சென்னையில் இளமைக்குப் பஞ்சமே இல்லை. இந்த நகரத்துக்கு வயது 376 ஆண்டுகள் என்று சொன்னால் யாரும் நம்புவார்களா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் நாளாக நாளாக நகரம் இளமையாகிக்கொண்டேவருகிறது. சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் எப்போதும் ஒரு துடிப்பையும் துள்ளலையும் உணரலாம். இருபத்தி நான்கு மணிநேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கும் இந்த நகரம். இளையவர்களை வாரியணைத்துக்கொள்ளும் நகரமாகவே உள்ளது. அன்று அது பாரதியை அரவணைத்திருக்கிறது; இன்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை வளர்த்தெடுத்திருக்கிறது.
எல்லாப் பெரிய நகரங்களையும் போலவே சென்னையில் இளமையின் கொண்டாட்டத்துக்கான இடங்கள் அதிகம். கொண்டாட்டம் போதுமா? செலவுக்குத் தேவையான வருமானத்தை ஈட்டவும் இங்கே வழிகள் உள்ளன. தினந்தோறும் ரயில்களிலும் பேருந்துகளிலும் வந்திறங்கும் எத்தனையோ பேருக்கு சென்னை தாயுள்ளத்துடன் இடமளிக்கிறது. கனவுகளைச் சுமந்து்வரும் அத்தனை இளைஞர்களுக்கும் ஏதாவது ஒரு வாழ்க்கையை அது தொடர்ந்து அளித்துவருகிறது. அதனால்தான் இந்தப் பெருநகரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டேயிருக்கிறது.
இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க பெருநகரின் மத்தியில் ஸ்பென்சர் பிளாஸா, ஐநாக்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்கை வாக் போன்ற ஷாப்பிங் மால்கள் காணப்படுகின்றன. நகரில் மட்டுமல்ல புறநகர்ப் பகுதிகளிலும் மாயாஜல், ஃபீனிக்ஸ் போன்ற ஷாப்பிங் மால்கள் இளைஞர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
வார நாட்களில் கடுமையாக உழைக்கும் இந்த இளைஞர்கள் வீக் எண்ட்களில் மால்களையும் தீம் பார்க்குகளையும் சுற்றிவருகிறார்கள். திரைப்படம், நாடகம், விளையாட்டு என இவர்கள் கொண்டாட்டத்துக்கான வழிகள் அநேகம். வெறும் கான்கிரீட் கட்டிடங்களில் என்ன உள்ளது, இயற்கையான இடத்துக்கு ஈடு இணையேது எனக் கேட்பவர்களுக்காகவே நீண்டு கிடக்கிறது சென்னை மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகள். இவை போதாதென்று சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் பூங்காங்கள் இளைஞர்களுக்கு ஆசுவாசம் தருவதற்காகத் திறந்து கிடக்கின்றன.
சினிமாவில் சேர வேண்டுமா? கவலை இல்லை. ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டுமா? அதற்கும் இங்கே இடமுண்டு. சாப்ட்வேர் துறையில் முன்னேறவும் வழி உண்டு, விளையாட்டு வீரர்களுக்கும் உரிய களம் உண்டு. நேரம் போவது தெரியாமல் வாசித்துக்கொண்டே இருக்கும் இளைஞர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமரா நூலகம் போன்ற எத்தனையோ நூலகங்கள் அவர்கள் வரவை எதிர்பார்த்து நிற்கின்றன.
உணவுப் பிரியரா, உடையில் ஆர்வமா, கலையில் விருப்பமா, விளையாட்டுத் துறையில் ஈடுபாடா - எது உங்களுக்குப் பிடிக்குமோ அதைச் செய்துகொள்ள இந்த நகரத்தில் வாய்ப்பிருக்கிறது. தன்னை நம்பி வந்த யாரையும் இந்த நகரம் கைவிட்டதே இல்லை. அதனால்தான் கல்லூரியில் படிக்கவும் படித்த பின்னர் வேலைக்காகவும் இங்கே இளைஞர்கள் குவிந்துகொண்டே இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் அனுதினமும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதே இந்தப் பெருநகரின் தனித்துவம். அதனாலேயே இது என்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறது.
சென்னை எனும் கலைடாஸ்கோப்
அறிமுகமாகாதவரை பெருநகரங்கள் நமக்கு ‘பீட்சா’. பிறகு அவை ஆயா சுட்ட தோசைதான்! ‘மெட்ராஸுக்குப் போற. பார்த்துப்பா, அங்க பிக்பாக்கெட்காரங்க ஜாஸ்தி’ என்பதுதான் எனக்கு வழங்கப்பட்ட முதல் அட்வைஸ். உலகத்துக்கு வேண்டுமானால், அது சென்னை. உள்ளத்தில் இன்னும் மெட்ராஸ்தான்!
முதல்முறை சென்னை வந்தபோது 8 வயது. சுற்றுலாவாகச் சென்னை வந்தோம். இரவு நேரத்தில் அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘தொலைஞ்சு போயிருவோமோ’ என்ற பயத்துடன் மெரினா கடற்கரையைப் பார்த்தது, இன்னும் மனதில் அலையடிக்கிறது.
அதன் பிறகு சுமார் 15 வருடங்கள் கழித்துப் பணி நிமித்தம் வந்தபோது சென்னை வரவேற்றறது. சுனாமிக்குப் பிறகான மெரினாவைப் பார்க்கும்போது கொஞ்சம் பயம்தான். ஆயினும், கைகள் கோத்துக் கதையளந்தபடி செல்லும் காதலர்களைப் பார்த்தால், ‘கடல் இனிது’ எனச் சொல்லத் தோன்றுகிறது.
‘இதயம்’, ‘பூவே உனக்காக’, ‘காதல் தேசம்’ போன்ற பல படங்கள்தான் சென்னையை மனத்தில் சித்திரமாக வரைந்துவைத்ததன. ‘அண்ணா சாலையில் எட்டு வண்ண வானவில்’லை நடிகர் காந்த் மட்டுமா பார்த்தார்?
சினிமாவில் இடம்பெறும் சென்னைக்கும், நிஜத்தில் உள்ள சென்னைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும், இப்போதும், எம்.எம்.சி.யைக் கடக்கும்போது, முரளி கையில் டைரியுடன் உலவிக்கொண்டிருப்பது போலவும், எல்.ஐ.சி.கட்டிடத்தின் மீது சூப்பர் ஸ்டார், காரை ஓட்டிக் கொண்டிருப்பது போலவும் தெரியும். அவ்வளவு வெள்ளந்தியான என்னை, பரங்கிமலை ஜோதி தியேட்டருக்கு வழி சொல்லும் அளவுக்குச் சென்னை வளர்த்தது!
‘ஸ்பென்சர் பிளாசா’வில் இருந்த ‘லேண்ட்மார்க்’ புத்தகக் கடைதான் வாசிப்புக்குத் தீனி போட்டது. நுங்கம்பாக்கம் சாலையில் இருந்த அதன் இன்னொரு கிளை மூடப்பட்டது, சென்னை வரலாற்றில் ஒரு சோகம். வரலாறாய் நிற்கும் இன்னொரு புத்தகக் கடை ‘ஹிக்கின்பாதம்ஸ்’!
சென்னையின் அடையாளங்களாக ஒருபுறம் கட்டிடங்கள் இருக்கின்றன என்றால், இன்னொரு புறம் அதன் மனிதர்கள். ஒண்டுக் குடித்தனம் ஒன்றில் வசித்திருந்தபோது, ‘நைட் 7 மணிக்கு மேல துணி துவைக்காதீங்க’ என்று கன்டிஷன் போட்ட வீட்டுக்காரர், மேன்ஷன்களில் பசியைப் போக்கிக்கொள்வதற்கு இரண்டு பட்டர் பிஸ்கட்டும், ஒரு டீயும் மட்டுமே குடித்து வந்த பக்கத்து அறை நண்பர்கள், இன்னும், இன்னும்... நட்பு, காதல், வேலை, துரோகம், வணிகம், மருத்துவம், கல்வி எனப் பலவற்றுக்கும் ‘ஸ்கோப்’ உள்ள கலைடாஸ்கோப் சென்னை!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
56 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago