மச்சி, ட்ரீட் எப்போ?

By காயத்ரி நரசிம்ஹன்

கல்லூரி நண்பர்களிடையே ட்ரீட்ங்கிற வார்த்தை அடிக்கடி கேட்கும். ‘ஹேப்பி பர்த்டே’வைத் தொடர்ந்து (சில சமயங்களில் முன்னரேகூட) தவறாமல் காதில் ஒலிப்பது ‘மச்சி, ட்ரீட் எப்போ?’. பிறந்த நாள் வருகிறதென்று ஆர்வமாகக் காத்திருப்பவர்களின் மனதில்கூட ஒரு ஒரத்தில் மண்டிக் கிடக்கும், ‘இந்த வருஷம் ட்ரீட் கொடுக்க எவ்வளவு செலவாகுமோ’என்ற பயம்.

“இதுக்கெல்லாமா ட்ரீட் கேப்பாங்க?” என்று வியக்கவைக்கும் அளவுக்கு அற்பக் காரணங்களுக்காக ட்ரீட் கேட்பதில் கில்லாடிகள் அனைவரது நட்பு வட்டத்திலும் உண்டு.

“அவன் கூட பைக்-ல அந்த விளம்பரத்தைக் கடந்து போறப்பவே நினைச்சேன், இங்க ட்ரீட் வெக்க சொல்லிடுவான்னு.” வருண் சுட்டிக்காட்டி குமுறியது பீட்சா ஹட்டின் “அன்லிமிட்டட் பீட்சா பார்ட்டி” சலுகையைக் குறித்து.

200 ரூபாயில் எவ்வளவு பீட்சாக்கள் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற அந்தச் சலுகையால், கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் அங்கே செல்கிறார்கள். ட்ரீட் கொடுப்பதற்கு ஏதுவாகவே அமைக்கப்பட்ட இந்தச் சலுகையை எல்லாம் நீக்கிவிட்டால் பரவாயில்லை என்று வருண் கூறுவதை மறுத்து மேக்னா சொன்னது, “சலுகை இல்லைன்னாலும் ட்ரீட் குடுத்தே ஆகணும். அதுக்குச் சலுகை இருந்தாலாவது கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.” ஐந்து இலக்க ரூபாய்க்கு ட்ரீட் வைத்த பரிதாபமான அனுபவம் அவருக்கு.

டெல்லியில் படிக்கும் பிரியங்கா, “எங்களுடையது பெரிய தமிழ் கூட்டம். ஒவ்வொரு மாசமும் யாருக்கெல்லாம் பிறந்தநாள் இருக்கோ, அவங்க எல்லாரும் சேர்ந்து மத்த 30-40 பேருக்கு நம்ம ஊர் சாப்பாடு ட்ரீட் வைப்போம். இந்த மாதிரி சந்திப்புகள்தான் எங்களை இணைச்சு வெச்சிருக்குன்னு சொல்லலாம்” என்று உணவால் இணைந்த கதையைக் கூறினார்.

“நியாயமா 4 பேர் ஒரு இடத்துக்குச் சாப்பிடப் போனால்கூட, ‘டச் ட்ரீட்’ (Dutch Treat)-னு அதுக்கு பெயர் வைக்காத வரை, முதலில் பர்ஸை வெளியே எடுப்பவரே மொத்த செலவையும் ஏத்துக்குற சிஸ்டம் எல்லாம் இருக்கு. பெயர் எல்லாம் போட்டுடாதீங்க. இதுக்கும் ட்ரீட் கேப்பாங்க” என்று நழுவினார் ஒரு ஐ.டி. வல்லுநர்.

அதிக பணப் புழக்கமும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமுமே இதற்கு மூல காரணமாக இருப்பினும், நம் பிறந்தநாளை மற்றவர் கொண்டாடும் அளவுக்கு வளர வேண்டும் என்பதை இத்தலைமுறையினர் தவறாகப் புரிந்துகொண்டார்களோ என்று தோன்றுகிறது.

கேக், பப்ஸ், ரஸ்னா என்று எளிமையாகக் குழந்தைகளின் பிறந்தநாட்கள் கொண்டாடப்பட்டுவந்த காலம் போய், இப்போது தீம் பார்ட்டிகள் வழக்கமாகிவிட்டன.

மெக்டொனால்ட்ஸ், மேரிப்ரௌன் போன்ற உணவகங்கள் இதற்கெனத் தனி பேக்கேஜ்-களை வழங்குகின்றன.

குறைந்தபட்சம் 15 பேர் வந்தால் மட்டுமே புக் செய்யப்படும் ஹாலில், குழந்தைகளைக் கவரும் விதத்தில் சோட்டா பீம், டோரா அலங்காரத்தில் தொடங்கி, சிறு விளையாட்டுகள், அன்பளிப்புகள் அனைத்தையும் உள்ளடக்கும் பேக்கேஜ்கள், தலா 200 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

ஒரு மாதத்தில் 4-5 பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடப்பதாகத் தெரியவருகிறது.

ஒரு பார்ட்டிக்கு ஆகும் செலவு 5,000 ரூபாய் (ஏறத்தாழ) ஒவ்வொரு மாதமும் நகரின் ஒரு சிறு பகுதியில் பார்ட்டிக்காகச் செலவிடப்படும் தொகை சுமார் 20,000 ரூபாய்.

அதே 20,000 ரூபாய் பணத்துக்கு, நாளுக்கு 10 பேர் வீதம் ஒரு மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட வயிறுகளை நிறைக்கும் சக்தியும் உண்டு என்பதை உணர்ந்தவர்களும் சிலர். ஒரே நாளில் பிறந்த கரணும் அக்‌ஷயும், தங்களது நண்பர்களுடன் குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று உணவளித்தது மட்டுமல்லாமல் ஒரு நாள் முழுவதும் அக்குழந்தைகளுடன் செலவளித்துள்ளனர். 36 குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த அவர்களுக்குத் தேவைப்பட்டது சுமார் 1,500 ரூபாய் மட்டுமே!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்