காலத்தை வென்றவை: ஏ.ஆர்.ரஹ்மான் படித்த இசைப் பள்ளி

By வா.ரவிக்குமார்

சென்னை அண்ணாசாலையின் காதைச் செவிடாக்கும் ஹாரன் ஒலிகளுக்கு மத்தியில் 173 ஆண்டுகளாக இசைக்காக இயங்கிவரும் அமைப்பு - மியூஸி மியூஸிக்கல். இசைக் கருவிகள் விற்பனை, பழுதுபார்த்தல், தயாரிப்பு, இசைப் பள்ளி… என நூறு ஆண்டுகளைக் கடந்து கலைஞர்களுக்கும் வாத்தியங்களுக்குமான இசைப் பாலத்தை இது பலப்படுத்திவருகிறது.

பிரம்மாண்டமான தொடக்கம்

அது 1842-ம் ஆண்டு. பியானோ டெக்னீஷியனும் கலைஞருமான மிஸ்குயித் என்னும் போர்த்துகீசியர் அவரின் பெயரிலேயே மிஸ்குயித் இசைப் பொருள்கள் விற்பனை நிறுவனத்தைத் தொடங்கினார். இது பின்னாளில் 16 கிளைகள்வரை வளர்ந்தது. லாகூரிலும் பினாங்கிலும்கூட இதன் கிளைகள் அன்றைக்கு இருந்தனவாம். மெட்ராஸில் பி.ஆர். அண்ட் சன்ஸ் கட்டிடத்துக்கு அருகில் இந்தக் கம்பெனி முதன்முதலாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் பின் ஸ்பென்ஸர் கட்டிடத்துக்கு எதிரிலும் சில ஆண்டுகள் இருந்தது. மிஸ்குயித் கம்பெனிக்கு பிரான்ஸைச் சேர்ந்த பிரடோம் இயக்குநரானார். இந்தக் காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் மற்ற கிளைகள் மூடப்பட்டன. இவர்தான் மியூஸே (பிரெஞ்சு மொழியில் அரங்கம் என்று பொருள்) மியூஸிக்கல் என்ற பெயரை வைத்தார்.

உருமாறிய யானை கொட்டகை

இவருக்குப் பின் மெட்ராஸ் ராயபுரத்தில் வாழ்ந்துவந்த ஆங்கிலேயப் பெண்மணி அமிர்ருகோரியோ என்பவரின் தலைமையின் கீழ் மியூசி மியூஸிக்கல் வந்தது. மிகச் சிறந்த பியானோ கலைஞரான இவரிடம் அந்நாளில் பிரபலமாக இருந்த பலரும் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டார்களாம்.

1930-ம் ஆண்டில்தான் தற்போது மியூஸி மியூஸிக்கல் இருக்கும் இடம் ஒரு பார்ஸி குடும்பத்தின் வசமிருந்து வாங்கப்பட்டதாம். அப்போது இந்த இடத்துக்குப் பெயர் டின்ரோஸ் எஸ்டேட். அந்தக் காலத்தில் பார்த்தசாரதி கோயிலின் யானைகள் கட்டிவைக்கப்படும் கொட்டகையாக அது இருந்ததாம்.

அமிர்ருகோரியோ நிர்வகித்த மியூஸி மியூஸிக்கலில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்தவர் கிரிதர் தாஸ். இவர்களின் குடும்பம் 250 ஆண்டுகளுக்கு முன்பாகவே குஜராத்திலிருந்து தொழில் நிமித்தமாக மெட்ராஸுக்குக் குடியேறியது. 1938-ல் கிரிதர் தாஸிடமே மியூஸி மியூஸிக்கலை விற்றுவிட்டுத்தான் சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டாராம் அமிர்ருகோரியோ.

115 ஆண்டுகால அங்கீகாரம்

உலகம் முழுவதும் புகழ்பெற்ற லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியின் அங்கீகாரம் பெற்ற 3,000 அமைப்புகள் உள்ளன. அப்படி இந்தியாவில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட மையங்களுள் மூன்றாவது பழமையான அமைப்பு என்னும் பெருமை மியூஸி மியூஸிக்கலுக்கு உண்டு என்கிறார் தற்போது இதன் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் கிஷோர் தாஸ்.

40 ஆண்டு நெருக்கடி

1966-ல் கிரிதர் தாஸ் இறந்துவிட்டார். அதன் பின் அவரின் மகன் அரிசரண்தாஸ் இயக்குநரானார். சுதந்திரத்துக்குப் பின் மேற்கத்திய வாத்தியங்களை இறக்குமதி செய்வதில் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இதையெல்லாம் ஆடம்பரப் பிரிவில் சேர்த்துவிட்டனர். ஏறக்குறைய 40 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் 96-ல் இந்தப் பிரிவிலிருந்து இசைக் கருவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

எவ்வளவு இக்கட்டான நிலையிலும் இசையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் பணியை மட்டும் நாங்கள் நிறுத்தவே இல்லை. எண்ணற்றவர்களுக்குத் தொழில்முறை இசையைக் கற்பித்துவருகிறோம் என்கிறார் கிஷோர் தாஸ். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி இன்றைக்கு இசைத் துறையில் பிரபலமாகியிருக்கும் பலரும் இங்கு படித்தவர்கள்தான் என்று தெரிவித்த கிஷோர் தாஸ், ஹைதராபாத்திலும், பாண்டிச்சேரியிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுவதைக் கவனப்படுத்தினார்.

உலகளாவிய அங்கீகாரம்

மேற்கத்திய இசையைத் தவிர கர்னாடக இசையையும் இந்துஸ்தானி இசையையும் அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு கற்றுத் தருகிறார்கள். இந்திய இசை வடிவங்களுக்கான தேர்வு, பட்டங்களை நம்முடைய பல்கலைக்கழகத்தின் வழியாகவும் மேற்கத்திய இசைக்கான தேர்வை லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி வழியேயும் நடத்துகிறார்கள். லண்டன் டிரினிடி கல்லூரி வழங்கும் பட்டம் உலக அளவில் ஒரு கலைஞருக்கான மிகச் சிறந்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. முதன்முதலாக 1901-ல் லண்டன் டிரினிட்டியின் தேர்வை எழுதியவர்கள் 2 பேர். கடந்த 1997-ம் ஆண்டுவரை 397 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 2015-ல் 12 ஆயிரம் பேர் தேர்வை எழுதியிருக்கிறார்களாம்.

கிஷோர்தாஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்