ஐ.டி.உலகம் 11: ஊதிய உயர்வில் அநீதி!

By எம்.மணிகண்டன், வி.சாரதா

பெல் கர்வ் என்றதும் ஏதோ ஜியாமெட்ரி, ஸ்டேட்டிக்ஸ், கிராஃப் எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறதா. பெல் கர்வ் என்னும் இந்த இரண்டு வார்த்தைகளை வைத்துத் தான் ஊழியர்களின் ஊதிய உயர்வைப் பல ஐ.டி. நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன.

ஒருவர் 100 குதிரைகள் வைத்திருக்கிறார். அதில், 80 குதிரைகள் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியவை. மீதமுள்ள 20 குதிரைகள் கொஞ்சம் நோஞ்சான் வகையறா. குதிரைகளின் உழைப்புக்கேற்ப உணவளிக்க வேண்டிய எஜமானனோ, 30 குதிரைக்குக் கொள்ளும், 50 குதிரைக்குப் புல்லும், 20 குதிரைக்கு இலை தழைகளையும் உண்ணக்கொடுத்தால், அதற்குப் பெயர்தான் பெல் கர்வ்.

இதே குழப்படிதான் ஐ.டி.யில் நடக்கிறது.தொழிலாளர்களிடையே போட்டியை வளர்த்து புரொடக்‌ஷனை அதிகப்படுத்துவதற்கான உத்தியாக அப்ரைசல் சிஸ்டம் உள்ளது என்று பல நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் அப்ரைசல் சிஸ்டம் என்பது உழைப்பைத் தந்திரமாக உறிஞ்சிக்கொண்டு, பெப்பே காட்டும் விஷயம் என்கிறார் ஐ.டி. ஊழியரான பரணி.

அப்ரைசல் சிஸ்டத்தின் அநியாயங்களை அள்ளி வீசுகிறார் அவர். ஒரு புராஜெக்ட் என்றால் 10 முதல் 15 பேர் வரை சேர்ந்து வேலை செய்வார்களாம். அப்படிச் செய்யும்போது கோடிங் எழுதுவதில் நல்ல அறிவு உள்ளவர் அந்தப் பணியை மேற்கொள்வாராம், சிலருக்கு டெஸ்டிங்கில் நல்ல பரிச்சயமிருக்குமாம். சிலருக்கோ வாடிக்கையாளரைக் கையாளும் சூட்சுமம் தெரிந்திருக்குமாம். அவரவர் திறனுக்கேற்ப வேலைகளை மாட்யூலாகப் பிரித்துக்கொண்டு புராஜக்ட்டை ஆரம்பிப்பார்களாம். யாருக்கும் யாரும் சளைத்தவர் இல்லை என்று புராஜக்ட்டை முடிக்கிறபோது, அப்ரைசல் அநியாயங்கள் அரங்கேறுகிறதாகச் சொல்கிறார் அவர்.

பெல் கர்வ் முறைப்படி ஊதிய உயர்வை ஏ, பி, சி, டி, இ என 5 வகைகளில் பிரிப்பார்களாம். ‘ஏ’ பிரிவில் உள்ளவர்கள் எள்ளு என்றால் எண்ணெயாக நிற்கும் பயங்கர திறமைசாலிகளாம். ‘பி’ என்றால் நிறுவனத்தின் எதிர்பார்ப்பையும் தாண்டி சாதித்தவர்களாம். ‘சி’ என்றால் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்பவர்களாம். ‘டி’ என்றால் ஆள் இன்னும் வளர வேண்டும். ‘இ’ என்றால் டம்மி பீஸ். அதாவது, சரியாகப் பணி செய்யாதவர் என்று அர்த்தமாம். இதுதான் பெல் கர்வ் சிஸ்டம் என்கிறார் அவர்.

இப்படிப் பிரிப்பதில் அப்படியென்னதான் சிக்கல் இருக்கிறது என்று நமக்கெல்லாம் சந்தேகம் வரலாம். இப்படி ஏ, பி, சி, டி, இ என்று பிரிப்பதில் சிக்கல் இல்லை. அப்படிப் பிரிக்கப்பட்டவற்றில் இத்தனை பேருக்குத்தான் இடம் என்று நிறுவனங்கள் சொல்வதுதான் சிக்கலாகிறது என்பது பெரும்பாலான ஐ.டி. ஊழியர்களின் குற்றச்சாட்டு.

ஒரு நிறுவனத்தில் 500 பேர் பணி செய்தால், தலை சிறந்த ஊழியர் என்னும் ‘ஏ’ பிரிவுக்கு 10 முதல் 15 சதவீதம் பேர் தேர்வாவார்கள். மீதமுள்ள 85 சதவீதம் பேர்களும், எவ்வளவுதான் கெட்டிக்காரர்கள் ஆனாலும், பி, சி, டி, இ, பிரிவுகளில் கொண்டுவரப்படுவார்கள் என்கிறார் பரணி.

‘பி’ பிரிவில் 15 முதல் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே அப்ரயிசல் வழங்கப்படுமாம். ‘சி’ பிரிவில் 40 முதல் 45 சதவீதம் பேருக்கும், ‘டி’ பிரிவில் 15 முதல் 20 சதவீதம் பேருக்கும் அப்ரைசல் வழங்க வேண்டும்.

இதில் கொடுமை என்னவென்றால், ஒரு நிறுவனத்தில் அத்தனை பேருமே இழுத்து போட்டுக்கொண்டு திறமையாக வேலை செய்தாலும், 5 முதல் 10 சதவீதம் பேரை ‘இ’ என்னும் புவர் பெர்ஃபாமர் வகையில் கொண்டுவர வேண்டும் என்பது பெல் கர்வின் விதி. இதனால் மனதையும் உடலையும் வருத்தி இரவு பகல் பாராது உழைத்த பலரின் அப்ரைசல் கனவுகள் கண்ணீரில் கரைந்திருக்கின்றன என்கிறார் பரணி.

யாருக்கு ‘ஏ’, யாருக்கு ‘இ’ என்பதைத் தீர்மானிப்பதும் மேலாளர்கள்தானாம். அவருக்குப் பிடித்திருந்தால் ‘ஏ’, இல்லையென்றால் ‘இ’. அதிலும், சில ஊழியர்களை நேரடியாகவே அழைத்து, ‘உனக்கு இந்த வருடம் ‘இ’ தான் தர்ரேன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அடுத்த வருடம் பாக்கலாம்’ என்று மேலாளர்கள் வாய் கூசாமலேயே சொல்வார்களாம். எதிர்த்துப் பேசினால் வேலை பணால்.

டி, இ-க்குள் ஊழியர்களை அடக்குவதற்காகச் சந்தையில் பேசுவது போல் பல கட்ட பேரம் நடத்திப் படியவைப்பார்களாம். இங்கு பேரத்துக்கான விலை பணம் அல்ல. அடுத்தாண்டு அதைச் செய்வோம், இதைச் செய்வோம், என்று ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள்தான் பேரத்தின் விலை. எதற்கும் படியவில்லை என்றால், லஞ்ச் சென்றால்கூட அலுவலகத்தில் ஆள் இல்லை என்றும் மேனஜர் வந்தபோது சிபியு ஆனில் இல்லை என்றும் காரணங்களைக் கண்டுபிடித்தோ, உருவாக்கியோ அப்ரைசலை நிறுத்திவிடுவார்களாம்.

இந்த அவலம் ஒழிய, ஊதிய உயர்வில் பெல் கர்வ் என்னும் பெரும்பள்ளத்தை ஒழிக்க வேண்டும் என்பதே பல ஊழியர்களின் கோரிக்கை என்கிறார் பரணி.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்