இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது' என்றார் காந்தி. மேடைப் பேச்சின்போது போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள் அல்ல இவை. நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள நிலைமைகளைப் பார்த்து, அதன் பிறகு அவர் உதிர்த்த அனுபவ ஞானம்.
ஆனால் இன்று எப்படி இருக்கின்றன கிராமங்கள்? மின்சாரம் இல்லாத, செல்போன் பார்க்காத, இணைய வசதி இல்லாத தலைமுறை இப்போதும் கிராமங்களில் இருக்கவே செய்கின்றன.
மரங்களடர்ந்த காடுகள், நீர்நிலைகள், மாசுபடாத காற்று, பாரம்பரிய வேளாண்மை போன்ற இயற்கை வளங்களில் வாழ்கிறது கிராமங்களின் ஆன்மா. அவற்றை எவ்வாறு திறம்படப் பாதுகாப்பது என்பதை அங்குள்ள பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு யாரும் இல்லை என்பதுதான் வேதனை.
“அந்த வேதனை எங்களுக்கும் இருந்தது. ஆனால் எங்கள் கிராமத்தில் உள்ள ‘கிராம வள மையம்' மூலம் எங்கள் வேதனைகளுக்கு ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது” என்கிறார்கள் கொல்லிமலையைச் சேர்ந்த விவசாயிகள்.
வெறும் மையம் அல்ல பாலம்
அதென்ன கிராம வள மையம்? சுருக்கமாகச் சொன்னால் வெளி உலகுடன் கிராமங்களை இணைக்கும் பாலம் எனலாம். அரசு என்னென்ன திட்டங்களை உருவாக்குகிறது, அவற்றை எவ்வாறு பெறுவது என்பது முதற்கொண்டு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, பள்ளிக் குழந்தைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்தக் கற்றுத் தருவது வரை அனைத்துப் பணிகளையும் இந்த கிராம வள மையம் சேவையாக மேற்கொள்ளும்.
அப்படி ஒரு கிராம வள மையம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ளது. இதனைச் சென்னையைச் சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தை பராமரிக்கும் இளைஞர் அணி
பருவநிலை மாற்றம் விவசாயத்தைதான் முதலில் தாக்குகிறது. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றபடி, தங்களின் பாரம்பரிய அறிவைக் கொண்டும், நவீன அறிவியலின் துணையோடும் எவ்வாறு விவசாயத்தை மிகக் குறைந்த வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது இந்த மையம்.
“இந்த கிராம வள மையம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் ஆகின்றன. கொல்லிமலையில் செம்மேடு என்கிற கிராமத்தில் இந்த கிராம வள மையம் இருக்கிறது. இதன் கீழ் 7 கிராமங்களில் ஒவ்வொரு கிராம அறிவு மையங்கள் செயல்படுகின்றன. அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்களுக்குப் பயிற்சியளித்துள்ளோம். தற்போது அவர்கள்தான் இந்த மையங்களை நிர்வகித்துவருகிறார்கள்.
வானிலை தொடர்பான தகவல்கள், அரசின் கடனுதவித் திட்டங்கள், கால்நடை மருத்துவ முகாம், புதிய வேளாண் கருவிகள், விவசாயப் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது, அதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றிக் கொள்வது என விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்துதான் இந்த மையங்களில் பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை தவிர, பள்ளிக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கணினிப் பயிற்சி அளிப்பது, மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மையம் உள்ள கட்டிடம் அரசுக்குச் சொந்தமானது. அதில் உள்ள உபகரணங்களை நாங்கள் அளித்துள்ளோம்” என்கிறார் இம்மையத்தில் தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றும் முனைவர் ஆலிவர் கிங்..
சென்னையில் குத்தம்பாக்கம் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த இளங்கோவால் தொடங்கப்பட்ட ‘கிராம தன்னாட்சி அறக்கட்டளை' மூலம் கிராம முன்னேற்றத்துக்காகப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அறக்கட்டளையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் நந்தகுமார் சிவா, இத்தகைய கிராம மையங்களில் இளைஞர்கள் எத்தகைய வழிகளில் பங்களிப்புச் செய்ய முடியும் என்பது பற்றிக் கூறுகிறார்.
“இந்த கிராம மையங்கள், அந்தந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதுதான் அடிப்படையான பணி. உதாரணத்துக்கு, பஞ்சாயத்து அலுவலகங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களின் பட்டியல் இருக்கும். அதைக் கொண்டு ஒய்வூதியம், ஆயுள் காப்பீடு போன்ற திட்டங்களைப் பெற உதவி செய்யலாம்.
பல கிராமங்களில் தங்களின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை இழந்து நகரத்துக்கு வந்து செல்லும் நிலை இருக்கிறது. இதனை அவர்கள் இணையம் மூலமாகச் செலுத்த இளைஞர்கள் உதவி செய்யலாம்.
வாசகர் வட்டம் நடத்தலாம்...
அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் கணக்குகளை நிர்வகிக்க, ‘எக்ஸெல்' போன்ற அடிப்படையான புரோகிராம்களைக் கையாள அவர்களில் சிலருக்குக் கற்றுத் தரலாம். இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்கு, பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு தருகிற மடிக்கணினி போல அடிப்படையான சில மென்பொருட்களுடன் கூடிய ஒன்றிரண்டு கணினிகள் போதும்.
கிராமங்கள் அடிப்படையாக விவசாயத்தைச் சார்ந்திருப்பதால், நவீன விவசாய முயற்சிகள், ஊரில் உள்ள நீர்நிலைகள் குறித்த தரவுகள் போன்றவற்றை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். மேலும், புத்தக வெளியீட்டு விழாக்கள், வாசகர் வட்டம் போன்றவற்றையும் நடத்தலாம்” என்றார்.
ஆக, ஒரு விதத்தில் கிராமங்கள் தன்னிறைவு அடைவதற்கான முதல் படி இந்த கிராம வள மையங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
பெண் விவசாயிகளும், இளம் விவசாயிகளும்தான் இனி நம் நாட்டின் விவசாயத்தைத் தீர்மானிக்கப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்றைக்குப் பல இடங்களில் இளைஞர்கள் பலர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஏன் இத்தகைய கிராம வள மையங்களை ஏற்படுத்தக் கூடாது? ஆன்மாவின் தரிசனம் காண வாருங்கள்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
26 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago