உறவுகள்: நீங்கள் பரிசுக்குரியவர்!

By பிருந்தா ஜெயராமன்

நான் 22 வயது இளைஞன். கல்லூரி ஒன்றில் முதலாண்டு இளநிலை ஆங்கில இலக்கியம் படித்துவருகிறேன். எனக்கு இப்போதிருக்கும் கல்வி முறை பிடிக்காததால், நான் ஏற்கெனவே இரண்டு கல்லூரிகளிலிருந்து படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டேன். ஆனால் குடும்பத்தின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன்.

என் 10 வயதிலிருந்தே நான் ஆங்கிலத்தில் கவிதை எழுதப் பழகிக்கொண்டேன். என்னுடைய 16வது வயதில், நானே எனது சொந்த முயற்சியில் உயிரியல் மற்றும் இயற்பியல் பாடங்களைக் கற்று, சின்னச் சின்னதாக ஆய்வுகள் செய்யத் தொடங்கினேன்.

இருந்தாலும், என்னால் ஏனோ எனது பேராசிரியர்கள் மற்றும் இந்தச் சமூகத்துடன் ஒத்துப்போக முடியவில்லை. இதனால் பலமுறை நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். ஆனால் அதிலும் எனக்குத் தோல்வியே மிஞ்சியது.

இந்தப் பிரச்சினைகள் தவிர எனக்கு கண் வியாதியும் உண்டு. எனினும் நான் கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதிவருகிறேன். என்னுடைய எண்ணங்களைப் பிறருக்கு எப்படிப் புரிய வைப்பது என்பது தெரியவில்லை. என்னை நான் எப்படி மாற்றிக்கொள்வது? இந்த நிலையில் இருந்து நான் எப்படி கடந்து வருவது? தயவு செய்து எனக்கு ஆலோசனைகள் வழங்கவும்.

பிறரை மாற்றுவது நடக்காது. நம்மைத்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று புரிகிறது உங்களுக்கு. பாதிக் கிணறு தாண்டிவிட்டீர்கள். மீதி தாண்டுவது கடினமல்ல, பிரச்சினை எங்கே என்று தெரிந்துவிட்டால்!

உங்களுக்குக் கற்றுக்கொள்ளும் திறனும், படைப்பாற்றல் திறனும் நிறையவே இருக்கின்றன அல்லவா? விரைவாகக் கற்றுக்கொள்வதால், ஆசிரியர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கையில், நிலைகொள்ளாமல் தவிக்கிறீர்களா (restless)? பாடத்திட்டங்கள் உங்களுக்குச் சவாலாக இல்லாததால் ஆர்வம் குறைந்துவிடுகிறதா? உங்களுடைய அறிவுத்திறன் தொடர்ந்து தீனி கேட்டுக்கொண்டே இருக்கிறதா? நீங்கள் விளக்குவதெல்லாம் நண்பர்களுக்குப் புரியவில்லையா?

அப்படியென்றால், நீங்கள் ஒரு ‘கிஃப்டட்' (Gifted) குழந்தையாக (தன் வயதினரைவிட அறிவுத்திறன்- I.Q. கூட உள்ள குழந்தை) இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம் நாட்டில் கிஃப்டட் குழந்தைகளுக்கு ஏற்ற பாடத்திட்டம் இல்லாததால், இந்தக் குழந்தைகள் தேக்க நிலையை அடைந்துவிடுகிறார்கள்.

பெற்றோரும் ஆசிரியர்களும் இவர்களது திறமையை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், உதவாதது மட்டுமில்லை, குறை சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். இதனால் கிஃப்டட் வகையைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருக்கிறது.

தற்கொலை எண்ணங்கள் அவ்வப்போது எட்டிப் பார்க்கின்றன. சாதிக்கப் பிறந்தவர் நீங்கள். பாதை தெரியாமல் நின்றுவிட்டீர்கள். முதலில் நீங்கள் கிஃப்டட்தானா என்று தெரிந்துகொள்ள ஒரு ‘க்ளினிகல் சைகாலஜிஸ்ட்டை' சந்தியுங்கள். இது உறுதியானால், அமெரிக்காவில் உள்ள‌ மென்ஸா பவுண்டேஷன் (Mensa Foundation) எனும் அமைப்பை ஆன்லைன் மூலம் அணுகி உங்கள் திறனுக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

சைகாலஜிஸ்ட் நீங்கள் கிஃப்டட் அல்ல என்று சொல்லிவிட்டால், ஒரு உளவியல் ஆலோசகரைச் சந்தியுங்கள். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.

