என் சொந்த ஊர் சிவகாசி. எனக்கு எல்லாமே நிறைவாக உள்ளன. பெற்றோர், சகோதரன், நண்பர்கள் இப்படி என்னைச் சுற்றிலும் உள்ள அனைவரும் மிகுந்த அன்போடு இருக்கிறார்கள். எனக்கு எக்கச்சக்கமான நண்பர்கள். நான் ஒருபோதும் தனிமையை உணர்ந்ததில்லை. இவ்வளவு இருந்தும் எனக்கு யாருமே இல்லை என்கிற உணர்வு அடிக்கடி வருகிறது.
முன்பெல்லாம் தூக்கத்தில் நேர்மறையான, உற்சாகமூட்டக்கூடிய கனவுகள் வரும். ஆனால் இப்போது கனவுகள் வருவதே இல்லை. இதனால் வெறுமையாக உணருகிறேன். எனக்கென்று ஒரு காதலி இல்லை என்பதால்தான் நான் இப்படி உணருகிறேன் என்கிறார்கள் என்னுடைய நண்பர்கள். என்னுடைய அத்தனை நண்பர்களும் காதலிக்கிறார்கள். நான் மட்டும்தான் காதலி இன்றி இருக்கிறேன்.
அவர்கள் சொல்வது போல இதுதான் என் வெறுமைக்குக் காரணமா? நான் இப்படி ஏங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஜாலியான கனவுகள் கண்டு மனநிறைவுடன் தூங்கிய நாட்கள் மீண்டும் வர நான் என்ன செய்ய வேண்டும்?
கனவோடு தூங்கிப் புத்துணர்வோடு எழுந்திருக்க ஆசைப்படும் வித்தியாசமான நண்பரே! ‘நமக்குன்னு யாருமே இல்லையே’ என்னும் ஏக்கம் இந்த வயதிலே (வயதைக் குறிப்பிடாவிட்டாலும் இளைஞன் என்றே நம்புகிறேன்!) வராமல் வயதான பின்பா வரும்? சந்தேகமே வேண்டாம், இதுதான் காரணம். விடலைப் பருவத்திலிருந்து எந்தப் பெண்ணிடமும் உங்களுக்கு ஒரு கிளர்ச்சி, ஈர்ப்பு, காதல் எதுவுமே ஏற்படவில்லையா? ஒரு நடிகையை நினைத்து? பத்திரிகை விளம்பரப் படங்களில் உள்ள பெண்களைப் பார்த்து? போகிற, வருகிற பெண்ணைப் பார்த்துக் ‘கமெண்ட்’ அடித்து, சிரித்து, கிளுகிளுப்படைந்து? ஹும்? சுய இன்பம் அடைந்ததுண்டா?
இவையெல்லாம் பதின்ம வயதினருக்கு உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்களின் உளவியல், உயிரியல் பாதிப்புகள். ஒரு ஆணையும் பெண்ணையும் இனவிருத்திக்குத் தயார் செய்யும் ஆயத்தங்கள். உண்மையாக இவை எதுவும் நிகழவில்லையென்றால், மாற்றிச் சிந்திக்கத் தோன்றுகிறது!
கடிதத்தில் நீங்கள் உங்களைப் பற்றி அதிக விவரங்கள் கொடுக்கவில்லை. ஆதலால் நீங்கள் உங்கள் ஊரில் உள்ள மனநல மருத்துவரைச் சந்தித்து, கூச்சப்படாமல் இது பற்றிப் பேசுங்கள். பைத்தியம் பிடித்துவிட்டதென்றோ, பெரிய கோளாறு என்றோ கவலைப்பட வேண்டாம். காரணம் என்ன என்று புரிந்துவிட்டால் தீர்வு தெளிவாகிவிடும்.
மேற்சொன்ன விவரங்கள் உங்களுக்கு உண்டு என்றால், உங்களுக்குத் தேவை ஒரு பெண் தோழி அல்லது காதலி.
நான்காம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். நானும் அவளும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். அவளுடைய அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் என் தோழியே எனது வாழ்க்கைத் துணையாக அமைய வேண்டும் என நினைத்தேன். என் விருப்பத்தை அவளிடம் கூறினேன்.
ஆனால் அவளுடைய பெற்றோர் மீது அவள் வைத்திருந்த பாசத்தால் என் காதலை நிராகரித்துவிட்டாள். நானும் நண்பர்களாகவே தொடர்வோம் எனச் சொல்லி அவள் மறுப்பை ஏற்றுக்கொண்டேன். குடும்பத்தின்மீது அவள் வைத்திருக்கும் அன்பு என்னை மேலும் கவர்ந்தது. அவள் என்னை நிராகரித்து மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னும் அவள் நினைவுகள் என்னை விட்டு விலகவில்லை. இப்போது எங்களுக்குள் பேச்சுத் தொடர்புகூட இல்லை. ஆனால் அவளுடைய நினைவுகள் எனக்குள் மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன இதிலிருந்து மீள வழி கூறுங்கள்.
மாணவரே, இப்போது காதலியும் கிடைக்கவில்லை, நல்ல தோழியும் கை நழுவிப் போய்விட்டார். அவர் உங்களை நண்பராகத்தான் பார்த்தாரென்றே தோன்றுகிறது. உங்கள் மனதில் குற்ற உணர்வு இருக்கலாம், ‘அவசரப்பட்டுக் கெடுத்துக்கொண்டேனே!’ என்று! காதல் வேகம் அதிகமிருந்திருந்தால், அதைக் கட்டுப்படுத்த முடியாது. சொல்லியிருக்காவிட்டால் தவித்து அவஸ்தைப்பட்டிருப்பீர்கள். உண்டா, இல்லையா என்கிற போராட்டம் தொடராமல் முடிந்துவிட்டதும் ஒரு விதத்தில் நல்லதுதான்!
மன அழுத்தம் என்று மனச் சோர்வைத்தான் சொல்கிறீர்களா? அதைச் சரிசெய்துகொள்ள சில வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறேன். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மண்டும்போது சோர்வு உண்டாகி வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். ‘நான் அவசரப் பட்டுவிட்டேன்’, ‘அவள் ஏன் என்னை நிராகரித்துவிட்டாள்?’, ‘என்னிடம் காட்டிய பாசம் பொய்யா?’, ‘நான் அப்படி என்ன தப்பாகக் கேட்டுவிட்டேன்?’, ‘என்னிடம் பேசவேமாட்டாளா?’, ‘இனி அவளைப் பார்க்கவே முடியாதா?’, ‘நான் அதிர்ஷ்டமில்லாதவன்’ - இதுபோன்ற எண்ணங்கள் வறுத்தெடுக்கும்போது மகிழ்ச்சியாகவா இருப்பீர்கள்?
முதலில் இந்த எண்ண ஓட்டத்தை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் மனதில் அவரைப் பற்றிய எண்ணங்கள் வரும்போது விழிப்பாக இருந்து கவனித்து, ‘போதும் நிறுத்து’ என்று சொல்லிக்கொள்ளுங்கள். உடனே வேறு ஒரு செயலில் கவனத்தைத் திருப்புங்கள். கடந்த காலம் சரித்திரம். நடந்து முடிந்ததைப் பற்றிய எண்ணங்களில் மூழ்கி இருக்க இருக்க வருத்தமும் குற்ற உணர்வும்தான் மிஞ்சும். எதிர்காலம் தெரியாத புதிர்! அதைப் பற்றி நினைத்தால் கவலையும் பயமும் அதிகரிக்கும். நிகழ்காலம் நமக்குக் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு. அதைச் சரியாக உபயோகித்தால் பலன் நமக்கே! எப்போதும் ‘அந்த நிமிடத்தில்’ இருங்கள். மகிழ்ச்சி கூடும்.
தினசரி வாழ்க்கையில் வெட்டியாக நேரம் இல்லாமல் அடுத்தடுத்து வேலைகளை வைத்துக்கொள்ளுங்கள். மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை நடைமுறையாக்குங்கள். வாழ்க்கை இனிக்க ஆரம்பித்துவிடும்!
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago