மெட்ரோ ரயில்: சில்லுன்னு ஒரு பயணம்

By ரோஹின்

சினிமாக்களில் மட்டுமே பார்த்துவந்த மெட்ரோ ரயிலை சென்னைவாசிகள் நேரில் கண்டுவிட்டார்கள். கடந்த திங்களன்று (29.06.2015) சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரயில் தன் பயணத்தைத் தொடங்கிவிட்டது. புறநகர் ரயில், பறக்கும் ரயில் வரிசையில் புதிதாக இந்த மெட்ரோ ரயிலும் சேர்ந்துகொண்டது.

மெட்ரோ ரயில் பயணம் சென்னைவாசிகளுக்குப் புதுவிதமான அனுபவமே. ஏனெனில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் வெப்பமான சென்னை நகரின் ஊடே மேம்பாலத்தில் செல்லுவது உண்மையிலேயே உற்சாகமாக இருப்பதாகவே மெட்ரோ ரயிலில் பயணம்செய்தவர்கள் கூறுகிறார்கள். வெளியே சுட்டெரிக்கும் வெயிலைக் கண்ணாடி வழியே பார்த்தபடி வானத்தில் மிதப்பது போல குளுமையுடன் பயணிக்கும்போது ஆசுவாசமாக இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் அவர்கள்.

கிட்டத்தட்ட பறக்கும் ரயிலின் அமைப்பிலேயே மெட்ரோ ரயில் இருக்கிறது. பறக்கும் ரயிலில் உட்கார அதிக இடம் இருக்கும், நிற்க குறைவான இடம் இருக்கும். மெட்ரோவில் இருக்க குறைவான இடம், நிற்க அதிக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ரயில் நிலையம்கூடப் பறக்கும் ரயில் நிலையம் போலவே விசாலமானதுதான்.

ஆனால் மெட்ரோவில் தொழில்நுட்ப வசதிகள் பறக்கும் ரயிலைவிட மேம்பட்டிருக்கின்றன. நடைமேடையில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல இங்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் நடைமேடைகள் இப்படி மேம்பாலத்தால் இணைக்கப்பட்டிருக்காது.

மேலும் பறக்கும் ரயில் வந்துசெல்லும் நிலையங்களில் காற்று உள்ளே வந்துவிடக் கூடாது என்று முன்யோசனையோடு கட்டியிருக்கிறார்களே என்று தோன்றும் அளவில் அவற்றை அமைத்திருப்பார்கள். வியர்வை வழிய வழியதான் நிற்க வேண்டும். பிளாட்பாரத்தின் முனைப் பகுதியில் மட்டுமே காற்று வர முடியும். ஆனால் இங்கே அந்தப் பிரச்சினை இல்லை.

மேலே கூரையில் திறப்புகள் உள்ளன. எனவே காற்று வர வசதியுள்ளது, பார்வையில் வானமும் படுகிறது. பிளாட்பாரத்தில் வந்து நின்றவுடன் தானியங்கிக் கதவுகள் திறப்பதும் பின்னர் மூடுவதும் பார்க்க அழகாக இருக்கின்றன. ஏற்கெனவே சென்னையின் சொகுசுப் பேருந்துகளில் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளதுதான். ரயிலில் இது முதல்முறை என்பது மட்டும் புதுசு.

பிற ரயில்களில் நின்றுகொண்டே பயணிப்பது போல மெட்ரோவில் மிகச் சுலபமாக நின்றுகொண்டு பயணம் செய்ய இயலவில்லை. கவனமாக நிற்க வேண்டியிருக்கிறது. சென்னையில் டிரெயிலர் பேருந்துகளில் செல்லும்போது பேலன்ஸ் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

அதைப் போலவே உள்ளது மெட்ரோவின் பயணம். மெட்ரோவின் அகலமும் பிற ரயில்களைவிட குறைவு. ஆகவே ஏதோ பொருட்காட்சி ரயிலில் போவது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அனைவரும் கண்காட்சியில் ஓடும் பொம்மை ரயிலில் குடும்பத்துடன் குதூகலமாக செல்வது போலவே செல்கிறார்கள்.

நகரின் சாலைகளையும் கட்டிடங்களையும் போக்குவரத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஊட்டி மலை ரயிலில் போவது போல சந்தோஷத்துடன் செல்கிறார்கள். இந்தச் சந்தோஷத்தின் காரணமாக ரயில் கட்டணம் அதிகம் என்பதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

டூர் வந்தது போல ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் உற்சாகமாக ஃபோட்டோகளும் செல்பிகளும் எடுத்து மகிழ்கிறார்கள். இதுவரை வெளிநாட்டுப் படங்களில் மட்டுமே பார்த்து மகிழ்ந்த மெட்ரோ ரயிலில் தாங்களே பயணிப்பதால் ஒருவித பரவசத்தை உணர்கிறார்களே எனத் தோன்றும்படி அமைகிறது அவர்களின் பயணம். பொதுமக்கள் போலவே விஜய்காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற பிரபலங்களும் இதில் பயணித்து மெட்ரோவைப் பெருமைப்படுத்தி விட்டார்கள்.

ரயில் கட்டணம் அதிகம் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. குறைந்தபட்சம் பத்து ரூபாயும் அதிகபட்சமாக நாற்பது ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தினசரி மெட்ரோவில் செல்பவர்கள் இந்தக் கட்டணத்தில் ரயிலைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

கட்டண விஷயத்தில் ஏசி பேருந்து, ஆட்டோ போன்றவற்றுடன் ஒப்பிட்டு இப்போதைய கட்டணத்தை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், டெல்லி நகரின் மெட்ரோ கட்டணத்துடன் ஒப்பிடும்போது இது அதிகம் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. முதல் நாள் இருந்த கூட்டம் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. ஓரிரு மாதங்கள் சென்ற பின்னர் சென்னைக்கு மெட்ரோ எந்த அளவு பயன்படப்போகிறது என்பது தெரிந்துவிடும்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்