என் வயது 25. நான் என் உறவுக்காரப் பெண்ணைக் காதலிக்கிறேன். எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சரியாகிவிடும். அவரின் பெற்றோருக்கு நாங்கள் காதலிப்பது தெரிந்துவிட்டது.

அவரின் பெற்றோருக்கு என் பெற்றோரைப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு அவர்களின் பெண்ணைத் திருமணம் செய்துவைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். தவிர, எங்களை மிகவும் கீழ்த்தரமாகப் பேசுகிறார்கள்.

நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் எம்.காம் படித்துவிட்டு, தற்போது சென்னையில் ரூ.13,300 சம்பளத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன்.

தனது புராஜெக்ட் பணிகளுக்காக அந்தப் பெண் சென்னைக்கு வந்தார். அப்போது நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டோம். விடுமுறை நாட்களில் வெளியில் சென்றுவிட்டு வருவோம். அதுவும் அவரின் வீட்டுக்குத் தெரிந்துவிட்டது.

இப்போது அவர், நேர்முகத் தேர்வுக்குக்கூட சென்னைக்கு அனுப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளார். அவரின் செலவுகளுக்குக் கூட‌ அவரின் தந்தையையே எதிர்பார்த்திருக்கிறார். 'நீ எது வேண்டுமானாலும் கேள். நான் வாங்கித் தருகிறேன். ஆனால் பணம் மட்டும் தரமாட்டேன்!' என்று சொல்கிறாராம். நாங்கள் இருவரும், குறுஞ்செய்திகள் மூலமாகவே பேசிக் கொண்டிருக்கிறோம்.

எப்போது என்னுடன் குறுஞ்செய்தி மூலம் பேசினாலும், அவர், ‘உன்னால்தான் என் வாழ்க்கை வீணாகிவிட்டது' என்று கூறுகிறார். ‘நாம் பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம்' என்று கூறினால் அதற்கும் அவர் சம்மதிக்க மறுக்கிறார்.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள். ப்ளீஸ்...

உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை உங்கள் ஒருவருக்குத்தான் உண்டு. என்னுடைய அலசல் உங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்குமென்றால், குழப்பம் தீரும்!

உன்னால்தான் என் வாழ்க்கை வீணாகிவிட்டது எனும் கருத்துக்கு அடிப்படை என்ன? உங்களின் காதலிக்கும் உங்களுக்கும் அடிக்கடி வரும் சண்டையின் தொடர்ச்சியா அது? காரணம் எதுவானாலும், ஒருவரை ஒருவர் சாடி நடக்கப்போவது என்ன? காதல் தீவிரமாக இருந்தால், நான், நீ என்பது நாம் என்பதில் மறைந்து விடாதா? அவர் வாழ்க்கை வீணாகும்போது உங்கள் வாழ்க்கையும் அதோடு சேர்ந்து வீணாகாதா?

இன்று வீட்டில் பிணைக்கைதி போல் காதலி வாட, நீங்கள் கையாலாகாதவர் போல் கட்டுண்டு இருக்கிறீர்கள். தடைகளை உடைத்தெறிந்து பதிவுத் திருமணம் செய்ய அவர் தயாராக இல்லை. காத்திருப்பது ஒன்றுதான் இப்போது உங்களுக்கு உகந்த தேர்வு. காதலிக்கு?

ஒத்துழையாமை ஒன்றுதான் நடைமுறைப்படுத்தக் கூடியது. காத்திருக்கும் காலத்தில் உங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள மேலும் ஏதாவது படித்து, இன்னும் சிறந்த ஒரு வேலையில் அமரும் முயற்சியில் ஈடுபடுங்கள். உங்களது காதலுக்கு அவர் தகுதி உள்ளவரா? யோசியுங்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை நீங்கள் ஒரே எண்ணத்தில் இருக்கிறீர்கள். ஆனால் அவர்? நிறம் மாறிக்கொண்டே இருக்கிறார். குறுஞ்செய்திகளில் ‘உன்னால் போச்சு என் வாழ்க்கை' என்று புலம்பும் காதலியைத் துரத்தித் துரத்திக் காதலித்து நீங்கள் மணம் செய்துகொண்டால், சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா?

விமானப் பயணம் போன்றது காதல் பயணம். பாதியில் இறங்க முடியாது. யோசித்து முடிவெடுங்கள். நாம் காதலிப்பவரைவிட நம்மைக் காதலிப்பவரை மணப்பது நல்லது-மகிழ்ச்சி நிச்சயம்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

மேலும்