சென்னை, நாரத கான சபை நாட்டிய அரங்கத்தின் சார்பாக ஒவ்வோர் ஆண்டும் பாரதியின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள். சமீபத்தில் அறிவுதான் தெய்வம் என்பதை அறிவுறுத்தும் பாரதியின் பாடல்களுக்கு நாட்டிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்கள். இதில் டாக்டர் அபூர்வா ஜெயராமன், மனஸ்வினி ராமச்சந்திரன், சாய் சந்தோஷ் ராதாகிருஷ்ணன், மேதா அரி ஆகியோர் நடனமாடினார்கள். பாடல்களுக்கான இசையை லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணனும் லால்குடி விஜயலஷ்மியும் அமைத்திருந்தார்கள்.
வியக்க வைத்த வர்ணனை
ஒவ்வொரு பாடலுக்கான நடனம் தொடங்குவதற்கு முன்பும் அந்தப் பாடலின் பொருளை, எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையிலும் ரசிக்கும் வகையிலும் ஜனரஞ்சகமாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும் சொன்னார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா விஜயராகவன்.
“இங்கே இதற்கு முன்பும் பாரதியின் வசன கவிதைகளை மையப்படுத்தி ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். பாரதின்னாலே விடுதலையைப் பற்றி நிறையப் பாடியிருக்கார் என்றுதான் நினைப்போம். ஆனால் அவர், அறியாமையை எரிப்பதுதான் அறிவாகிய வேள்வித் தீ என்பதை உணர்த்தும் கவிதை களையும் எழுதியிருக்கார். அவற்றை இளைஞர்கள்ட்ட கொண்டுபோவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்” என்றார்.
ஒளியும் ஒலியும்
ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஆடியோ விஷூவல் பிரசண்டேஷன் மிக முக்கியம். அவை நன்றாக அமைந்தால்தான் நிகழ்ச்சி சிறக்கும். இந்த நடன நிகழ்ச்சியைப் பொறுத்த அளவில் அரங்கத்தின் ஒளியமைப்பும், ஒலியமைப்பும் கச்சிதமாக அமைந்திருந்தன. அதனால் ரசிகர்கள் நிகழ்ச்சியோடு மிகவும் ஒன்றிப்போய்விட்டார்கள். பாடல்களை மும்பை ஷில்பா, பிரணவ் ஆகியோர் பாடினார்கள். ஜெய ராமநாதன் நட்டுவாங்கத்தாலும், பாக்கியலஷ்மி குழலிசையாலும் நிகழ்ச்சிக்குப் பலம் சேர்த்தார்கள். மிருதங்கம் வாசித்த ராம்சங்கர் பாபுவும், வயலின் வாசித்த லஷ்மியும் சிறப்பான பங்களிப்பைத் தந்தார்கள்.
பொய்யோ மெய்யோ
‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?’ என்னும் பாடலில் நீங்கள் எல்லாம் உண்மையா உண்மையா என்று கேள்விகளை எழுப்பிக்கொண்டு போவார் பாரதி. ‘இவையெல்லாம் உண்மையே’ என இயற்கையே பதில் சொல்வதாக அந்தப் பாடல் முடியும். அதற்கு ஏற்ப சோலைகள், அருவிகள், மலைகளை எல்லாம், மேடையை முழுவதுமாகப் பயன்படுத்தி நம் கண்முன் கொண்டுவந்தார் சாய் சந்தோஷ் ராதாகிருஷ்ணன். மாயைகளை ஏற்றுக்கொண்டவரில்லை பாரதி என்னும் கருத்தை, அரங்கத்தில் இருந்த இளைய வர்களுக்கும் எளிதாகப் புரியவைத்தது அந்தப் பாடலுக்கான நடனம்.
அபிநயத்தில் காக்கா பிடித்தேன்
ஒருவரிடம் நமக்கு வேண்டிய காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்காக அவரிடம் நைச்சியமாகப் பேசி, காக்கா பிடிப்பதுகூட எளிமையானதுதான். ஆனால் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ பாடலுக்கு ஆடிய மேதா அரி, தலையையும், கண்களையும் 45 டிகிரியில் சாய்த்துக்கொண்டு மேடையில் வலம் வந்தது அரங்கத்தில் இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.
“மயில், குயில், மானுக்கெல்லாம் அபிநயம் பிடிச்சிருக்கேன். ஆனால் காக்காவுக்கு அபிநயம் பிடிப்பது சவாலாக இருந்துச்சு. காக்கையின் நிறம், மரங்களின் பசுமை, தீயின் வெம்மை இப்படி எல்லாவற்றிலும் இறைவனை உணர்வதுதான் அந்தப் பாடலின் அர்த்தம்.
இந்தப் பாடலை ராகமாலிகையாக அமைச்சிருந்தாங்க. காக்காவுக்கு அபிநயம் பிடிப்பதற்கு வசதியாக ஒரு ஸ்வரக் கட்டை அமைத்துத் தரும்படி விஜயலஷ்மியிடம் கேட்டுக்கிட்டேன். அவரும் பாடல் தொடங்கும் சிந்துபைரவி ராகத்தின் ஸ்வரக் கோவையில் ‘க’ ஸ்வரம் அடுத்தடுத்து வருவது போல் அமைச்சார். இதனால் அந்த அபிநயம் சிறப்பாக வெளிப்பட்டுச்சு” என்கிறார் தலைசாய்த்துச் சிரித்தபடி மேதா அரி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago