நடைப் பயிற்சி: உடல் தன்னைத் தானே அறியும் முயற்சி

By ஷிவ் விஸ்வநாதன்

எனது தந்தை நடப்பதை மிகவும் விரும்புபவர். அவரது மிகப்பெரிய சடங்கும், பிரார்த்தனையும், வேலையும் அதுதான். ஒவ்வொரு நாள் காலையிலும் நான்கு மணிக்கு எங்கள் வீடு அவரது ஷூ சத்தத்தில் அதிரும். ஒரு டம்ளர் காபியைக் குடித்துவிட்டு வெளியேற பரபரத்துக் கொண்டிருப்பார். பத்து வயதான எங்கள் வளர்ப்பு நாயும் பொறுமையற்று உறுமலுடன் காத்திருக்கும். எங்கள் அண்டை வீட்டு நாயும் காலை நடையில் கலந்துகொள்ளும். அது இளம் டாபர்மேன். பெயர் மார்க்கஸ். எங்கள் டாக்ஸ்ஹண்ட் முன்னால் அணிவகுக்க, மார்க்கஸ் பின்னால் செல்வான். இரண்டும் என் அப்பாவின் சமிக்ஞைகளைக் கவனமாகப் பின்தொடர்பவை. ஒரு கட்டத்தில் எங்கள் டாக்ஸ்ஹண்க்கு வயதானதால் களைப்பு ஏற்பட்டது. ஆனால் காலை நடையை விடவேயில்லை.

நடை என்பது கூட்டுச்செயல்பாடு. உலகத்துக்கு ஹலோ சொல்லும் வழி. எனது குழந்தைப்பருவ நினைவுகள் நடை அனுபவங்களால் நிறைந்தவை. அதனால்தான் நடை இன்றி நட்பு சாத்தியமல்ல என்றும் சங்கடமில்லாத வயோதிகம் சாத்தியம் இல்லையென்றும் நம்புகிறேன். ஒருவர் நடக்கும்போது, தொலைவில் உள்ள உலகங்கள் குறித்து நினைவுகொள்கிறார். அவற்றைப் பற்றிப் பேசுகிறார். உலகத்தை அளக்கும் வழிகளில் ஒன்றாக நடை மாறியிருக்கிறது. தத்துவங்கள் நடைப்பயிற்சிலேயே தொடங்கியிருக்க வேண்டும் என்றும் உணர்கிறேன். தோரோ, எமர்சன், ஹைடக்கர் ஆகியோரைப் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் உண்மையிலேயே பேசியபடிதான் நடந்தார்கள். அவர்களது தத்துவங்கள் செழுமையாகவும் அதிக உறுதிப்பாட்டுடனும் இருக்கின்றன.

நடையின் பல செய்திகள்

நடை நம்மைச் சிறந்த வகையில் நிதானப்படுத்துகிறது. உடல் தன்னைத்தானே அறியும் முயற்சியே நடைப்பயிற்சி. அது சாலை ஓர நடைபாதையாக இருக்கலாம், நதியின் கரையாக இருக்கலாம், வனத்தில் நடக்கலாம், வெறுமனே குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்வதாகவும் இருக்கலாம். நடப்பது என்பது ஒரு அறிதல், கண்டுபிடிப்பு, உரையாடல், நட்புச் செயல்பாடு, ஒரு தியானம், பிரதிபலிப்பு, பிரார்த்தனை. களைப்புற்ற நிலையில் விறைத்துப்போயுள்ள உடலைத் தளர்த்தும் செயல்பாடாகக்கூட நடைப்பயிற்சி இருக்கிறது. நமது அன்றாடவேலைகளில் பலவிதமான செய்திகளையும் பலன்களையும் கொண்டது நடைப்பயிற்சி மட்டுமே.

நடைப்பயிற்சியில் கடைசித் தூரத்தை எட்டும்போது நீங்கள் உங்கள் உடலைச் சவாலுக்கு இழுக்கிறீர்கள். உங்கள் உடலில் வியர்வை பொங்கி வழியும்போது விளையாட்டு, வலி இரண்டுமே இருக்கிறது. அன்றாடம் நடக்கும் தூரத்தைவிடக் கூடுதலாக ஒரு மைல் நடைப்பயிற்சியைப் பூர்த்தி செய்துவிட்டு, ஓய்ந்துபோய் ஒரு தேநீருக்காகவோ, பிஸ்கெட் சாப்பிடவோ அமர்பவர் உணரும் சாதனையைப் போர்வீரன்கூட உணரவே முடியாது. நாம் நடக்கும்போது நமது ஆழத்தில் உள்ள சுயத்துடன் உரையாடுகிறோம். அத்துடன் உடலின் லயத்தையும், அமைதியையும் கூர்ந்து கவனிக்கிறோம். நடைப்பயிற்சி என்பது குணமூட்டக்கூடியது, சிகிச்சை இயல்புடையது, பேயோட்டும் செயல்பாடும்கூட. மேலும் நடைப்பயிற்சி, உலகுடன் ஒட்டி வாழ்வதற்கான ஒரு வழிமுறை.

