நான் 2012-ல் பி.இ. முடித்தேன். கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது. ஆனால் குடும்பத்தினர் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதச் சொன்னார்கள். கஷ்டப்பட்டுப் படித்தேன். பயிற்சி வகுப்புக்கும் சென்றேன். எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்று நேர்காணல் வரை சென்று தேர்வாகாமல் திரும்பிவிட்டேன். ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் கஷ்டமாக இருக்கும், அதிகமாக அழுவேன்.
ஆனாலும் அதிக நம்பிக்கையுடன் அடுத்த தேர்வுக்குத் தயாராவேன். என்னிடம் யாராவது ஐ.ஏ.எஸ். தேர்வு கடினமானதா, வேலை கிடைக்குமா என்றெல்லாம் கேட்கும்போது, எளிதாக இருக்கும் என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவேன்.
ஆனால் கடந்த இரு மாதங்களாக மன அழுத்தம் அதிகமாக உள்ளது. அதிகமாகக் கோபப்படுகிறேன், அழுகிறேன். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் இவ்வளவு தேர்வு எழுதியும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. சிறிது சிறிதாக எனது நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இப்போது சுத்தமாக நம்பிக்கையே இல்லை. எந்தத் தேர்வுக்கும் விண்ணப்பிப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை. தனிமையில் அதிகமாக அழுகிறேன். இரவில் ஒழுங்காகத் தூங்க முடியவில்லை. யாருடனும் எதுவும் பேசுவதும் இல்லை.
என் தந்தை நான் வருந்தும்போது ஆதரவாக இருக்கிறார். என்னால் முடியும் என்று நம்பிக்கை தருகிறார். வீட்டில் திருமணப் பேச்சை வேறு எடுக்கிறார்கள். எனக்குத் திருமணம் என்றால் பயம். வரக்கூடியவர் எப்படி இருப்பாரோ எனக் கலக்கமாக உள்ளது.
வேலை கிடைத்த பின்னர் திருமணம் செய்துகொண்டால் எதிர்காலம் எப்படி இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். என்னோட கஸின் ஒருத்தி இப்படிக் கல்யாணம் செய்துகொண்டு மிகவும் கஷ்டப்பட்டாள். அவளைப் போல கஷ்டப்படுவேனோ என்று பயமாக உள்ளது. தேர்வு எழுதவும் உடன்பாடு இல்லை.
வங்கியில் கடன் பெற்றுத்தான் பி.இ. படித்தேன். என் அப்பா கடனை அடைத்துவருகிறார். திருமணத்துக்கும் கடன்தான் வாங்க வேண்டும். என் திருமணத்தால் அவர் கடனாளியாவதை நினைத்தால் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது.
வேலை கிடைக்காததற்கு என் திறமையின்மை காரணமா? சரியான துணை அமையுமா? அதை எப்படிச் சரியாக அமைப்பது? இப்படியாகப் பல கேள்விகள் எழுகின்றன. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
பிறருக்குத் தைரியம் சொன்ன, ‘பாசிடிவ்’ ஆன அந்தப் பெண் எங்கே? காணாமல் போன ‘உங்களை’த் தேடிக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் முதல் வேலை! அடுத்தடுத்த தோல்விகள் உங்கள் தன்னம்பிக்கையைக் குறைத்து மனச்சோர்வைக் கொடுத்திருக்கின்றன . இதன் காரணமாக எதிலும் குழப்பம் ஏற்பட்டு, உங்கள் திறமைகளைப் பற்றி உங்களுக்கே சந்தேகங்கள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன!
வேலைக்கான தேர்வுகளைத் தற்போதைய மனநிலையில் எதிர்கொள்வது கடினம்; அதனால் அந்த முயற்சியைக் கைவிட்டு, உடனே ஏதோ ஒரு வேலையில் அமருங்கள். கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்ததும், தன்னம்பிக்கை கூடும், புதிய வேகம் பெரும்! பிறகு தேர்வுகளைச் சந்திப்பது சுலபம்.
மனச் சோர்விலிருந்து விடுபட்டபின் மணம் செய்துகொண்டால் நல்லது. ஏனெனில் மனம் சோர்ந்திருக்கையில் எல்லாமே எதிர்மறையாகத் தெரியும்! உங்கள் கணவர்/ புகுந்த வீட்டார் செய்யும் செயல்கள், பேசும் வார்த்தைகள் எல்லாவற்றிலும் தப்பு கண்டுபிடிப்பீர்கள்; கோபப்பட்டு நாவை அடக்க முடியாமல், தவறான வார்த்தைகளைக் கொட்டிவிடுவீர்கள். சுறுசுறுப்பாக இயங்க மாட்டீர்கள்.
அவர்கள் அதை ஒரு குறையாகச் சொல்லக்கூடும்! குறிப்பாக மனச் சோர்வு இருந்தால் தாம்பத்திய உறவில் நாட்டம் குறையும்; சுருங்கச் சொன்னால், புதிய உறவுகளுடன் பல சிக்கல்கள் வரலாம். மேலும் திருமணத்தை ஒத்திப்போட்டால் உங்கள் தந்தைக்கும் பொருளாதாரரீதியில் பளு கூடாமலிருக்கும். அவசரப்பட்டு மணம் முடித்து, பிரச்சினைகளை நாமாக வரவழைத்துக் கொள்வதைவிட ஒத்திப்போடுவதில் பாதகங்கள் குறைவுதான். உங்களைச் சரிசெய்துகொள்வதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.
