இளைஞரின் அனுபவம்: வெள்ளம் வருகுது பாரீர்

By சே.மனோகரன்

திருவள்ளூர் மாவட்டத்தில் பெருவாரியான பகுதிகள் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ளதைக் காண முடிகிறது. இதனால் பெருவாரியான மக்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளதையும் உணர முடிகிறது. இந்தப் பேரிடருக்கு யார் பொறுப்பு?

இங்கு கூவம், கொசஸ்தலை மற்றும் ஆரணியாறு என‌ மூன்று பிரதான ஆறுகள் ஓடுகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இம்மூன்று ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்ற காட்சி கண்ணுக்கு விருந்தாக இருந்தாலும், பல்வேறு காரணிகளால் மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் ஆகியவற்றின் கொள்ளளவுக்கு மேல் நீர் நிரம்பி வீணாகப் போவதையும், வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதையும் பார்க்கும்போது மனம் வருந்துகிறது.

அம்மாவட்ட ஆட்சியர் இம்மாதம் 23-ம் தேதி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையின்படி, மாவட்டத்தில் இதுவரை பொழிந்த கன மழையின் விளைவாக 14,000 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். 10 பேர் உயிர் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகமே இல்லாமல் இது ஒரு பேரிடர்தான்!

வரும்முன் காப்போம்!

தமிழ்நாட்டின் நீர் வளங்கள் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களுடைய உயிர் நாடியாகும். விஞ்ஞானிகள் கண்டுபிடித்துச் சொல்வதற்கு முன்பே நம் முன்னோர்கள் தமிழ்நாட்டின் புவியியல் வரலாற்றை அறிந்துகொண்டு, மேற்கிலிருந்து கிழக்குத் திசைக்கு அமைந்துள்ள சரிவைக் கணித்து தொடர் ஏரிகளையும் கண்மாய்களையும் குளங்களையும் உருவாக்கித் தங்களுடைய அனுபவ அறிவை வெளிப்படுதியுள்ளார்கள். இவற்றைப் பாதுகாப்பது நம் அனைவருடைய கடமையாகும். இவற்றை நாம் பாதுகாக்கத் தவறிவிட்டதுதான் இப்பேரிடருக்குப் பிரதான காரணமாக பெருவாரியான நீரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 39,200-த்திற்கும் மேலான‌ ஏரிகள், கண்மாய்கள் உள்ளன. இவை அனைத்தும் மக்களின் பாரம்பரிய சொத்து.

இந்த ஏரிகளைச் சரியான முறையில் பராமரித்துவந்தாலே போதும், நாம் ஏறத்தாழ 348 டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 70 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 244 டி.எம்.சி. மட்டுமே. அணைகளைவிட நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற பாரம்பரியமிக்க ஏரிகளின் கொள்ளளவு அதிகமாக இருப்பினும், இவற்றை நாம் அனைவரும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய காரணத்தால் இன்று பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்கள் ஏரிகளை மறந்துவிட்டார்கள் என்பதும் நீராதாரங்கள் அலட்சியப்படுத்தப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமென்று கூறலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1,236 ஏரிகள் உள்ளன. இவற்றில் பெருவாரியான ஏரிகள் (765-க்கும் மேற்பட்டவை) கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக முழுக் கொள்ளளவை அடைந்துள்ளன என்று அரசு தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள ஏரிகள் 50 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன.

ஆனால், மக்களின் கருத்து சற்றே வித்தியாசப்படுகிறது. ‘திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் கொள்ளளவு பல்வேறு காரணங்களால் குறைக்கப்பட்டிருப்பதை வெட்ட வெளிச்சமாகக் காண முடிகிறது' என்பதுதான் மக்களின் கருத்து.

நஞ்சை, புஞ்சை என விவசாய நிலங்களில் வீட்டு மனை வியாபாரம், பல நீராதாரங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டப்பட்டிருப்பது, அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகரங்களின் கழிவை கிராமப் புறங்களிலுள்ள நீராதாரங்களில் கொட்டுவது போன்றவற்றால் ஏரிகளின் கொள்ளளவு குறைகிறது. சில சமயங்களில் ஏரிகள் காணாமலேயே போய்விடுகின்றன.

மற்ற மாவட்டங்களைவிட அதிகமான அளவுக்கு, இங்கு பெருவாரியான ஏரிகளின் நீர் தேக்கப் பகுதிகள், நீர்ப் பிடிப்புப் பகுதிகள் மற்றும் நீர் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதைக் காணலாம். ஒரு ஏரியின் அடிப்படை அடையாளமே அந்த ஏரியின் பரந்து விரிந்து காணப்படும் நீர் தேக்கப் பரப்பளவு, வலுவான ஏரிக்கரை மற்றும் வரத்துக் கால்வாய் ஆகியவையே. இந்த அடையாளங்கள் வெகு வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன‌ என்பதே நிதர்சனமான உண்மை.

இவை மட்டுமின்றி ஏரிகளில் சீமைக் கருவேலம் மற்றும் காட்டாமண‌க்கு, ஆறுகளின் அருகே அமைந்துள்ள ஏரிகளில் மணல் திருட்டு, பல ஆண்டுகளாக தூர்வாராதது போன்ற காரணங்களால் ஏரி இருக்குமிடமே மறைந்துவிட்டது.

உழவுக் காலாச்சாரம் அழிந்துவருவதே நீராதாரங்களின் மீது மக்களுக்கிருந்த பற்று குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

தீர்வு என்ன?

சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் இம்மாதம் 23-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரைக்கும் பெய்யும் சராசரி மழையின் அளவு 44 செ.மீ. ஆனால் இவ்வாண்டு அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து இதுவரை (நவம்பர் 23-ம் தேதி) பெய்திருக்கும் மழையின் அளவு 47 செ.மீ. ஆகப் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது 90 நாட்களில் பெய்யவேண்டிய மழை 53 நாட்களில் பெய்துள்ளது. இம்மாதிரியான பருவநிலை மாற்றங்களை இனி நாம் தொடர்ந்து எதிர்பார்க்கலாம். கடந்த காலங்களில் தெரிந்தோ தெரியாமலோ நிகழ்த்தப்பட்ட தவறுகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொண்டு மறுசீரமைப்புப் பணிகளைத் திட்டமிடுதல் அவசியம்.

நீராதாரங்களைப் பாதுகாத்து ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நம் மூதாதையர்கள் உருவாக்கிய அமைப்புதான் ‘குடிமராமத்து'. இதன் மூலமாக உருவாக்கப்பட்ட நீர் ஆதாரங்களை மக்களே ஆளுமை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நிறுவப்பட்டதுதான் குடிமராமத்து.

மக்களுக்கும் நீராதாரங்களுக்கான பாரம்பரிய உறவு புதுப்பிக்கப்படுவதன் மூலமாகவும், நீர் மேலாண்மையை ஜனநாயகப்படுத்துவத‌ன் மூலமாகவும் எஞ்சி இருக்கின்ற நீராதாரங்களை மீட்டெடுக்க முடியும். இதற்கான முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன. அவை அதிக அளவில் நடைபெற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

(கட்டுரையாளர் நீர் வள மேலாண்மை குறித்து ஆய்வு செய்துவருகிறார்).‍‍

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்