சென்னை இளைஞரின் மீட்பு ட்ரோன்கள்!

By முகமது ஹுசைன்

உத்தராகண்ட்டின் சமோலி மாவட்டத்திலிருந்த நந்தாதேவி பனிப்பாறை சரிவால் அலக்நந்தா, தவுலிகங்கா ஆகிய ஆறுகளில் கடந்த 7ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல், நீர்மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன. இந்தப் பேரழிவில் 35 பேர் உயிரிழந்தனர், 170 பேரைக் காணவில்லை.

ஜோஷிமத் பகுதியிலிருக்கும் என்.டி.பி.சி நிறுவனத்தின் தபோவன் நீர்மின் உற்பத்தி நிலையச் சுரங்கம், சேற்றாலும் இடிபாடுகளாலும் மூடிவிட்டது. அந்த சுரங்கத்துக்குள் பணியிலிருந்தவர்களையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த மீட்புப்பணியில் சென்னையைச் சேர்ந்த அக்னீஷ்வரின் ‘கருடா ஏரோ ஸ்பேஸ்’ நிறுவனத்தை ‘தேசிய பேரிடர் மீட்பு படை’ ஈடுபடுத்தியுள்ளது. இந்த மீட்புப் பணியில், தான் உருவாக்கிய ட்ரோன்களின் மூலம் அக்னீஷ்வர் அளித்துவரும் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல; வருங்காலத்துக்கான வழிகாட்டியும்கூட.

மாத்தி யோசி

வெளிநாடுகளில் ட்ரோன்களின் பயன்பாடு ஆக்கபூர்வமானதாக இருந்தாலும், இந்தியாவில் அது இன்னும் பொழுதுபோக்குக் கருவியாகக் கருதப்படும் நிலையே உள்ளது. இந்தியாவில் ட்ரோன்களை அதிகம் பயன்படுத்துபவர்களாக ஒளிப்படக் கலைஞர்களே உள்ளனர். ட்ரோன்களை, நம்முடைய சமூகத்தின் மேன்மைக்குப் பங்களிக்கும் ஒன்றாக ஏன் மாற்றக்கூடாது என்று அக்னீஷ்வர் நினைத்தார். அந்த எண்ணத்தின் விளைவால் உருவானதே, அவருடைய கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம்.

யார் இவர்?

அக்னீஷ்வரின் பள்ளிப் பருவம் ஏழ்மையும் எளிமையும் சூழ்ந்த ஒன்றாகவே இருந்துள்ளது. படிப்பில் மட்டுமல்ல; சிறுவயது முதலே அவருக்கு நீச்சலிலும் ஈடுபாடு அதிகம். நீச்சல் போட்டிகளில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள அவர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கமும் வென்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலும், ஹார்வர்டில் முதுநிலை வணிக நிர்வாகத்திலும் பட்டம்பெற்ற அவர், கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார்.

தன்னுடைய நிறுவனத்தின் செயல்பாடுகளையும் தன்னுடைய கண்டுபடிப்புகளின் நோக்கத்தையும் மக்களின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் வடிவமைத்துள்ளார். உழவர்களுக்கு உதவும் வகையில், தன்னுடைய ட்ரோன்களை மிகக் குறைந்த வாடகையில் பயன்படுத்த அனுமதித்திருக்கிறார். இதன் காரணமாக, வேதிப்பொருள்களால் ஏற்படும் தீங்குகளிலிருந்தும் உழவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கோவிட் பெருந்தொற்றின்போது சாலைகளின் மீதும், கட்டிடங்களின் மீதும் கிருமிநாசினி தெளிக்க இவருடைய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

மீட்புப் பணியில் கருடா

உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கு மீட்புப் பணியின்போது, திடீரென தவுலிகங்கா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், தபோவன் சுரங்கப்பாதையில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தேசிய பேரிடர் மீட்புக் குழு திணறியது. இந்தச் சூழலில்தான், அக்னீஷ்வர் அழைக்கப்பட்டார்.

அழைப்பு வந்தவுடன், தன்னுடைய குழுவுடனும் ட்ரோன்களுடனும் உத்தராகண்டுக்கு அக்னீஷ்வர் விரைந்தார். பேரிடர் மட்டுமல்ல; அதற்கு பிந்தைய மீட்பு காலமும் ஆபத்தானது; சவால்மிக்கது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களின் உயிரைக் காப்பது, மீட்புப்பணியைவிட முக்கியமானது. இந்தச் சூழலில்தான், ஆளில்லாமல் இயங்கும் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறுகிறது.

இந்த மீட்புப் பணியில் அக்னீஷ்வர் மூன்று வகையான ட்ரோன்களைப் பயன்படுத்துகிறார். முதல் வகை, வெப்பநிலையை உணர்வதன் மூலம், இடிபாடுகளினுள் அகப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டறிய உதவுகிறது. இரண்டாம் வகை, அந்த மனிதர்களுக்கு நிவாரண பொருள்களை அளிக்க உதவுகிறது. மூன்றாம் வகை, ஜோஷிமத் பகுதியில் துண்டிக்கப்பட்ட மின் கம்பிகளை இணைக்க உதவுகிறது.

உயிருக்கு ஏது விலை?

தொழிலாளர்கள் சிக்கிய சுரங்கம், 1,500 மீட்டர் நீளம் கொண்டது. இதுவரை 120 மீட்டர் தூரத்துக்கு இடிபாடு அகற்றப்பட்டுள்ளது. இன்னும் 100 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றிவிட்டால், தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்து விடலாம் என்கிற நம்பிக்கையுடன் அக்னீஷ்வரின் குழு நம்பிக்கையுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த மீட்புப் பணியை அக்னீஷ்வர் குழு இலவசமாக மேற்கொண்டுவருகிறது. இது குறித்துக் கேட்டபோது, “உயிருக்கு விலை நிர்ணயிக்க முடியுமா?” என்று அர்த்தத்துடன் கேள்வி எழுப்புகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்