வாழ்க்கையின் கொண்டாட்ட மான தருணங்களில் ஒன்றாக நடை இருக்கிறது. ஒரு குழந்தை முதல்முறை நடைபயிலத் தொடங்கும்போது, விழுந்து எழும்போது, அதைக் காணும் பெற்றோரின் மகிழ்ச்சி விவரிக்க இயலாதது. நடைபயிலத் தொடங்கும் குழந்தைக்கும் பெரிய சாதனை செய்த உணர்வு இருக்கும். பெற்றோரும், தாத்தா, பாட்டியும் அந்தக் கணத்தைப் பெருமிதத்துடன் காண்கின்றனர். வரலாறு உருவாவதின் முதல் படி அது.

நடக்கும்போது வெவ்வேறு புலன்களும் செயல்படுகின்றன. நீங்கள் பார்க்கிறீர்கள், நீங்கள் தொடுகிறீர்கள், நிற்கிறீர்கள், எதையோ நினைவுக்குக் கொண்டுவர முயல்கிறீர்கள், ஒரு பூவை, ஒரு முகத்தை. நாம் நடக்கும்போது உலகத்துடன் உரையாடுவது மட்டுமின்றி, ஆழமான புரிதலுக்காகக் கேள்வியும் கேட்கிறோம்.

ஒரு பகல் பொழுதில் நடப்பதிலிருந்து அந்தப் பிராந்தியத்தை வரையறுக்க வேண்டும் என்று காந்தி கருதினார். பொதுவெளியை மீட்டெடுப்பதற்கான நாடகமாக நடைப்பயிற்சி இருக்கிறது. நகரங்கள் நடப்பவர்களுக்குச் சாத்தியமற்றதாக மாறிவருகிறது. பாதசாரிகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறார்கள். ஒருவரின் நடை அவரது உயிரியலோடு தொடர்புடையதுதான். ஆனால் ஒரு நகரத்தின் வரலாற்றுடன் நுட்பமான தொடர்புடையது. சிறந்த நகரங்கள் பாதசாரிகள் வழியாகவே உயிர்ப்புடன் உள்ளன என்று கருதுகிறேன். அவர்களது நடைச் சடங்குகள் நகரத்தை வரையறுக்கின்றன. எல்லா இடங்களையும் பரிச்சயம் உள்ளதாக மாற்றுகின்றன. நகரில் ஓடும் மிதிவண்டிகள் இன்னும் மனிதத்தன்மை மிகுந்தவையாக இருக்கின்றன. ஆனால் ஒரு கார் நம்மைக் கடக்கும்போது, நகரம் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறது.

பாதசாரிகளை முன்னிட்டுத்தான் நகர்ப்புறத் திட்டமிடுதல் தொடங்கப்பி வேண்டும். நகர்ப்பகுதிகளில் நடந்துசெல்லாமல் நம்மால் முறைசாராப் பொருளா தாரத்தைப் புரிந்து கொள்ளமுடியாது. அந்த முறைசாராப் பொருளாதார வழிமுறைகளில்தான் நம்மில் 70 சதவீத குடிமக்கள் வாழ்கின்றனர். நாம் நடப்பதை நிறுத்தும்போது நகரங்கள் இறக்கத் தொடங்குகின்றன. பஜாரும், சாலையோர காபிக் கடையும் மறையத் தொடங்குகின்றன. சென்னையில் உள்ள மெரினாக் கடற்கரையை நடையாளர்களைத் தவிர்த்துக் கற்பனை செய்துபாருங்கள். வாழ்வதற்குக் கட்டுப்படியாகும் நகரத்தை நமது நடை வழியாகவே உருவாக்க முடியும். டீக்கடைக்காரர், பேல் பூரி விற்பவர், வடை, பஜ்ஜி கடைகள், வெற்றிலைக் கடைக்காரர், பூ விற்பவர், குப்பை அள்ளுபவர் அனைவரும் வாழ்வதற்குத் தகுந்த நகரம் எனில் அது தன் இதயத்தில் பாதசாரிகளைப் புரிந்துகொண்டதாக இருக்க வேண்டும். உணவு, விதவிதமான சப்தங்கள், பொழுதுபோக்கு, அந்நியர்களைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளுதல் என்று எல்லா அனுபவங்களும் நடையின் வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன.

எதிர்ப்பு வடிவம்

நடையைக் காந்தி தனது சத்தியாகிரக வழிமுறையாகக் கண்டார். எந்தப் போராட்டத் திற்கும் உடலே உருவமாக இருக்கிறது. காந்தி ஒரு சாம்ராஜ்யத்தை வீழ்த்தத் தொடர்ந்து நடந்தார்.

இன்று நகரங்கள் மாறிவிட்டதை உணர்கிறேன். நடையாளர்கள் செயற்கைப் பூங்காக்களுக்கும் பிரத்யேகப் பகுதிகளுக்கும் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஆனாலும் நடையாளர்களின் சமூகம் ஜீவிக்கவே செய்கிறது. அவர்கள் இந்த உலகத்திடம், “ நாங்கள் நடக்கிறோம், அதனால் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்லியபடி அவர்கள் ஜீவிக்கிறார்கள். நடை என்பது தனிமனிதனும் சமூகமும் கூட்டுச் சேர்ந்து எழுதும் கவிதை.

@ தி இந்து (ஆங்கிலம்) சுருக்கமான மொழிபெயர்ப்பு: ஷங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்