நம் எல்லோருக்குள்ளும் சிறு குழந்தை ஒன்று இருக்கிறது. நமக்கு என்ன வயதானாலும் சரி, அது எப்போதுமே குழந்தையாகத்தான் இருக்கிறது. அந்தக் குழந்தைதான் நமக்குள் சக்தியின் ஊற்றாக இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் வேதனைகள், சிக்கல்கள் காரணமாக அந்தக் குழந்தையுடன் நமக்கு இருக்கும் தொடர்பு விடுபட்டுப் போய்விடுகிறது. அப்படி ஆகும்போது வாழ்க்கையுடனான நம் தொடர்பும் அறுபட்டுப் போகிறது.
இந்த நிலை மன அழுத்தம் உருவாவதற்கு ஏற்றதாக அமைந்துவிடுகிறது. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுடன் தொடர்பு விட்டுப் போய்விடுகிறது. எல்லோரிடமிருந்தும் விலகிப் போய்விடுவது, எப்போதும் தனிமையில் நேரம் கழிப்பது, மிகவும் பிடித்த விஷயங்கள்கூட சுவாரஸ்யமற்றுப் போய்விடுவது, சந்தோஷம் அளித்த விஷயங்கள் சற்றும் சந்தோஷம் கொடுக்காமல் போவது, சுய நிந்தனை, எதிலும் பிடிப்பு இல்லாமல் போவது, இவை எல்லாமே மன அழுத்தத்தின் அறிகுறிகள்தான். நமக்குள்ளே இருக்கும் அந்தச் சிறு குழந்தையை நாம்தான் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவேண்டும். அது நம்முடைய பொறுப்புதான்.
நான் நன்றாகப் படித்திருகிறேன் ஆனால் ஆங்கிலம் தெரியாது என்பதனால் வேலையின்றி ஆறு மாதங்களாக கஷ்டப்படுகிறேன். மன உளைச்சல் அதீதமாக உள்ளது. ஒரு கற்பனை உலகில் வாழ ஆரம்பித்துவிட்டேன். திடீரென அழுகை வருகிறது. பிறகு அமைதியாக இருப்பேன். திடீரென பல கதாபாத்திரங்கள் எனக்குள் பேசத் தொடங்கிவிடுகின்றன. நன்றாக வரையும் திறமை எனக்கு உண்டு. ஆனால் தனியாக இருக்கும்போது ஏதோ சிறையில் அடைப்பட்டவன் போல தவிக்கிறேன். எனக்கு உதவுங்கள்.
உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதது ஒரு பிரச்னை அல்ல. நீங்கள் சொல்வதிலிருந்து உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பதும், தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருப்பதும் தெரிகிறது. உங்கள் மனத்தில் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத, தன்னிச்சையான சிந்தனை ஓட்டம் நடந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. உங்களிடமிருந்தே நீங்கள் விடுபட்டுப் போயிருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.
நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களிலிருந்து நீங்கள் மிகவும் ஆழமான மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. கற்பனை உலகில் வாழ்வது, தீடீரென அழுகை வருவது, உங்கள் மனத்தில் பல கதாபாத்திரங்கள் பேசுவது, சிறையில் அடைபட்டதுபோல் இருப்பது இவை எல்லாமே தீவிரமான மன அழுத்தத்தின் அறிகுறிகள்தான். உடனடியாக நீங்கள் ஒரு மனநல மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
நான் ஒரு பெண்ணை 2 வருடங்களாகக் காதலித்துவருகிறேன். அவளுக்கு என் மேல் உண்மையான அன்பு இருந்தது. ஆனால் இப்போது அந்த அன்பு இல்லை. இப்போது அவள் வேறொருவரைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள். வேறு ஆணை அவள் காதலிக்கிறாள் எனத் தெரிந்தும் என்னால் அவளை மறக்க முடியவில்லை. நான் நிம்மதியாகத் தூங்கி நான்கு மாதங்கள் ஆகின்றன. சாப்பிடவும் முடியவில்லை. என் நண்பர்களோடு சகஜமாகப் பேசக்கூட முடியவில்லை. கண்களை மூடினாலே அவள் நினைவுகள் துரத்துகின்றன. அவளிடம் கெஞ்சத் தொடங்கிவிட்டேன்.
முன்பு என் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தாள். ஆனால் இப்போது பட்டும்படாமல் பேசுகிறாள். ஆனால் என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளிடம் கெஞ்சிப் பிரயோஜனம் இல்லை என நினைத்துப் பேசாமலும் இருக்க முடியவில்லை. இப்போதெல்லாம் என் பெற்றோர், பாட்டி யாரோடும் நான் பேசுவதில்லை, தனிமையில் இருக்கிறேன். எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது. நானும் மற்றவர்களைப் போல நிம்மதியாக இருக்க வேண்டும், உதவுங்கள்.
உங்கள் இருவரிடையில் என்ன நடந்தது என்று நீங்கள் சொல்லவில்லை. ஆனால் அந்த உறவு முடிந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்களால் அந்த உண்மையை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடந்து முடிந்துவிட்ட ஒரு விஷயத்தை உங்களுக்குள்ளே நீங்கள் மிகைப்படுத்திப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ‘உண்மையான அன்பு’, ‘அளவு கடந்த பாசம்’ போன்ற சொற்கள் இதைத்தான் காட்டுகின்றன. மனத்தினுள் இன்னும் அதில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
இந்தக் காரணத்தால் உங்களையே நீங்கள் மறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தனித்தன்மையை விட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பெண் பற்றியும் அந்த உறவு பற்றியும் நிறைய கற்பனைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தினுள் நுழைவதைத் தவிர்க்கிறீர்கள். இது நல்லதல்ல. ஏற்கனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
இது உங்களை இன்னும் மன அழுத்தத்தில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். அது முடிந்துபோய்விட்டது என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன் விளைவாக ஏற்படும் வேதனையைக் கடந்து செல்லுங்கள். உங்கள் மனத்தில் புதிய தெளிவு பிறக்கும். மனித உறவுகள் பற்றி இந்தப் பகுதியில் ஏற்கனவே நிறையப் பேசியிருக்கிறோம். அதையெல்லாம் படியுங்கள். உதவியாக இருக்கும்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,
சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago