கண்மூடித்தனமாக காதலை எதிர்க்கலாமா?

By ஆனந்த் கிருஷ்ணா

காலம் மாறிவருகிறது. பல நூற்றாண்டுகளாகக் கேள்விகள் ஏதும் கேட்கப்படாமல் இருந்துவந்திருக்கும் நம்பிக்கைகள் இப்போது வாழ்க்கையின் புதிய வெளிச்சத்தில் கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. இளைய தலைமுறையினர் வாழ்க்கையைப் புதிய கோணங்களிலிருந்து பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

புதிய அறிவுத் தளங்கள் புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவிக்கின்றன. புதிய நம்பிக்கைகள், புதிய பார்வைக் கண்ணோட்டங்களை உருவாக்குகின்றன. புதிய கேள்விகளை அவர்கள் கேட்கிறார்கள்.

புதிய கேள்விகளுக்கான புதிய பதில்களைத் தேடும் வேலை தொடங்கியாயிற்று. இந்தத் தேடுதல் நம்மை எங்கெங்கே அழைத்துச் செல்லப் போகிறது? வாழ்க்கை எந்தப் புதிய தடங்களை அமைக்கப் போகிறது? எந்த விதமான புதிய அனுபவங்களுக்கு நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்?

இவைதான் இப்போது நம் முன் உள்ள கேள்விகள். இன்றைய தலைமுறையினர் இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். பொறுப்புள்ள பெரியவர்கள் அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களின் பயணத்தில் பங்குகொள்வதோடு மட்டுமில்லாமல் தாமும் வாழ்க்கை பற்றிய புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளத் திறந்த மனத்தோடு தயாராக வேண்டும்.

நான் ஒரு வனவியல் பட்டதாரி. இந்திய ஆட்சிப் பணிக்கு தயாராகி வருகிறேன். நானும் என் தோழியும் கடந்த ஆறு வருடங்களாக நேசித்துவருகிறோம். அவள் பொறியியல் பட்டதாரி. அவளும் இந்திய ஆட்சி பணிக்குத் தயாராகிவருகிறாள். எங்கள் காதலை எங்கள் பெற்றோரிடம் தெரிவித்து விட்டோம். என் வீட்டில் முழுச் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் என் காதலி வீட்டில் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

அவளுடைய வீடும் என்னுடையதும் ஒரே பகுதியில் இருப்பதால் எங்கள் குடும்பத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் அவர்கள் நன்றாக அறிவார்கள். சுமுகமான உறவு எங்கள் இரு வீட்டாரிடத்திலும் இருந்தது. இருப்பினும் சாதி, வேலையின்மையைக் காரணம் காட்டிமறுக்கிறார்கள். நல்ல வேலையில் சேர்ந்து எங்கள் திறமையை நிரூபிக்க ஒரு வருடம் அவகாசம் கேட்டபோது அறவே மறுத்துவிட்டார்கள். தினமும் வீட்டில் போராட்டங்களைத் தாங்கிக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் என் தோழி.

என் அப்பா அவளுடைய அப்பாவிடம் பேசினார். ஆனால் அவர் மிக நாகரிகமாக மறுத்துவிட்டார். இதற்கிடையில் அவளது பெற்றோர் திடீரென்று வேறொருவரோடு திருமண ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அவள் துணிச்சலாக மறுத்துவிட்டாள். இதனால் தினமும் திட்டும், அடியும் வாங்கியபடி உறுதியான மனதோடு போராடிவருகிறாள். இந்தச் சூழ்நிலையில்கூட எங்களுக்கு அவளின் பெற்றோரை மீறி வெளியே வர மனம் இல்லை.

அவள் தன் காதலை எப்படியும் தன் பெற்றோருக்குப் புரியவைத்துவிட முடியும் என்ற வைராக்கியத்தோடு வேதனைகளைத் தாண்டிக் காதலையும், படிப்பையும் தொடர்கிறாள். இந்த ஆறு வருடக் காதல் வாழ்க்கையில் எங்களுடைய சுயகட்டுப்பாட்டை என்றுமே நாங்கள் இழந்ததில்லை. அவளது பெற்றோர் உறவினர்களின் பேச்சுக்குப் பயந்துதான் எங்கள் காதலை எதிர்க்கிறார்கள்.

எங்கள் காதல், திறமை இரண்டையும் நிரூபிக்க வாய்ப்பும், அவகாசமும் அவர்கள் கொடுக்க வேண்டும். இந்த நிலையில் எங்கள் சிக்கலுக்கு ஒரு தீர்வை சொல்லுவதைக் காட்டிலும் இதுபோலக் காதலை எதிர்க்கும் பெற்றோருக்கு உங்கள் அறிவுரை தரும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பெற்றோரின் விருப்பத்துக்கு மதிப்பளிப்பதற்கும், தான் தனித்துவம் வாய்ந்த ஒரு மனிதன் என்னும் உண்மைக்கும் இடையில் ஒரு நடுநிலைமை வகிப்பது மிகவும் முக்கியம். பெற்றோரின் அதிகாரத்துக்கு ஒரு எல்லையை நிர்ணயிப்பது அவசியம்.

பெற்றோரின் விருப்பத்தையும் அவர்களின் உணர்வுகளையும் சற்றும் மதிக்காமல் தன் விருப்பப்படி நடந்துகொள்வது எந்த அளவுக்குச் சரியில்லையோ, அந்த அளவுக்கு, தன் விருப்பத்துக்கு முக்கியத்துவம் ஏதும் அளிக்காமல் பெற்றோரின் அதிகாரத்துக்குக் கண்மூடித்தனமாக இலக்காகி அதற்கு அடிமையாக இருப்பதும் சரியில்லைதான்.

பெற்றோரும் தனிமனிதர்கள்தான். அவர்களின் அதிகாரம் சமூகம் அவர்களுக்கு அளித்துள்ள அதிகாரம். அதை அவர்கள் எந்த அளவுக்குச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சாதி, உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்று அஞ்சுவது போன்ற காரணங்களுக்காக அவர்கள் தம்முடைய பிள்ளைகளின் நியாயமான விருப்பத்துக்குத் தடையாகச் செயல்படுவார்களேயானால் அவர்கள் தமக்குச் சமூகம் அளித்துள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்து கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அவர்களுக்குத் தங்கள் அதிகாரத்தின் வரம்புகள் புரிய வேண்டியது அவசியம். சிறியவர்கள் பெரியவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதே நேரம் பெரியவர்களும் சிறியவர்களுக்கு மதிப்பளிப்பதும் முக்கியம்.

வளர்ந்த பிள்ளைகள் இதுபோன்ற விஷயங்கள் குறித்துச் சிந்திக்கக் கற்க வேண்டும். சுயமாக முடிவெடுக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களையும் தங்கள் தனித்துவத்தையும் மதிக்கிறார்கள் என்று கொள்ள முடியும்.

நான் சேலம் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறேன். பல்கலைக் கழகம் என்பதால் போட்டிகளும், விளையாட்டுகளும் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கும். அவற்றில் என்னுடன் பயிலும் சக மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.அவர்களைப்போல் நானும் கலந்து கொள்ள ஆசைப்படுவேன். ஆனால் எனக்கு மிகவும் பயம்.

ஏனெனில் இதற்கு முன்னால் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது எந்தப் போட்டியிலும் கலந்துகொண்டது கிடையாது. இப்போது நான் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டால் கை, கால் நடுங்குகிறது, வாய் குளறுகிறது, நெஞ்சம் பதைபதைக்கிறது, மனப்பாடம் செய்தது மறக்கிறது. நானும் என் நண்பர்களைப் போல எல்லாப்போட்டிகளிலும், விளையாட்டுகளிலும் பயம் இல்லாமல் கலந்து கொள்ள ஒரு வழி சொல்லுங்கள்.

நீங்கள் உங்களை மற்றவர்களின் கண்கள் வழியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறதா? அப்படிப் பார்த்து, ‘நீங்கள் சரியில்லை,’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைக் குற்றம் குறைகள் உள்ளவராகப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இதன் விளைவுதான் உங்கள் பயம் நடுக்கம் எல்லாம். போட்டிகளில் கலந்துகொள்ளும்போதுகூட மற்றவர்களின் அங்கீகாரம்தான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. உங்களை, உங்கள் சுயத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக நீங்கள் நினைக்கவில்லை. உங்கள் உண்மையான சுயத்துடன் உங்களுக்கு நேரடி உறவே இல்லை என்றுகூடச் சொல்லலாம்.

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களின் விஷயம். உங்களுக்குத் தொடர்பில்லாதது. அது அவர்கள் மனத்தில் இருக்கும் பிம்பம். அதுபற்றி நீங்கள் சிறிதும் கவலைப் படத் தேவையில்லை; கவனம் கொள்ளத் தேவையில்லை.

’எனக்கு நான் இருக்கிறேன்,’ என்று தலைநிமிர்ந்து நில்லுங்கள். உங்களுக்கு நீங்களே முழு அங்கீகாரம் அளித்துக்கொள்ளுங்கள். ‘நான் . . . . . . . (உங்கள் பெயரை எழுதுங்கள்). நான் முழுமையானவன்,’ என்று தினமும் 50 முறை எழுதுங்கள். 100 முறையாவது மனத்திற்குள் சொல்லுங்கள்.

போட்டிகளில் கலந்து கொள்ளும்போது உங்கள் திறமையை, உங்கள் அறிவை நீங்கள் காட்டுங்கள். மனத்திற்குள் மற்றவர்களுடன் போட்டி போட வேண்டாம். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மட்டும்தான் வாழமுடியும். மற்ற எல்லோரும் இரண்டாம் பட்சம்தான். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.

உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்