்தியா முழுக்க சேல்ஸ் பண்ணிட்டிருந்தேன். அந்த பிரின்டர்ஸோட விலை ஒரு லட்சத்திலிருந்து மூணு லட்சம் வரை ஆகும்.
இப்படிப் போயிட்டிருந்த வாழ்க்கையில ஒரு நாள்... ‘3 லட்சம் ரூபா கொடுத்து இந்த பிரின்டிங் மெஷினை எல்லாம் நிறுவனங்களால வாங்க முடியும். ஆனா பள்ளி, கல்லூரி மற்றும் ஆய்வு மாணவர்கள்னு தனிநபர்கள் பயன்படுத்துற மாதிரி நாமளே ஏன் இந்த பிரின்டரை குறைஞ்ச விலையில தயாரிக்கக் கூடாது'ன்னு ஒரு யோசனை. உடனே செயல்ல இறங்கிட்டோம்.
ஒரு ஸ்மார்ட்போன் விக்கிற விலையில இந்த பிரின்டிங் மெஷின் இருக்கணும்னு டார்கெட். ‘ஃபேப் எக்ஸ்'னு பேர் வெச்சு, இதோ இந்த வருஷம் ஜனவரி மாசத்திலிருந்து எங்களோட புராடக்ட்டை சந்தையில அறிமுகப்படுத்திட்டுவர்றோம். விலை ரூ.20 ஆயிரம் மட்டும்தான்!” என்று தான் உருவாக்கிய 3டி பிரின்டிங் மெஷினைக் காட்டினார் சுரேந்தர். வரும் டிசம்பர் மாதம் முதல் குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் ஒரு அசெம்ப்ளிங் யூனிட்டை ஆரம்பிக்க உள்ளார்.
“உண்மையைச் சொல்லணும்னா, இந்த பிரின்டர் வேணும்னு எங்களுக்கு வர்ற டிமான்ட்டை எங்கள் விற்பனை மூலமா சமாளிக்க முடியலை. தினமும் அவ்வளவு கால்ஸ்” என்கிறார்.
இந்த பிரின்டர் மூலம், மாணவர்கள் தங்களின் புராஜெக்ட் பணிகள், அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகள், கலைஞர்கள் தங்களின் கலைப் படைப்புகள் போன்றவற்றைத் தங்களின் விருப்பப்படி, விரும்பிய அளவில், குறைந்த நேரத்தில், நல்ல தரத்தில் தாங்களே செய்துகொள்ள முடியும் என்பது இதில் சிறப்பம்சம்.
இந்தக் காரணங்களால் தற்போது நாட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த பிரின்டரை வாங்கியிருக்கின்றன.
“இப்போ வரைக்கும் குழந்தைகள் எல்லாம் பேப்பர், பென்சில் வெச்சுக்கிட்டு வரைஞ்சுக்கிட்டிருந்தாங்க. இனிமேல், அவங்களே தங்களோட கிரியேட்டிவிட்டியை பிராக்டிகலா செஞ்சு பார்க்க இந்த பிரின்டிங் மெஷின் உதவி செய்யும். ஒரு விஷயத்தை அவங்களே செஞ்சு பார்க்கும்போது இன்னும் நல்ல புரிதல் ஏற்படும் இல்லையா..?" என்றவர் அந்த பிரின்டர் குறித்து மேலும் விளக்கினார்.
“இந்த பிரின்டர்ல பல விதமான தெர்மோ பிளாஸ்டிக்ஸ் பயன்படுத்தி நாம் விரும்பும் பொருட்களைச் செய்யலாம். கம்ப்யூட்டர்ல உங்களுக்குத் தேவையான வடிவத்தைப் பதிவு செஞ்சுட்டா போதும். இந்த பிரின்டர் மூலமா உங்களுக்குத் தேவைப்படும் பொருள் கிடைச்சுடும். இந்த பிரின்டரைப் பயன்படுத்த 60 வாட்ஸ் மின்சாரம் போதும்.
18-ம் நூற்றாண்டுல நடந்தது முதல் தொழிற்புரட்சி. 19-ம் நூற்றாண்டுல நடந்தது இரண்டாம் தொழிற்புரட்சி. இப்போ நடக்குறது மூன்றாம் தொழிற்புரட்சின்னு சொல்வாங்க. இந்த தொழிற்புரட்சில முக்கியமான விஷயம் என்னன்னா, மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை வெளில போய் வாங்க மாட்டாங்க. அதுக்குப் பதிலா, அவங்களே தயாரிக்க ஆரம்பிச்சுடுவாங்க. இதை ‘டீ சென்ட்ரலைஸ்ட் மேனுஃபாக்சரிங்'னு சொல்வாங்க. இந்த 3டி பிரின்டர் மூன்றாம் தொழிற்புரட்சியின் முதல் படின்னு யாராவது சொன்னா, அதுல ஆச்சரியப்பட ஒண்ணும் இல்லை!" என்கிறார் சுரேந்தர்.
“படிப்பைப் பாதியில விட்ட உங்ககிட்ட, இன்னிக்கு 25 பேர் வேலை பார்க்கிறாங்க. ‘அடடா... நாமளும் படிப்பை கன்டினியூ பண்ணியிருக்கலாமே'ன்னு எப்பவாவது உங்களுக்குத் தோணியிருக்கா?” என்று கேட்டால் “இல்லவே இல்லை” என்கிறார்.
“ஆரம்பத்துல அப்பா அம்மா கொஞ்சம் மனசு கஷ்டப்பட்டாங்க. எனக்கு வேலை கிடைச்ச விஷயத்தை சொன்னப்பகூட அவங்க சந்தோஷப்படலை. இருந்தாலும் நான் எனக்குப் பிடிச்ச விஷயத்தை பண்ணிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல அவங்களுக்கும் என் வொர்க் மேல நம்பிக்கை வந்துச்சு...” என்று சிரித்தவரிடம் “பரவாயில்ல விடுங்க. பில் கேட்ஸ் கூடத்தான் காலேஜ் படிப்பை பாதியில விட்டாரு. அவர்தானே உங்க ரோல்மாடல்..?” என்றால், “அய்யோ... நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை தலைவா. ஆனா, எனக்கு எலான் மஸ்க் ரொம்பப் பிடிக்கும். அவரை மாதிரியே புது புதுசா ஏதாவது கிரியேட் பண்ணனும்னு ரொம்ப ஆசை!" என்று விடைகொடுக்கிறார் சுரேந்தர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago