வாட்ஸ் அப்பும் உங்களை முட்டாள் ஆக்கியதா?

By ரோஹின்

இது வாட்ஸ் அப் காலம். நெருக்கமான நண்பர்களுக்குள் அந்தரங்கமான பல விஷயங்களை, படங்களைப் பரிமாறிக்கொள்கிறோம். அன்று காலை வந்த வாட்ஸ் அப் செய்தி ஒன்று அதிர்ச்சியூட்டியது. உங்கள் வாட்ஸ் அப் செய்தியை எல்லாம் அனைவரும் படிக்க முடியும் என்று குண்டைத் தூக்கிப் போட்டது. நாம் அனுப்புவது ரகசியம் என்ற நினைப்பில்தானே பலரும் பலவற்றையும் பகிர்ந்துகொள்கிறோம்.

அப்படியிருக்கும்போது இந்தச் செய்தி அதிர்ச்சி தந்ததில் ஆச்சரியமில்லை. உடனடியாக அந்தச் செய்தியில் தரப்பட்டிருந்த இணையளத்துக்குச் சென்றால், அங்கே எந்த எண்ணிலிருந்து சென்ற செய்திகளைப் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த எண்ணை இங்கே டைப் அடியுங்கள் என்ற தகவல் தெரிந்தது.

அதன் கீழே ஒரு செவ்வகக் கட்டம் இருந்தது. அதில் எண்ணை அடித்துவிட்டுக் காத்திருந்தால் அது சுற்றிக்கொண்டே இருந்தது. நூறு சதவீதம் சுற்றி முடிந்ததும் வந்த செய்தியைப் பார்த்ததும் அடப் போங்கடா என்று ஆகிவிட்டது. பின்னர் தேதியைப் பார்த்தபோதுதான் ஏப்ரல் ஒன்று என்று தெரிந்தது. இணையதளத் திரையில் தெரிந்த செய்தி ஏப்ரல் ஃபூல் என்பதை இப்போது உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

அதிகாலையிலேயே பல்பு வாங்கியதால் அதைப் பலருக்கும் அனுப்ப மேலும் பலரும் பல்பு வாங்கினார்கள். நாம் மட்டும் ஏமாந்தால் சலிப்பாகவும் அனைவரும் ஏமாந்தால் சிரிப்பாகவும்தானே இருக்கிறது. இப்படி ஆண்டு தோறும் நண்பர்களை ஏமாற்றி அசடுவழிய வைப்பதில் ஒரு சிறிய சுகம் இருக்கிறது. எனவே அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் செய்துவருகிறோம். இது இன்று நேற்று தொடங்கிய வழக்கமல்ல. நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய வழக்கம்.

கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் ஆண்டின் தொடக்கமாக ஏப்ரல் முதல் தேதியே பிரான்ஸில் இருந்துவந்தது. அனைவரும் அந்த நாளில் உற்சாகமாக வருடப் பிறப்பைக் கொண்டாடிவந்தார்கள். ஆனால் இந்த நிலைமை 1582-ல் திடீரென மாறியுள்ளது. அந்த ஆண்டிலிருந்து வருடத் தொடக்க தினமாக ஜனவரி முதல் நாளைக் கொண்டார்கள். இது தொடர்பான செய்தி மக்கள் அனைவரையும் முழுமையாக வந்தடையவில்லை. சிலருக்குத் தெரிந்துள்ளது.

சிலர் இந்த ஆண்டின் தொடக்க தேதி மாற்றத்தை அறியவில்லை. எனவே இது தெரியாமல் அநேகர் வழக்கம்போல் ஏப்ரல் ஒன்றாம் தேதியை வருடத் தொடக்கமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இதன் காரணமாகக் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்கள். இதுதான் ஏப்ரல் ஃபூல், ஏப்ரல் ஃபூல் என நாம் நண்பர்களைக் கிண்டலடிப்பதற்கான தொடக்கம் எனச் சொல்லப்படும் ஒரு கதை.

இதைப் போன்ற வேறு சில கதைகளும் உள்ளன. கதை என்னவாக இருந்தாலும் என்ன, ஆண்டுதோறும் யாரிடமாவது ஏமாந்து கொண்டேயிருக்கிறோம். சிலரை ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறோம். இதெல்லாம் ஒரு அற்ப சந்தோஷம்தானே. இதுகூட இல்லாவிட்டால் வாழ்க்கை போரடித்து விடாதா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்