ஐ.டி. துறை வேலை என்பதே பலரும் ஆசைப்பட்டு சேருகிற ஒன்றுதான். ஆனால், அங்கேயும் ஆசைத்தீயில் எண்ணெயை ஊற்றி ஊழியர்களை அடிமைப்படுத்தும் வித்தைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால், பல ஐ.டி. ஊழியர்களின் ஆசைகள் நிராசையாகின்றன.
கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக ஐ.டி. தொடர்பான படிப்புகள் பெரியளவில் போணி ஆகவில்லை. ஆனால், 2012-க்கு முன்புவரை அந்தப் பாடப்பிரிவுகளுக்காகவே கல்லூரி வாசல்களை மிதித்தவர்கள் பலர். ஐ.டி.யில் வேலைக்குச் சேர்வது என்னும் ஏக்கமும் ஆசையும்தான் அவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவுக்கான அடிப்படைக் காரணம்.
முதலாம் ஆண்டிலிருந்தே கேம்பஸ் இண்டர்வியூவுக்காக தயாராவது, பெர்சனாலிட்டி டெவெலப்மெண்ட், ஸ்மார்ட் வொர்க்கிங் என்று பல பயிற்சி வகுப்புகளும் அனல் பறக்கும்.
இதுபற்றி ஐ.டி. ஊழியர் மனோஜ் கூறும்போது, "ஐ.டி.யில் எல்லாமே சொகுசு என்கிற பொதுப்புத்திதான் இப்படி அடித்துப் பிடித்து வேலைக்குச் சேர வைக்கிறது.
படித்து முடித்ததும் வேலைக்குச் சேரும்போது, இன்ஸ்பெக்டருக்கு ஏட்டு டீ வாங்கிக் கொடுப்பது போன்ற எடுபிடி வேலைகளுக்கு ஜுனியர் டெவலப்பர், ட்ரெய்னி இன்ஜினியர் என்றெல்லாம் பேர் வைப்பார்கள்.
புது புரோகிராமிங் லாங்குவேஜ் தரும் கோடிங் தொல்லை, டெஸ்டிங் டென்ஷன் என நீளும் தலை வலிக்கு மருந்து தடவும் விதமாக, ‘உங்களுக்கான தொடக்கப்புள்ளி இதுதான், இங்கிருந்துதான் நீங்கள் உங்களது கரியரை ஆரம்பிக்கிறீர்கள். இங்கே ஸ்லிப்பானால் வாழ்க்கையே தப்பாகும். இங்கே நிலைபெற்றுவிட்டீர்கள் என்றால் யு.எஸ், யு.கே என்று செட்டிலாகிவிடலாம்' என்று டீம் லீடர் வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.
ஆனால், அது ஒரு தற்காலிக நிவாரணி என்பது பின்னர்தான் தெரியும். டீம் லீடர் சொல்லும் வார்த்தைகளை நம்பி இழுத்துப் போட்டுக்கொண்டு வேலைகளைச் செய்து முடித்தால், இன்க்ரிமெண்ட் நேரத்தில் நம்மை முன் பின் அறிந்திருக்காத புராஜக்ட் மேனேஜர் ஆயிரம் குறைகளைச் சொல்லி, ‘வளர்ற பையன் திருத்திக்கப்பா, அடுத்தாண்டு வேற ஆஃபர் தர்றேன்’ என்று ட்விஸ்ட் வைப்பார்" என்றார்.
இந்தப் பிரச்சினையில் அனுபவம் கொண்ட இன்னொரு ஐ.டி. ஊழியர் சந்திரபிரகாசம் கூறும்போது, "சென்னை ஒலிம்பியா டெக்பார்க்கில் நான் பணி செய்துவருகிறேன். எனது சம்பளம் ரூ.30 ஆயிரம். ஆனால் சம்பளம் வாங்குகிற அளவுக்கு மனதில் நிம்மதி இல்லை.
தினசரி எங்களுக்கு 8 மணி நேரம்தான் வேலை. காலை 9 மணிக்குச் சென்றால் 6 மணி வரை அலுவலகம் நடக்கும். ஆனால், கடந்த சில ஆண்டு காலமாகவே எனது டீம் லீடர் மாலை 4 மணிக்குத்தான் வருகிறார். தனது மேலதிகாரியைத் தொடர்புகொண்டுவிட்டு எனக்கான டாஸ்க்கை மாலை 6 மணிக்குத் தருகிறார்.
அந்தப் பணியைத் தரும் மெயிலின் முடிவில் EOD (End Of The Day) என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது அந்த வேலையை அன்றைக்குள் முடிக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். பணியை ஆரம்பித்தால் பின்னிரவு 2 ஆகிவிடும்” என்றார்.
பின்னிரவு 2 மணிக்குப் பின் தினசரி தெருநாய்களுடன் போராடி வீடு சேர்வது விதியென்று ஆன பின், வேறு இடம் பார்த்துள்ளார் சந்திரபிரகாசம். அங்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாம். விஷயத்தை தான் பணி செய்கிற நிறுவனத்திடம் சொன்னபோது, அதே சம்பளத்தை 6 மாதத்தில் தருகிறோம், இலவச இணைப்பாக ஃபாரின் ட்ரிப் செல்லலாம் என்றார்களாம். ஆனால், அதை சந்திரபிரகாசம் ஏற்கவில்லை. அவருக்கு நெருக்கமான பலர் அதே வார்த்தைகளை நம்பி, ஏமாந்ததுதான் அதற்கு காரணம் என்றார்.
சரி. அப்படியே வெளிநாட்டுக்குச் செல்கிற வாய்ப்புகள் கிடைத்தாலும், ஃபிளைட் ஏறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அதை ரத்து செய்கிற வேலைகளும் நடக்குமாம்.
2010, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் நிறுவன வேலைக்காகத் தொடர்ந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ள கிருஷ்ணராஜன் என்னும் ஐ.டி. ஊழியர் கூறும்போது, "நான் மூன்று முறை வெளிநாடுகளுக்கு ‘ஆன்சைட்' பணிக்காகச் சென்றிருக்கிறேன். அதேநேரம், ஆன்சைட் வாய்ப்பு கிடைத்து விமான நிலையத்தின் எஸ்கலேட்டர் வரை சென்று திரும்பியவர்களையும் பார்த்திருக்கிறேன். நிறுவனம் ஒருவரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆன்சைட் என்னும் விஷயத்தைச் சில நேரங்களில் கையிலெடுக்கும்.
வெளிநாடுகளில் உள்ள கிளையன்ட்டுகளிடம் வலுவற்ற வர்த்தக உறவை வைத்திருக்கும்போது, ஊழியர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்தாகும். அந்த நிராசையைச் சுமந்து அலுவலகத்துக்கு வருகிறபோது ஊழியர் நடைப்பிணமாகத்தான் இருப்பார்.
நிறுவனம் சார்பாக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்கிறபோது, அத்தனை செலவையும் நிறுவனமே ஏற்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. பெரும்பாலான நிறுவனங்கள் விமான டிக்கெட்டோடு தங்கள் கடமை முடிந்ததாக கழன்று கொண்டுவிடும். வெளிநாடுகளில் தங்குவதற்கு, உண்ணுவதற்கு என்று அனைத்தையையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஒரு தினுசான மனஉளைச்சலை அளிக்கும்” என்றார்.
இந்த ‘ஆன்சைட்' ஆசைக்கு ஒரு ஆப்பு வராதா..?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago