ஊர் கூடி மீன் பிடி

By டி. கார்த்திக்

வற்றும் நிலையில் உள்ள பெரிய குளம். குளத்தைச் சுற்றி திரண்டு நிற்கும் ஊர் மக்கள். ஊர்ப் பெரியவர்கள் வந்தவுடன் தொடங்குகிறது பரபரப்பு. குளத்தில் இறங்கி குஸ்தி போடாத குறையாக ஒருவரையொருவர் முட்டி மோதி முன்னேறுகிறார்கள். இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை என எந்தப் பாகுபாடும் இல்லை. இத்தனை களேபரமும் எதற்குத் தெரியுமா?

மீன்களைப் பிடித்து, அதை விதவிதமாகச் சமைத்து, ஆசை தீர சாப்பிடுவதற்குத்தான். விநோதமாக இருக்கிறதா? இதைத்தான் இன்று மீன்பிடித் திருவிழா என்று பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.

பொதுவாகக் கடலோரங்களில் மீன்பிடித் திருவிழாக்கள் நடப்பது பெரிய விஷயமல்ல. எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் கடலோரங்களில் இத்திரு விழாவை நடத்த வசதியும் வாய்ப்பும் உண்டு. ஆனால், ஊர்ப்புறங்களில் நடக்கும் மீன்பிடித் திருவிழாக்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை அல்ல. ஆண்டில் ஓரே ஒரு முறை மட்டுமே கொண்டாட முடியும். அதுவும் மார்ச் முதல் மே மாதங்களுக்குள்தான்.

ஊரில் உள்ள குளத்திலோ, ஊருணியிலோ, குட்டையிலோ நீர் இருப்புக் குறைந்து கொண்டே வருவதுதான் மீன் பிடித் திருவிழாவுக்கான முதல் அறிகுறி. பொதுவாக நீர் நிலைகள் மார்ச்சில் தொடங்கி மே மாதத்திற்குள் முழுவதுமாக வற்றிவிடும். நீர் வற்றும்போது அதில் வாழும் மீன்களைப் பிடிக்காமல்விட்டால்,அது இறந்து, கருவாடாகி, மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். இப்படி மீன்கள் வீணாக மடிவதைத் தடுக்க கொண்டாடப்படுவதே மீன்பிடித் திருவிழா என்று சிலர் திருவிழா கொண்டாடக் காரணம் சொல்கிறார்கள்.

ஆனால், இந்த விழாவை ஊர் கூடி சாதாரணமாக முடி வெடுத்துவிட முடியாது என்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலைச் சேர்ந்த குமார். “கிராமங்களில் நீர்நிலைகளுக்கென்று சட்டத் திட்டங்கள் உள்ளன. ஊரில் உள்ள கோயில் குளமாக இருந்தாலும் சரி, ஊர் பொதுக்குளமாக இருந்தாலும் சரி, அவை கோயிலுக்கோ, பஞ்சாயத்துக்கோ சொந்த மானதாகவே இருக்கும். குளத்தில் நீர் வற்றும்போது கோயில் நிர்வாகமோ, பஞ்சாயத்தோ கூடி மட்டுமே மீன்பிடித் திருவிழா நடத்த முடியும். அவர்கள் முடிவு செய்த பிறகு, மக்களோடு கூடி ஆலோசிப்பார்கள். இதில் தேதி முடிவானதும் திருவிழாவுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கும்” என்கிறார் குமார்.

கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்குரிய மரியாதை இன்று மீன் பிடித் திருவிழாவுக்கும் கொடுக்கப் படுகிறது. இதற்காகவே ஊரில் உள்ள சொந்த பந்தங்கள் அழைக்கப்படுகிறார்கள். குடும்பமே ஒன்று கூடுகிறது. முன்னேற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தின் அதிகாலையிலேயே ஊர் மக்கள் திரண்டு குளத்தில் குழுமி விடுகிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் குளத்தில் இறங்கி மீனைப் பிடிக்கும் விழாவை தொடங்கியதும் அந்த இடமே களேபரமாகிவிடுகிறது.

மீனைப் பிடிக்க வலை, துணி, தடி, தூண்டிலுடன் வரும் மக்கள் மீனைக் குறி பார்த்துப் பிடிக்கிறார்கள். கையில் எல்லோருக்கும் மீன் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதிர்ஷ்டமும் தேவை. விரைவாக மீன் அகப்பட்டால், கரையேறிவிடுவார்கள். பெண்கள் அதை விருந் தாக்குவதில் மூழ்கிவிடு வார்கள். சுண்டியிழுக்கும் மீன் குழம்பு, நாக்கில் எச்சில் ஊற வைக்கும் மீன் வறுவல் என விதவிதமாக விருந்து தயாராகும். அப்புறமென்ன? சொந்தங்களும் பந்தங்களும் கூடி மீனை ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்.

இந்த விழா புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை எனத் தமிழ் நாட்டின் சில மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் சிலவற்றில் தொன்றுதொட்டுக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ கேளிக்கை நிகழ்ச்சியாகப் பார்க்கப்படும் இந்த விழா பல்வேறு கிராமங்களிலும் பரவி விமர்சையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

“கிராமங்களில் கோயில் திருவிழாவைத் தாண்டி பெரிய விழாக்கள் நடப்பதில்லை. மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் விழா என்றால் அது மீன்பிடித் திருவிழாதான். ஊரில் உள்ள அனைவரும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல், ஈகோ பார்க்காமல் ஒன்றிணைந்து செயல்படுவது இந்த விழாவுக்கே உரிய பெருமை” என்கிறார் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த தர்.

தமிழகத்தில் இனிவரும் கோடைக் காலங்களில் கிராமங்கள்தோறும் மீன் பிடித் திருவிழா நடந்தாலும் நடக்கலாம். யார் கண்டது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்