மந்தைவெளி அம்மனுக்கும் எனக்கும் ஒரு உடன்படிக்கை இருந்தது. பல நாட்கள் செருப்பைக் கோவில் வாசலிலேயே மறந்து போட்டுவிட்டு அருகே இருக்கும் மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். அப்போது நான் மூன்றாவது வகுப்புதான் படித்தேன். எனது கால் அளவும், செருப்பளவும் சிறியதுதான். ஒரு நாளும் திருட்டுப்போனதே இல்லை. மாலையில் வீடு திரும்புகையில், ‘இந்தாடா எடுத்துப் போட்டுட்டுப் போடா ஏ ராசா’ என்று அம்மனே காப்பாற்றி வைத்திருப்பாள் என் ஜோடி செருப்பை.
ஆனால் செருப்பைத் தொலைப்பது என்பது எனது மரபணுவில் உள்ள பிரச்சினை. காசி விஜயம் செய்தபோது, விசுவநாதர் கோயில் வாசலில் எத்தனையோ முறை விட்டும் ஒருமுறையும் தொலைந்தது கிடையாது. தமிழர்கள் தங்குவதற்காக நம்மவர்கள் அங்கே சென்று கட்டி வைத்திருக்கும் சத்திர வாசலில் ஒரே ஒரு முறை கழற்றி வைத்து, அது அடுத்த நொடியே காணாமல் மறைந்துபோய்விட்டது. வெளியே சொல்ல முடியுமா?
இப்படிச் செருப்பு தொலைத்த கதைகள் பல உண்டு. அவற்றில் இரண்டு மிகவும் ருசியானவை.
கதை ஒன்று
ஒரு ஞாயிற்றுக்கிழமை நண்பகலைத் தொடும் நேரத்தில் நான் பி.பி. ஸ்ரீநிவாசாக மாறிக்கொண்டிருந்தது தெரியாமல் எனக்குப் பின்புறம் சுவர் தாண்டி ஏதோ வந்து விழுந்த பெருஞ்சத்தம். திரும்பிப் பார்த்தால் பதினான்கு வயதுகூடச் சொல்ல முடியாத ஒரு சிறுவன். காலில் ஒரே ரத்தம். என்னை அச்சத்தோடு பார்த்தபடி, தத்தித் தத்தி நடந்து வந்தான். “என்னப்பா, யாரு நீ, எங்கிருந்து ஓடி வர்ற, எதுக்கு சுவர் எகிறி குதிச்ச?” என்று கேட்டேன்.
“சார், எங்க மாமா என்ன அடி அடின்னு அடிச்சுத் துவைச்சிட்டாரு சார்... தப்பி ஓடி வர்றேன்... குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்க சார்” என்றான். பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. பி.பி.எஸ். பாட்டைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே சமையல் அறைக்கு ஓடினேன். என்ன ஏது என்று கேட்டுக்கொண்டே வந்த அம்மாவிடம், “பாவம் சின்ன பையன்... மாமா அடிச்சாருன்னு ஓடி வந்து குதிச்சிருக்கான் நம்ம வீட்டுக்குள்ள... தண்ணி தாகம் பாவம்” என்றபடி தோட்டத்திற்குப் போனேன். ஆனால் பையனைக் காணோம்.
பத்து நிமிடங்கள் கழித்து மூன்று நான்கு பேர் ஓடி வந்தனர். “சார் சார், ஒரு பொடிப் பையன் உங்க காம்பவுண்ட் வழியாத் தானே குதிச்சான், எங்கே அவன்?” என்றனர். “நீங்கதான் அவன் மாமாவா..? பாவம், ஏன் இப்படிப் போட்டு அடிக்கிறீங்க... ரத்தம் சொட்டச் சொட்ட வந்தானே...” என்றேன்.
“மண்ணாங்கட்டி, யாருய்யா சொன்னது நான் அவனுக்கு மாமான்னு. திருட்டுப் பய சார். எதையோ திருட எங்க வீட்டுக்குள்ள புகுந்தான். பார்த்துக் குரல் கொடுத்ததும், அப்படியே உங்க காம்பவுண்ட் சுவத்துல ஏறி குதிச்சிருக்கான். அங்கே பதிச்சு வச்சிருக்கிற கண்ணாடிச் சில்லு குத்திக் கிழிச்ச காலில் இருந்து வந்த ரத்தமாயிருக்கும் சார் அது” என்றார் வந்தவரில் ஒருவர். போகட்டும் போ என்று அவர்களை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்து பார்த்தால், வீட்டு முகப்பில் விட்டு வைத்திருந்த செருப்பைக் காணவில்லை.
கதை இரண்டு
அதைவிட அருமையான செருப்புத் திருட்டுக்கு ஏமாற நான் திருவான்மியூர் சென்று குடியேற வேண்டியிருந்தது. அந்த வீட்டுக்கு இரண்டு பக்கம் வாசல்படி. முதல் நாள் இரவுதான் புது ஜோடி செருப்பை வாங்கி வந்திருந்தேன். முன்பக்க அறையின் ஓரம் இருந்தது அது. மறுநாள் அதிகாலை வழக்கம்போல், தண்ணீர்க் குழாயில் நீர் பிடித்துக் குடங்களைக் கொண்டு தரும் வேலைக்காரப் பெண்ணுக்காக ஒரு பக்க வாசல் கதவைத் திறந்து வைத்தேன். அப்படியே தரையில் கீழே உட்கார்ந்தவன் சொக்கித் தூங்கிவிட்டேன். விழித்தெழுந்து பார்த்தபோது இரண்டு குடம் தண்ணீர் பத்திரமாயிருந்தது. புது ஜோடி செருப்பு போயே போய்விட்டது.
அது பிரச்சினை இல்லை. எனது மாமனாருக்கு நான் செருப்பை ஏமாந்து திருட்டுக் கொடுத்தது பற்றி விளக்கக் கடமைப்பட்டிருந்தேன். “தெரியல சார்... யாரோ வந்து எடுத்துப் போய்விட்டான்” என்றேன். அவருக்குப் பயங்கர கோபம். உடனே என்னைக் கடிந்துகொள்ள அவருக்குத் துணை நின்றது எனது நாத்திகம்தான். வீட்டுக்கு நடுவே நின்றுகொண்டு, “ஒரு பயலும் இங்க சாமி கும்பிடறதில்ல... ஒரு பூஜை, புனஸ்காரம் எதுவும் இங்க கிடையாது... அதான் செருப்பு போச்சு... கொஞ்சமாவது பயபக்தி இருந்தா இப்படியெல்லாம் நடக் குமா?” என்றார் உரத்த குரலில்.
“நானாவது கோயிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுட்டு வர்றேன். இன்னும் என்ன எல்லாம் நடக்குமோ?” என்றபடி இன்னொரு வாசல் பக்கம் சென்றார். தனது செருப்பை எடுத்துப் போட்டுக் கொள்ளச் சென்றவர், நெருப்பை மிதித்தவர் மாதிரி துடித்தார்.
அவரது ஜோடி செருப்புக்களும் சேர்ந்தே காணாமல் போயிருந்தன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago