1. நானும் அவரும் நான்கு வருடங்களாகக் காதலித்துவருகிறோம். ஆனால் சாதியைக் காரணம் காட்டி என் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர் வீட்டில் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். ஆனால், என் பெற்றோரின் சம்மதத்தோடுதான் என்னைக் கல்யாணம் செய்துகொள்வதாக அவர் உறுதியோடு இருந்தார். இதற்கிடையில் ஒரு நாள் என் அம்மா அவர் குடும்பத்தினரை அழைத்து மிகவும் மோசமாகத் திட்டிவிட்டார். அந்தச் சம்பவம் நடந்தபோது என் காதலன் ஊரில் இல்லை.
ஆகவே நடந்த பிரச்சினை பின்னர்தான் அவருக்குத் தெரியவந்தது. அவருடைய அக்காதான் என் அம்மாவிடம் பேசினார். பிறகு நடந்த சம்பவம் அறிந்து என் மீது மிகவும் கோபம் கொண்டார். “உன் அம்மா கெட்ட வார்த்தைகள் பேசிவிட்டார். எங்களால் அதுபோன்ற விஷயங்களை ஜீரணிக்க முடியாது. ஆகவே எனக்கு நீ வேண்டாம். நாம் இணைவது என் குடும்பத்துக்கு நல்லதில்லை” எனச் சொல்லி எங்கள் காதலை முறித்துக்கொண்டார். ஆனால் என்னால் அவரை மறக்க முடியவில்லை. நான் அவரை மிகவும் காதலிக்கிறேன். அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. நான் எடுக்க வேண்டிய முடிவு என்ன என்பதும் புரியவில்லை. எப்படியாவது எனக்கு உதவுங்கள்.
நீங்கள் அனுபவிக்கும் துன்பம் எனக்குப் புரிகிறது என்றாலும் இதில் முடிவுதானே வரும் என்றே தோன்றுகிறது! உங்கள் அம்மா அவர் நினைத்ததை ஒரே உரையாடலில் சொல்லிக்கொண்டார். உங்கள் காதலரோ 'என் குடும்பம் (உன்னைவிட) எனக்கு முக்கியம்' எனறு தெரியப்படுத்திவிட்டார் (நாங்கள், எங்கள் என்று அவர் பேசுவதிலிருந்து உங்களை அந்நியப்படுத்திப் பேசுகிறார் என்பது புரிகிறதா?). உங்கள் அம்மாவின் செயலுக்கு உங்களை நிந்திக்கிறார். இவ்வளவையும் மீறி அவர்மீது கொண்ட காதல் அவரை மன்னிக்க உங்களைத் தயார் செய்திருக்கிறது.
இதற்கு இரண்டு தீர்வுகள் தென்படுகின்றன. அவர் கோபம் தணிந்ததும் உங்களை நாடி வரலாம். வந்தாலும், உங்கள் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவது, காதலருக்கும் அவரது பெற்றோருக்கும் அவர்கள் மேல் உள்ள கோபத்தைத் தணித்து, உறவைச் சரி செய்வது என அடுத்தடுத்த பிரச்சினைகள் காத்திருக்கும். இதையெல்லாம் நீங்கள் செய்ய முனைந்தாலும், அவர்கள் ஒத்துழைப்பார்களா என்பது சந்தேகம்தான்! காதலர் திரும்பி வரவில்லை என்றால் அவரது ‘முன்னுரிமை' நீங்கள் அல்ல என்பது தெளிவாகிவிடும்! ஒருவரை இழுத்து வைத்துக் காதலிக்க வைக்க முடியுமா? யோசியுங்கள்.
காதலிக்கும்போது புரியாத வாழ்க்கையின் நிதர்சனம், அது முறியும்போது புரியும். கற்றுக்கொள்ளும் பாடம் கசப்புதான்; ஆனால் எதிர்காலத்துக்கு வழிகாட்டும். காத்திருக்கும் காலகட்டம் உங்களை வதைக்கும். வசந்த கால நினைவுகள் ஒரு பக்கம்; காதலர் மீதும், உங்கள் அம்மா மீதும் உள்ள கோபம் மறு பக்கம் என்று ஒரு ராட்டினச் சுழற்சியில் மாட்டிக்கொண்டு தவிப்பீர்கள். நடந்து முடிந்ததை மாற்ற முடியாது. நடக்கப்போவதை அறிய முடியாது. இவற்றால் வருத்தமும், கவலையும்தான் மிஞ்சும். நிகழ்காலம்தான் உங்கள் கையில்; அதனால் உங்கள் கவனத்தைத் திசைதிருப்பி ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுங்கள்.
2. மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை என் அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது அவள் ஒருவரைக் காதலித்துக்கொண்டிருந்தாள். அவள் காதலை வீட்டில் சொன்ன சில நாட்கள் கழித்து, அவளுடைய அம்மா இறந்துவிட்டார். இதனால் அவள் குற்ற உணர்வுக்கு ஆளானாள். நான் என் குழந்தைப் பருவத்திலேயே அம்மாவை இழந்தவன் என்பதால் அவளுடைய நிலையைப் புரிந்துகொண்டு அவளுக்கு ஆறுதலாக இருந்தேன். ஒரு கட்டத்தில் அவள் காதலனை மறக்கச் செய்தேன். காதலனோடு அவளுக்கு இருந்த தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்த சூழலில் அவள் மீது எனக்குக் காதல் உண்டானது. ஆனால் அவளிடம் வெளிப்படுத்தவில்லை. அடிக்கடி எனக்கும் அவளுக்கும் சண்டை வரும்.
அப்படி ஒரு முறை சண்டைபோடும்போது அவளும் என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள். அதன் பிறகு இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், அந்நியோன்யமாகவும் இருக்க ஆரம்பித்தோம். அவள் தன்னை கல்யாணம் செய்துகொள்ளும்படி சொன்னாள். ஆனால், இதனால் அவள் அப்பாவையும் இழந்து விடுவாளோ என பயந்து மறுத்துவிட்டேன். ஆனால், இருவருடைய உறவு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவளுடைய அப்பா திருமணத்தை நிச்சயித்தார். அவள் அப்பாவின் சொல்லைத் தட்ட வேண்டாம் என நானும் அறிவுரை சொன்னேன். எது நடந்தாலும் நான் அவளுக்காக இருக்கிறேன் என்ற உறுதிமொழியும் அளித்தேன். ஆனால், நிச்சயமான பிறகு அவள் விரைவாக அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துவிட்டாள்.
என்னைத் தவிர்க்கத் தொடங்கினாள். மீண்டும் அவளைச் சந்தித்தேன். என்னை விரும்பினாலும் தன்னால் கல்யாணத்தை இப்போது நிறுத்த முடியாது என்றாள். ஒரு வேளை திருமணம் நின்றுபோனால் என்னோடு வருவதாகச் சொன்னாள். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. என்னை தூக்கி எறிந்துவிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். நான் மனமுடைந்து, விரக்தியடைந்த நிலையில் இருக்கிறேன். அவள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாள். எப்போதும் மரணத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது. ஆனால், மாரடைப்பால் விரைவில் இறந்துபோவேன் எனத் தோன்றுகிறது. இப்போது நான் என்ன செய்ய?
இதுவரை நீங்கள் உணர்வுகளின் சொல்படி நடந்திருக்கிறீகள். இப்போதுகூட நீங்கள் மரணத்தைப் பற்றி யோசிப்பதும் மாரடைப்பால் இறந்துவிடக் கூடாதா என்று நினைப்பதும் உணர்வுகளின் வழியாக வாழ்க்கையைப் பார்ப்பதால்தான். அந்தப் பெண்ணைக் காதலித்தது, கிடைத்த வாய்ப்பை அவருடைய அப்பாவை நினைத்து நழுவவிட்டது எல்லாமே உணர்வுபூர்வமான தீர்மானங்கள்தானே?
நீங்கள் என்ன செய்யக்கூடும் என்பதைப் பற்றி, கோபத்தையும் வருத்தத்தையும் ஒதுக்கிவைத்து, மூளையை உபயோகித்து அறிவு பூர்வமாகச் சிந்தியுங்கள். காதலி தனக்கு அமைந்த துணையுடன் 'ஜாலி'யாகப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். நீங்கள் அவருக்கு உண்மையாக இருப்பதை யார் பாராட்டப் போகிறார்கள்? நீங்கள் தேவையில்லை என்று ஒதுக்கிய பிறகு, அதில் என்ன பயன்?
நீங்கள் இன்னமும் அதே மென்னுணர்வுகளை அவர்பால் தக்க வைத்துக்கொள்வதில் ஒரு அபாயம் இருக்கிறது. நாளை கணவருடன் பிரச்சினைகள் வந்தால் காதலி உங்கள் பக்கம் திரும்பலாம். அப்போது மீண்டும் உணர்வுபூர்வமாகத் தீர்மானித்து அவருக்கு உதவப்போய், உங்கள் இருவர் வாழ்க்கையையும் குழப்பிவிடுவீர்கள்.
நீங்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ' சரக்கு இல்லை என்பதை முதலில் உணருங்கள். இதுவரை அப்படி நடத்த அனுமதித்துவிட்டீர்கள். யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே உங்கள் மீது கோபம் வரும். முதுகில் குத்தியவர் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால், அது உண்மையை மாற்றாது.
இனி அந்தப் பெண் தேவையில்லை என்று தினமும் பல முறை சொல்லிக்கொள்ளுங்கள். வலிக்கும்; பரவாயில்லை; தொடர்ந்து சொல்லுங்கள்; அது நாளடைவில் சிந்தனையில் தங்கும். அவரைப் பற்றிய நினைவைத் தவிர்க்க மனதை வேறு சில செயல்களில் திசைதிருப்புங்கள். விளையாட்டு, நீச்சல், நடனம், இசை, ஓவியம் வரைதல் போன்று ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுங்கள். மற்றொரு உறவை அவசரமாகத் தேடாதீர்கள்.
உளவியல் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளரான பிருந்தா ஜெயராமன் உங்களது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவார். கடந்த 20 ஆண்டுகளாக ‘ஆஷா’ எனும் அமைப்பின் மூலம் உணர்வு ரீதியான சிக்கல்கள், மன அழுத்தம், பதற்றம், போதை பழக்கம், மன உளைச்சல் உள்ளிட்ட பல உளவியல் பிரச்சினைகளுக்கு தனிநபர் ஆலோசனை மற்றும் குழு ஆலோசனைகளை அளித்துவருகிறார். பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகளில் மனநலம் காக்க நேர்மறையான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். அரசு மற்றும் தனியார் அமைப்புகளோடு இணைந்து மனநலம் காக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பல நடத்திவருகிறார்.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago