'நல்லா ஆத்துறாங்கய்யா சொற்பொழிவு...' என்று கடந்து சென்றுவிட முடியாத உரையாடல் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘டெட் டாக்ஸ்!'
தான் எதையேனும் சாதித்திருப்பதாகக் கருதும் மேதைகள் முதல் ‘இங்க பேசிட்டா போதும். எதையாவது சாதிச்ச மாதிரிதான்' என்று கருதும் கத்துக்குட்டிகள் வரை பலரும் தங்களின் அனுபவங்களை, கற்ற பாடங்களை, ஆலோசனைகளைச் சொல்ல ‘நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா' என்று ஏங்கும் ஒரு நிகழ்ச்சி உலகில் இருக்கும் என்றால்... அது நிச்சயம் ‘டெட் டாக்ஸ்'தான். அதாவது டெக்னாலஜி, என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசைன் உரையாடல்கள் (Technology, Entertainment & Design - TED Talks).
‘இன்னைக்கு எல்லோரும் பேசறாங்க. ஆனா எத்தனை பேர் கேட்கிறாங்க..?'
இந்தக் கேள்வி ரிச்சர்ட் சால் வர்மேன் மனதில் 1984-ம் ஆண்டு எழுந்திருக்கக் கூடும். ஒருவர் பேசி, அதனை இன்னொருவர் கேட்டு, பின்னர் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும்போதுதான் ஒரு நல்ல சிந்தனை மேலும் மேலும் வளரும். பல்கிப் பரவும்.
"யெஸ்... ‘ஐடியாஸ் வொர்த் ஸ்ப்ரெடிங்!' இதுதான் ‘டெட் டாக்ஸ்' நிகழ்ச்சியின் மையக் கருத்து!" என்று ஆரம்பிக்கிறார் ஷ்யாம் சுந்தர். சென்னையில் இத்தகைய ‘டெட் டாக்ஸ்' நிகழ்ச்சிகளை நடத்தும் ஒருவர் இவர்.
அந்த டீமில் ஷ்யாம் சுந்தருடன் கைகோர்த்து நிற்பது விஷ்ணு, கிருஷ்ணா, ஹரிஷ், சாய் வினய், ரித்திகா, அனு மற்றும் ஸ்மிருதி.
ஷ்யாம் ஒரு பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். விஷ்ணு மற்றும் ரித்திகா சொந்தமாக ‘ஸ்டார்ட் அப்' ஒன்றை நடத்துகிறார்கள். அனு ஒரு ஆர்ட் தெரப்பிஸ்ட். கால்நடை மருத்துவராகப் பணியாற்றுகிறார் ஸ்மிருதி. சாய் வினய் தனியார் நிறுவனம் ஒன்றில் மக்கள் தொடர்பாளராகப் பணிபுரிகிறார். கிருஷ்ணா மற்றும் ஹரிஷ் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்.
இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்த மையப் புள்ளி ‘டெட் டாக்ஸ்!'.
இப்போது இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சென்னையில் வரும் 15-ம் தேதி ‘டெட் எக்ஸ் யூத் அட் நேப்பியர் பிரிட்ஜ்' (TEDxYouth@Napier Bridge) என்ற தலைப்பில் ‘டெட் டாக்' நிகழ்ச்சி ஒன்றை ஐ.ஐ.டி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில் நிகழ்த்த உள்ளார்கள்.
இந்தியாவிலேயே முதன்முறையாக இலவசமாக நடத்தப்படும் ‘டெட் டாக்' இது என்பது கூடுதல் சிறப்பு!
"அது என்ன நேப்பியர் பிரிட்ஜ்...?" என்று கேட்டதற்கு ஷ்யாம் சொன்ன பதில் "டெட் எக்ஸ்' நிகழ்ச்சியை அந்த நிகழ்ச்சி நடத்தப்படும் ஏரியா பேரை வெச்சு நடத்தலாம். சென்னையின் பழமையையும் புதுமையையும் இணைக்கும் நேப்பியர் பாலத்துக்கு ஒரு வளமான வரலாறு உண்டு. அதனால இந்த முறை நடக்குற நிகழ்ச்சிக்கு நேப்பியர் பிரிட்ஜ் பெயரையே வெச்சுட்டோம்".
1984-ம் ஆண்டு ரிச்சர்ட் மற்றும் அவரது நண்பர் ஹாரி மார்க்ஸ் ஆகியோர் இணைந்து அமெரிக்காவில் முதல் ‘டெட் டாக்ஸ்' நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆரம்பத்தில் சிலிக் கான் பள்ளத்தாக்கின் எதிர்காலம் குறித்துக் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது. பின்னாளில், இதர அறிவியல், கலாச்சார மற்றும் கல்வி சார்ந்து உரையாடல்கள் நடைபெற்றன.
"'டெட் டாக்ஸ்' நிகழ்ச்சி ரெண்டு வகையா இருக்கு. ஒண்ணு, ‘டெட் டாக்'. இது எப்பவும் கனடா நாட்டில் வருஷா வருஷம் நடக்கும். இன்னொன்னு, ‘டெட் எக்ஸ்' நிகழ்ச்சி. இதை யார் வேணும்னாலும், எந்த நாட்டில் வேணும்னாலும் நடத்தலாம். ஆனா, இதை நடத்துறதுக்கு ‘டெட்' அமைப்புகிட்டயிருந்து முறையா அனுமதி வாங்கணும்" என்று சொல்லும் ஷ்யாம், 2014-ம் ஆண்டு ‘டெட் எக்ஸ் துரைப்பாக்கம்' எனும் நிகழ்ச்சியை முதன்முதலில் நடத்தினார்.
அவரின் ஆர்வத்துக்குக் கிடைத்த பரிசாக, அந்த ஆண்டு டிசம்பரில் கனடாவில் நடந்த ‘டெட் டாக்' நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார். உலகளவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ‘டெட் எக்ஸ்' நிகழ்ச்சியை நடத்தும் 15 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட இருவரில் இவர் ஒருவர்.
"ஆரம்பத்துல இந்த மாதிரி ‘டெட் டாக்' எங்க ஊர்ல நடத்தணும்னு அந்த அமைப்புகிட்ட கேட்டப்போ, ‘உனக்குப் புகழ் கிடைக்கணும்னு இந்த நிகழ்ச்சிய நடத்த ஆசைப்படுகிறியா'ங்கற ரீதியில நிறைய கேள்வி கேட்டாங்க. அதுக்கெல்லாம் உண்மையா பதில் சொன்னதுனால எனக்கு ‘டெட் எக்ஸ்' நிகழ்ச்சி நடத்த ‘லைசென்ஸ்' கிடைச்சுச்சு.
அப்புறம் அவங்க, கனடாவுக்குக் கூப்பிட்டாங்க. போய்ட்டு வரணும்னா 5 லட்ச ரூபா செலவாகும். என்கிட்ட ஏது அவ்வளவு பணம். இல்லைங்க முடியாதுன்னுட்டேன். ஆனா, ‘உங்களுக்கு பில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் ஸ்காலர்ஷிப் கொடுப்பாங்க. அதனால தைரியமா நீங்க வரலாம்'னு சொன்னாங்க. இப்படி ஆரம்பிச்சதுதான் எங்க பயணம்.
இந்த நிகழ்ச்சியை நடத்தணும்னா பேச்சாளர்களைக் கூட்டிட்டு வர்றது, அவங்களுக்கான தங்கும் செலவு, விளம்பரம்னு அதுக்கு நிறைய செலவாகும். அதனாலதான் இந்தியாவுல ரொம்பக் குறைஞ்ச அளவுல ‘டெட் எக்ஸ்' நிகழ்ச்சிகள் நடக்குது.
நாம ஏன் இலவசமா இந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாதுன்னு யோசிச்சோம். சில ஸ்பான்சர்ஸ் முன்வந்தாங்க. இதோ வர்ற 15-ம் தேதி காலைல 8.30 மணியில இருந்து மாலை 4.30 மணி வரைக்கும் நிகழ்ச்சி நடக்கப்போகுது.
இதுல என்ன ஸ்பெஷல்னா, பேச்சாளர்கள் யாரும் நேர்ல வரப்போற தில்லை. இந்த நிகழ்ச்சி 14-ம் தேதி ப்ரூக்ளின்ல நடக்கப்போகுது. அங்க 28 பேச்சாளர்கள் பேசப் போறாங்க. அவங்க பேசுனதை ரெக்கார்ட் பண்ணி அடுத்த நாள் இங்க நாங்க ஒளிபரப்பப் போறோம். இதனால இந்த நிகழ்ச்சியை குறைஞ்ச செலவுல நடத்த முடியும்" என்று நிறுத்தினார்.
இந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் 120 பேர் மட்டும்தான் அமர முடியும் என்பதால், இவர்கள் தங்கள் வலைதளம் மூலமாக ஒரு நேர்முகத் தேர்வை நடத்தியிருக்கிறார்கள்.
அதன்படி, கடந்த வாரம் சனிக்கிழமை வரை 350 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். அதிலிருந்து 120 பேரை தேர்வு செய்யப் போகிறார்களாம். அவர்களிடம் கேட்கப்பட்ட முக்கியமான இரண்டு கேள்விகள்... ஒன்று, ‘நீங்கள் இதற்கு முன்பு இத்தகைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறீர்களா?'. இரண்டாவது, 'நீங்கள் ஏன் ‘டெட்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள்?'
இதில் முதல் கேள்விக்கு 85 சதவீதம் பேர் ‘இல்லை' என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.
"அப்படின்னா என்ன அர்த்தம்... இந்த நிகழ்ச்சியை நாம இன்னும் பல பேருக்கு, பல இடங்களுக்குக் கொண்டு செல்லணும்ங்கிறதுதானே" என்றார் ஷ்யாம்.
நிறைவாக அவர்கள் அனைவரும் சொன்ன வாசகம் இது: "ஆக, நாங்க என்ன சொல்றோம்னா... இளைஞர்களுக்கு பயன் தரும் வகையில புதுசா ஒரு முயற்சியை ஆரம்பிச்சிருக்கோம். எங்களுக்கு ஆதரவளிக்க, எல்லோரும் நிகழ்ச்சிக்கு வாங்க... வாழ்த்துங்க".
கண்டிப்பா!
ஷ்யாம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago