வாழ்க்கை முக்கியம் - வேர்கள் பாடம்!

By யுகன்

எட்டாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்காக படிப்பைத் தாண்டி கலை, பொது அறிவு, பிரச்சினைகளில் முடிவெடுக்கும் திறன், சிறுகதைகளைப் படித்தல், குழுவாகச் சேர்ந்து ஒரு சிறுகதைக்கு உடனடியாக நாடக வடிவத்தைக் கொடுப்பது, புத்திசாலித்தனமான விளையாட்டுகள் இப்படி பல்வேறு திறன்களை வளர்க்கும் முகாமை சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடத்தியது, வேர்கள் கல்வி அறக்கட்டளை. நான்கு நாள் முகாமில், ஒருநாள் நாம் கண்ட நிகழ்வுகளிலிருந்து சில நினைவுத் துளிகள்.

விளையாட்டுப் போட்டியிலிருந்து சில புரிதல்கள்

ஓட்டப் போட்டி நடக்கிறது. இலக்கை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு வீரர் கால் சறுக்கி விழுகிறார். காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவர் குழு அவரைத் தாங்க ஓடிவருகிறது. ஆனாலும் அவர் எழுந்து, ஒரு காலைப் பயன்படுத்தி நொண்டி நொண்டியே இலக்கை அடைகிறார்.

- இந்த ஓட்டப்பந்தயத்திலிருந்து உங்களுக்கு என்ன புரியுது? என்னும் கேள்விக்கு பலவிதமான பதில்கள் குழந்தைகளிடமிருந்து வருகின்றன.

“ரன்னிங் ரேஸ்ல கீழவிழுந்திட்டதால ஒரு வீரரால ஜெயிக்க முடியல, ஆனாலும் குறிப்பிட்ட அந்தப் பந்தய தூரத்தை நொண்டியபடியே அடைகிறார். எந்த தடை ஏற்பட்டாலும், லட்சியத்தை அடைந்தே தீரவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்பது புரிந்தது” என்றான் ஒரு மாணவன்.



என் சிகப்பு பால்பாயிண்ட் பேனா

புகழ்பெற்ற கல்விச் சிந்தனையாளர் மாடசாமியின் என் சிகப்பு பால்பாயிண்ட் பேனா நூல் வாசிப்பு மாணவர்களிடையே நடந்தது. இடையிடையே வாசிப்பையொட்டி எழுந்த சந்தேகங்களுக்கும் மாணவர்களின் உலகத்தை ஆசிரியர்கள் ஊன்றிப் பார்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆசிரியரின் பால்பாயிண்ட் பேனா அதிகார மையை வெளிப்படுத்துவதைவிட அன்பை வெளிப்படுத்துவதன்மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை எப்படி உயர்த்த முடியும் என்பதை மாணவர்கள் தங்கள் மொழியில் நாடகமாகவே நடித்துக் காட்டிய விதம் அருமையாக இருந்தது.



உள்ளேன்னா வெளியே

டேலன்ட் க்வெஸ்ட் ஃபார் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் மாணவர்களுக்கான திறன் அறியும் பல விளையாட்டுகளையும் செயல்முறை விளக்கங்களையும் அளிக்கின்றது. இந்த அமைப்பின் சார்பாக எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படிக்கும் கீதா, சரவணன், சரஸ்வதி ஆகியோர் பலவிதமான விளையாட்டுப் புதிர்களை நடத்தினர். இதில் ஒரு விளையாட்டு, உள்ளே வெளியே. பெரிய வட்டத்தை தரையில் வரைந்தார்கள். அதற்குள் சிறியதாக மூன்று வட்டங்கள் வரையப்பட்டன.

முதலில் பெரிய வட்டத்துக்கு வெளியே வட்டமாக நின்றார்கள் மாணவர்கள். வெளியே என்று சொன்னால் வட்டத்தின் உள் செல்ல வேண்டும். உள்ளே என்றால் வட்டத்துக்கு வெளியே செல்ல வேண்டும். இதுதான் விளையாட்டு. கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும், போட்டியை நடத்துபவர் வேகமாக சொல்ல ஆரம்பித்த போது, மாணவர்களிடையே அந்த விளையாட்டு சந்தோஷ ரகளையானது.



எப்படி… எப்படி..

தண்ணீரில் தத்தளிக்கும் ஒருவரைக் காப்பாற்றுவது எப்படி, மின்சார தாக்குதலில் சிக்கியவரை காப்பாற்றுவது எப்படி, உடலில் தீப்பற்றியவரை காப்பாற்றுவது எப்படி… இப்படி பல சந்தர்ப்பங்களில் செய்ய வேண்டிய முதல் உதவிகளை செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனத்திலிருந்து வந்திருந்த மணவாளன், செய்முறைகளுடன் விளக்கிக் கூறினார்.

வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்புச் சாவி, கூர்மையான ஆயுதங்கள் கொடுக்கக் கூடாது. சில வினாடிகளில் தானாகவே நின்றுவிடும். வலிப்பு வந்து மயங்கி விழுபவர் மல்லாக்காகத்தான் பெரும்பாலும் விழுவார். அந்த நிலையில் நாக்கு உள்பக்கமாக மடிந்து சுவாசத்தை தடைபடுத்தும். வலிப்பு வந்தவரை ஒருங்களித்து படுக்கவைத்தாலே போதும். இந்த முதல் உதவி தெரியாததால், அவசர சென்னையின் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் வலிப்பு விழுந்த பெண் மரணமடைந்ததை மணவாளன் சொன்னதை நெகிழ்ச்சியோடு கேட்டார்கள் மாணவர்கள்.



கிராம விசிட்

காஞ்சிபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலிருக்கும் ஜம்போடை என்னும் கிராமத்துக்கு ஒரு விசிட் அடித்தார்கள். அங்கு வாழும் மக்களின் தொழில், அன்றாட பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் போன்றவற்றை மாணவர்கள் ஆர்வமுடன் தெரிந்து கொண்டார்கள். கல்வி, மதிப்பெண்களைவிட வாழ்க்கை முக்கியம் என்பதை மாணவர்க உணர வேண்டும் அதுதான் இந்த பயிற்சி முகாமின் நோக்கம்.

“முதல் நாளில் வீட்டு ஞாபகத்தில் இருந்த மாணவி அடுத்துவந்த நாட்களில் முழு ஈடுபாட்டோடு பங்கேற்றது, மைக் பிடித்து பேசவே பயந்த மாணவர்கள், படிப்படியாக தங்களின் கருத்தை மைக்கில் ஆர்வமாகக் கூறுவதற்கு முன்வந்தது… இப்படி நிறைய மாற்றங்களை இந்த பயிற்சி முகாமின் முடிவில் எங்களால் பார்க்க முடிந்தது” என்றார் வேர்கள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரான நளினி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்