ஐ.டி. உலகம்- 6: ஐ.டி. என்றாலே அப்படித்தானா?

By எம்.மணிகண்டன், வி.சாரதா

உலகத்திலேயே ஐ.டி. துறையில் பணிபுரிகிறவர்கள் மட்டும்தான் ஜாலியான ஆட்கள் என்ற எண்ணம் பெரும்பாலானோர் மனதில் ஆழமாக உள்ளது. ஒருவர் ஐ.டி.யில் வேலை செய்கிறார் என்றாலே, ‘ சம்பளம் நாற்பதா ஐம்பதா, லட்சத்துக்குப் போகலையா, எத்தனை கேர்ள் பிரண்ட், சனிக்கிழமை பார்ட்டி பண்ணுவீங்களா, லாஸ்ட் ட்ரிப் எங்க போனீங்க?’ என வகை தொகை பார்க்காமல் கேள்விகளை அடுக்குகிறவர்கள் அநேகர். லெளகீக உலகின் அத்தனை சுகங்களையும் அனுபவிப்பதற்கான ஒரே துறை ஐ.டி. மட்டும்தான் என்று நினைப்பதன் வெளிப்பாடுதான் அது.

சொகுசாக வாழ்கிறார்களா?

சப்ரஷன், டிப்ரஷன், ரிசஷன் என ஐ.டி.யில் வேலை செய்பவர்கள் எவ்வளவு புலம்பினாலும் அது பெரிய அளவில் எடுபடுவதில்லை. சொகுசு வாழ்க்கை வாழும் ஆட்களாகவே உலகம் அவர்களைப் பார்க்கிறது. ஐ.டி.யில் வேலை செய்தால் பல கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பார்கள், ஆண்களிடம் பெண்கள் நெருக்கமாக இருப்பார்கள், லிவிங் டூகெதர், குடி, கூத்து என்று அவர்கள் வாழ்க்கையே கொண்டாட்டமயமானது என்ற நம்பிக்கையில் ஐ.டி. ஆட்களைக் கரித்துக்கொட்டவே தனிக் கூட்டம் உள்ளது.

இதனால் பண்பாடு பாதாளத்துக்குச் செல்கிறது என்று கூறி நிறைய கலாச்சாரக் காவலர்கள் உருவாகிறார்கள். இதனால் ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் அனுபவிக்கிற பிரச்சினைகள் ஏராளம். ஆண்களுக்கும் பிரச்சினைகள் இல்லாமலில்லை.

“முன்பெல்லாம் ஐ.டி.யில் வேலை பார்த்தால் உடனே பெண் கொடுத்துவிடுவார்கள். இப்போதெல்லாம் மணமகன் தேவை விளம்பரத்தில், ‘ஐ.டி. மாப்பிள்ளை வேண்டாம்’ என்று நோட் போடுகிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது” என்கிறார் ஐ.டி.யில் பணியாற்றுகிற கிருஷ்ணா.

மாடர்ன் என்னும் தொல்லை

கிருஷ்ணாவுடைய சீனியர் ஒருவர் கல்யாணத்துக்காகப் பெண் தேடியிருக்கிறார். நல்ல சம்பளம். ஆள் பார்ப்பதற்கு நல்ல தோற்றம். கொஞ்சம் மார்டனான மனிதர். ஐ.டி. ஊழியர், மார்டன் பேர்வழி என்ற இரண்டு காரணத்தால் மட்டுமே அவருக்குப் பெண் கிடைக்கப் பல ஆண்டுகள் ஆகியுள்ளன.

ஏனென்றால் மார்டனான ஆள் என்றால் பல கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பார்கள், நிறைய குடிப்பார் போன்ற எண்ணங்களே அதற்குக் காரணம். ஆனால் “என் சீனியரோ குடிப்பவர்களோடு சேர்ந்து சைட் டிஷ் சாப்பிடுகிற ஆள். ஒரேயொரு அக்காவுக்குத்தான் புரபோஸ் செய்தார் அதுவும் புஸ்ஸாகிவிட்டது” என்று ஐ.டி. பற்றிய பொதுத் தோற்றத்தால் தன் சீனியர் பாதிக்கப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் கிருஷ்ணா.

“எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம். ஊருக்குப் போகும்போதெல்லாம் ‘என்ன மச்சி நீயெல்லாம் ஐ.டி.ல வேல பாக்குற, எத்தன பிரேக் அப் எத்தன பிக் அப்?’ என்று எனது நண்பர்களே கேட்கிறார்கள்” என்று வருந்துகிறார் அவர்.

காதலும், காதல் தோல்விகளும், பின்னர் புதிய காதல் அரும்புவதும் பல ஆண்டு காலமாகவே நடப்பதுதான். ஆனால், அவற்றைச் சொல்லிக்கொடுத்தது ஐ.டி. துறைதான் என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஐ.டி. பெண் ஊழியரான ஸ்ரீ தேவியின் கதை வேறு விதமானது. அவருக்குச் சொந்த ஊர் சிவகங்கை பக்கம். பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான அவருடைய நண்பர் ஒருவர், திடீரென அவரிடம் புரபோஸ் செய்திருக்கிறார்.  தேவி அதை ஏற்கவில்லை. கொஞ்ச காலம் பொறுத்திருந்த பின்னர், ‘நீயெல்லாம் ஐ.டி. பொண்ணு. உனக்கு எப்புடி என்ன புடிக்கும். அங்கேயே ஒருத்தனப் புடிச்சிருப்ப. அதுவும் எத்தன நாளைக்குன்னு பாக்குறேன்’ அது இதுவெனக் கீழ்த்தரமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்.

“படித்தவர்களுக்கே ஐ.டி.துறையைப் பற்றித் தவறான புரிதல் இருக்கும்போது, மற்றவர்களுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை என்றே தோன்றுகிறது” என்று ஆதங்கப்படுகிறார்  தேவி.

ஐ.டி. துறையை நோக்கி முன்வைக்கப்படுகிற இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் அனைத்திந்தியத் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பின் தலைவருமான சந்தோஷ் சுக்லா, “எல்லாத் துறைகளை விடவும் ஐ.டி. துறை மேற்கத்திய உலகுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. இதனால் நம்மூர் ஆட்கள் அவர்களுக்கு ஏற்பத்தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அது அலுவல்ரீதியானது. அவ்வளவே” என்று விளக்குகிறார்.

“ஐ.டி. ஊழியர்கள் மது, மாது என்று தறிகெட்டு வாழ்கிறார்கள் என்று சொல்வது உண்மையானால் எத்தனையோ பேர் நோய் நொடியென்று காணாமல் போயிருப்பார்கள்” என்கிறார் அவர். இது மட்டுமல்ல, ஐ.டி. ஊழியர்களின் கலாசாரப் பற்றுதல் பற்றியும் நேர்மறையான விஷயங்களைச் சொல்கிறார் அவர்.

“யோகா வகுப்புக்குச் செல்பவர்கள், வியாழக்கிழமை வந்தால் சாய்பாபா கோயில் செல்பவர்கள் பெரும்பாலும் ஐ.டி. ஊழியர்கள்தான். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கோயில் கட்ட நிதி அளிப்பது ஐ.டி. துறையைச் சார்ந்தவர்கள்தான். எனவே அவர்கள் பண்பாட்டை மதிக்காதவர்கள் என்பதை ஏற்கவே முடியாது” என்று ஐ.டி.துறையினருக்காக வாதாடுகிறார் சுக்லா.

கை நிறையச் சம்பளம் கிடைக்கும்போது வாழ்க்கைத் தரம் மாறுவது இயல்பு. அப்படி ஒருவரின் வாழ்க்கைத் தரம் மாறுகிறபோது, அதை அப்படியே எதிர்மறையாக விமர்சிப்பதன் விளைவுதான் ‘ஐ.டின்னாலே அப்படித்தான்’ என்கிற தோற்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்