எனக்கு 23 வயது. நான் முதுகலை பட்டப் படிப்பு முடித்துள்ளேன். மேற்கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகப் படிக்க ஆசை. அதைப் பற்றி அப்பாவிடம் விளக்கமாகக் கூறினேன். ஆனால் அவர் புரிந்துகொள்ளவில்லை. எனக்கு இந்தச் சமுதாயத்தின் மீதும் ஏழை மக்களின் மீதும் மிகுந்த அக்கறை உண்டு. அதனாலேயே நான் எதையாவது சாதிக்கலாம் என்று இருக்கிறேன். அவர் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.
அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு கடினமாக இருக்கும், உன் மகன் படித்துவிடுவானா என்று கேட்கிறார்களாம். அவர்கள் சொல்வதில் நம்பிக்கை கொண்டுள்ள அவர் என் மீது நம்பிக்கையின்றி உள்ளார். நண்பர்கள் முன்னிலையிலேயே என்னை அவமானப்படுத்துகிறார். அவர் எதிர்மறையாகப் பேசுவது என்னைப் பாதிக்கிறது. இவருக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் இவருக்கு மனம் வரவில்லை என்று நினைக்கிறேன். எத்தனை முறை கூறி விளங்கவைத்தாலும் ஒன்றும் விளங்குவது இல்லை.
இதனால் நான் அடிக்கடி கோபப்படுகிறேன். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. சில சமயம் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம்கூட தோன்றியது. இவ்வாறு இருந்தால் நாளை எனது குழந்தைகளிடமும் இவ்வாறு பொறுமை இல்லாமல் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வேனோ என்றெல்லாம் தோன்றுகிறது.
என் தந்தைக்குச் சமூக அக்கறை இல்லை. நான் ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால் அதற்கும் முட்டுக்கட்டை போடுகிறார். என்னைச் சுதந்திரமாகச் செயல் பட விடுவதும் இல்லை. அவரை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவருடைய மூர்க்க குணங்களையும் எண்ணங்களையும் நான் வெறுக்கிறேன். ஒரு பெற்றோர் எப்படி எல்லாம் குழந்தையை வளர்க்கக் கூடாதோ அப்படியெல்லாம் என்னை வளர்த்துவிட்டார் என்றே கருதுகிறேன்.
கடமைக்குப் பெற்றார். கடமைக்கு வளர்த்தார். கடமைக்குப் படிக்க வைத்தார் என்றுதான் தோன்றுகிறது. இப்படிக் கடமைக்குப் பெற்றதற்குப் பதில் என்னைக் கருவிலேயே கொன்றிருக்கலாம். இவையெல்லாம்தான் நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது. என்ன செய்வது, அவரை எப்படி நான் நல்வழிப்படுத்துவது என்று தயவுசெய்து கூறுங்கள். என் லட்சியத்தை எவ்வாறு அடைவது? நீங்கள்தான் வழி கூற வேண்டும்.
இளம் தோழரே! உங்கள் வயதினர் வாழ்க்கையை எப்படி ‘என்ஜாய்’ செய்யலாம் என்று யோசிக்கையில், பிறர் வாழ்க்கையில் எப்படி ஒளியேற்றலாம் என்று சமூக அக்கறையுடன் சிந்திக்கும் உங்களுக்கு ‘ஓ’போட வேண்டும். உங்கள் தந்தைக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி போன்ற அரசாங்க ஊழியர்களின் அழுத்தங்கள் புரிந்திருக்கும். அதனால்தான் வேண்டாமென்கிறார்.
ஐ.ஏ.எஸ். படித்தால்தான் மக்களுக்குத் தொண்டு செய்ய முடியும் என்று யார் சொன்னார்கள்? ஒரு தனிநபராகவோ ஒரு தொண்டு நிறுவனத்தில் அங்கத்தினராகவோ அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்க முடியுமே! சொல்லப்போனால் நினைத்ததைச் செயலாக்கும் சுதந்திரம் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குக் கிடையாது-அரசு என்ற வட்டத்துக்குள் செயல்பட வேண்டியிருப்பதால்! இந்த மூன்றெழுத்து உங்கள் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் என்று நீங்கள் நம்புவதால், அதில் உள்ள சங்கடங்களை எடுத்துச் சொல்ல முற்பட்டேன்.
ஐ.ஏ.எஸ். படிப்புக்கு நான் எதிரி அல்ல! கிராமிய நிர்வாகம் (Rural Management) எனும் ஒரு முதுகலைப் படிப்பை முடித்தால், கிராம மக்களின் முன்னேற்றத்துக்கான வேலைவாய்ப்பு கிட்டும். வருமானமும், தொண்டும் ஒருங்கே அமையும்.
நண்பரே, சாதிக்கப் பிறந்தவர் நீங்கள். உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் தேவையே இல்லை. அப்பாவை நிந்திப்பதும் வெறுப்பதும் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக உங்கள் வளர்ச்சியைத் தடுக்கும். வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க முடியும் - பெற்றோரைத் தவிர. குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவாற்றல் இல்லாததால், அவருக்குத் தெரிந்த விதத்தில் உங்களை வளர்த்திருக்கிறார்! அவரை வெறுக்காது ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்களுக்குப் பிடித்த தொழிலை/ படிப்பை நீங்கள் தொடர அவரது அனுமதி தேவையில்லை, அவரிடம் பொருளாதார உதவி கேட்காதவரை! வெல்பவருக்குக் குறிக்கோள் மட்டும் தென்படும்; தோற்பவருக்குத் தடைகள் மட்டும் தென்படும். நீங்கள் வெல்பவரா, தோற்பவரா-தீர்மானியுங்கள்.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago