இணையத்தில் ஒரு குறும்படத்தைக் காண நேரிட்டது. ஒரு பெரிய வீட்டின் முன்னால் பரந்த புல்வெளி. அங்கு ஒரு சிமெண்ட் பெஞ்ச். அதன் ஓரத்தில் ஒரு பெரியவர் ஒருவர் காலத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். வயோதிகத்தின் காரணமாகப் பார்வைத் திறன், கேட்கும் திறன், நினைவாற்றல் எல்லாம் அவருக்குக் குறைந்துவிட்டன.
இளைஞன் ஒருவன் வருகிறான். அவன் கையில் செய்தித்தாள் இருக்கிறது. அவன், பெரியவரின் மகன்தான் என்பதை இலகுவாக யூகிக்க முடிகிறது. செய்தித்தாளைப் பார்த்தபடியே சிமெண்ட் பெஞ்சின் முனையில் அமர்கிறான்.
அப்போது ஒரு குருவி தத்தி, தத்தி அருகில் வருகிறது. அதன் அசைவை உணர்ந்த பெரியவர், தன் மகனின் தோளைத் தொட்டு, “அது என்ன?” எனக் கேட்கிறார். அவன் செய்தித்தாளில் இருந்து பார்வையை அகற்றாமலேயே, “குருவி” என்கிறான். நேரம் நகர்கிறது. மகன் சொன்னது பெரியவருக்கு மறந்துவிட்டது. மீண்டும் குருவியின் அசைவை அவர் உணரவே, மீண்டும் அவன் தோளை தொட்டு, “அது என்ன?” என்கிறார். அதற்குக் “குருவி” என மிகச் சத்தமாகப் பதிலளிக்கிறான்.
மீண்டும் குருவி தத்தி தத்தி வந்தது. பெரியவர் அவனது தோளைத் தொட்டு, “அது என்ன?” என்கிறார். அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. கோபமாக எழுகிறான். செய்தித்தாளை வீசி எறிகிறான். அவரை நோக்கிக் கைகளை நீட்டி, “நீ என்ன மனுஷனா? என்னைக் கொஞ்சம் பேப்பர் படிக்க விடுறயா? தொண தொணன்னு பேசுறேயே. இப்ப அது குருவின்னு தெரிஞ்சு நீ என்ன செய்யப் போறே? கம்முனு கெடப்பியா சும்மா...” எனத் திரும்பவும் கத்தினான்.
இவன் எதற்காக இப்படி ஆவேசப்படுகிறான் என்று பெரியவருக்குப் புரியவில்லை அவனது கோபம் அவர் கண்களில் நீரை வரவழைத்தது. எழுந்து தட்டுத் தடுமாறி வீட்டினுள்ளே சென்றுவிடுகிறார். உள்ளே சென்று தனது பழைய பெட்டியைத் திறந்து, ஒரு பழைய டைரியை எடுத்துத் தூசு தட்டுகிறார். மெல்ல வெளியில் வருகிறார். மெல்லத் தன் மகன் அருகில் வந்து அவனது தோளைத் தொட்டு, “இதைப் படி” என்று கொடுத்துவிட்டு அந்தப் பெஞ்சில் அமர்கிறார். “இந்தக் கிழவர் எதற்காக இதைத் தருகிறார்?” என விழித்த மகன், அதை வாங்கிப் புரட்டுகிறான். சில பக்கங்கள் காலியாக இருக்கின்றன. ஒரு பக்கத்தில் சில வரிகள் தென்படுகின்றன.
1965: இன்று எனக்கொரு மகன் பிறந்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். ஒரு வாரிசு உருவாவது எவ்வளவு பெரிய விஷயம்? அப்பா ஆவதில் எவ்வளவு குதூகலம்? இன்று அலுவலகத்தில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடினேன்.
அதற்கடுத்துச் சில பக்கங்கள் காலியாக இருந்தன. மீண்டும் சில வரிகள் தென்படுகின்றன.
1967: இன்று என் மகனின் பிறந்தநாள். இரண்டு வயது பூர்த்தியாகிறது. சில சில வார்த்தைகள் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறான். அவனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றேன். அப்போது ஒரு குருவி அவனருகே வந்தது. அவன் ஆச்சரியத்துடன், “அது என்ன?” என்றான். நான் ஆசையாக அவன் வாயைப் பார்த்துக்கொண்டே “குருவி” என்றேன். அவன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். சிறிது நேரம் அதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் “அது என்ன?” எனக் கேட்டான்.
நான் அவனைத் தூக்கி முத்தமிட்டு, “குருவி” என்றேன். இதுபோல ஒரு முறை அல்ல. 72 முறை கேட்டுவிட்டான். நானும் சளைக்காமல் பதில் சொன்னேன். அதைத் தவிர எனக்கு இந்த உலகத்தில் வேறு வேலை என்ன? இன்னும் எத்தனை முறை கேட்டிருந்தாலும் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் அதற்குள்ளாக அவன் கவனம் மாறிவிட்டது. படித்து முடித்த இளைஞனின் கண்கள் கலங்கியிருந்தன.
- தவமணி கோவிந்தராசன், ராயபுரம், சென்னை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago