சாதி சார்ந்த ஆணவ (கவுரவ) கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என வாசகர்களிடம் கடந்த வாரம் கேட்டிருந்தோம். அதற்குப் பதிலளித்திருக்கும் வாசகர்களின் சில பதிவுகள்:
சாதி ஒழிய வேண்டுமென்றால் முதலில் அரசு சாதியை நீக்க வேண்டும். முதல் வகுப்பு மாணவர்களுக்குக்கூடத் தாங்கள் எந்த சாதி என்பது தெரியக் கூடாது. சாதி சம்பந்தமான போஸ்டர்கள் போன்றவற்றுக்கு அரசு ஒப்புதல் தரக் கூடாது. காலேஜில்கூட சாதி பார்த்துப் பழகும் பசங்க, எங்க ஏரியாவுல இருக்காங்க. பள்ளி வகுப்பறையில்கூட ‘தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எல்லாம் எழுந்து நில்' என்று ஆசிரியர்கள் சொல்றாங்க, பேர் சொல்றதில்லை. இப்படி இருந்தா எப்படி மாற்ற முடியும்? வளர்ந்துவிட்ட சாதியை மறைக்க முடியாது, ஆனால் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
- ராஜி. வி
இன்றைக்கு எத்தனையோ காதல் திருமணங்கள் செய்து கொண்டவர்களைக் குடும்பத்தினர் அங்கீகரிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் வேலை, சமமான வசதி வாய்ப்புகள் ஆகியவை காரணமாக அமைகின்றன. சாதிகளின் ஊற்றாக இருக்கிற கிராமங்களில்கூட முன்பெல்லாம் இதுபோன்ற காதல் நிகழ்வுகள் நடைபெறும்போது ஊரை விட்டு ஒதுக்கிவைத்தல், அபாராதம் விதித்தல் போன்றவை தண்டனையாக தரப்பட்டனவே தவிர உயிரைக் குடிக்கும் கொடூரம் அரங்கேறவில்லை. தங்களின் உரிமையை நிலைநாட்ட சாதிய மோதல்கள் நடைபெற்றதே தவிர, காதலுக்காக நடைபெறவில்லை.
இன்று அரசியலில் தங்களை அடையாளப்படுத்தவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் சில சக்திகள் காதலை ஆயுதமாகக் கையில் எடுத்து அப்பாவிகளைக் காவு வாங்குகின்றனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளைத் தடை செய்வதோடு, குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்பபட வேண்டும். பிறப்பில் பேதமில்லை என்ற உணர்வை மக்களிடத்தில் உணர்த்த வேண்டும்.
காதல் என்பது வலுக்கட்டாயமாக யார் மீதும் திணிக்கப்படுவதில்லை, இயற்கையின் நியதி என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். சாதிய உணர்வுகளால் தூண்டப்பட்டு கண்மூடித்தனமாக எடுக்கப்படும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளால் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக இழப்பது சரியானதுதானா என்பதை உணர்ந்து, காதலுக்கான உயிரை எடுக்கும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
- மு.க.இப்ராஹிம், வேம்பார்
கோகுல்ராஜ் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை மட்டுமே எடுத்திருக்க வேண்டும். பெண்ணைப் பெற்றோர், தன் பெண்ணை நல்ல விதமாக வாழ வைக்க விரும்புவது தவறா? அதேநேரம், நம் நாட்டு அரசும் அரசியல் வாதிகளும் சாதியை ஒழிக்க ஒரு நாளும் விட மாட்டார்கள்.
- சாம்சங் செந்தில்
இலக்கியங்களிலும் சினிமாவிலும் சாதி மாறிய காதலைக் கொண்டாடும் நம் சமூகம், நிஜ வாழ்க்கையில் சாதியைக் காரணம் காட்டிக் கொலை செய்வதுவரை செல்வது புரியாத புதிர். அடுத்தவர் காதலை ரசிக்கும் நாம், நம் பிள்ளைகளின் காதலை வெறுக்கக் காரணம் ரத்தத்தில் கலந்துவிட்ட சாதிய வன்மம். ஒவ்வொரு சமூகமும் இன்னொரு சமூகத்தோடு வாழ்க்கை முறையில் இணைந்தே பயணிக்கிறது. அந்தப் பயணத்தில் ஏற்பட்ட நன்மைகளைக் கூறாமல், தீமைகளை மட்டுமே கூறிப் பிஞ்சிலேயே நஞ்சைக் கலப்பதால் சமூகத்தில் இன்னும் சாதி வெறி தாண்டவமாடுகிறது.
சாதிக் கட்சித் தலைவர்களின் தூண்டுதலும் ஒரு காரணம். இதற்கு ஒரே தீர்வு எந்த இடத்திலும் சாதிப் பெயரைப் பயன்படுத்தாது மனிதனாகப் பிள்ளைகளை வளர்ப்பதே. சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொண்டுவரலாம். அதைப் போல சாதி மறுப்புத் திருமணத்தைக் காரணம் காட்டி வன்முறையில் ஈடுபடுவோருக்கு அரசு வழங்கும் சலுகைகளை ரத்துசெய்ய சட்டம் கொண்டுவரலாம்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
கொங்கு பகுதியில் சாதிமாறித் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதிலே தலித் சமூகத்துடனும் கலப்பு திருமணங்கள் நடைபெற்று, அந்தத் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள்.
பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளிவைக்க வேண்டுமானால் முதலில் தலித் இயக்கங்கள் தங்களைப் பற்றிய தாழ்ந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தலித் இயக்கங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டி மனப்பான்மையை நீக்கி, அனைத்து தலித் மக்களுக்கிடையே நல்லுறவு மேம்பட பாடுபட வேண்டும்.
- கே.சி.காளியண்ணன், சென்னை
அறியாமை, கல்வியறிவின்மை, தவறான கற்பிதங்கள், அறமற்ற வழிகாட்டுதல்கள் போன்றவற்றாலேயே சாதிகள் வலுப்பெற்றுள்ளன. இவற்றை நாம் களைய வேண்டும். இளைஞர்கள் ஒன்றிணைந்து சாதியைத் துறக்க வேண்டும். சாதியின் பெயரால் தவறு செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அதேநேரத்தில் அறம் சார்ந்த புரிதல்களையும், சக மனிதன் மீது செலுத்த வேண்டிய அன்பின் வலிமையையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- சுந்தர் காந்தி, தூத்துக்குடி
காதல், காதல் சார்ந்த கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம், தனி நீதிமன்றம் உருவாக்க வேண்டும். சாதி சார்ந்த படுகொலைகளில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும்.
- ஆர். அரவிந்தகுமார், திருச்செங்கோடு
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago