பறை ஓசை கேட்டு அரங்கமே திரும்பிப் பார்த்தது. உடல் மெல்லச் சிலிர்க்கத் தொடங்கியது. ‘ஆதித் தமிழன் அடித்த பறை அடிமை விலங்கு ஒடித்த பறை...’ எனப் பறையின் வரலாறு சொல்லிக்கொண்டே மேடை ஏறியது அந்தக் குழு.
அந்த இசை நாடி, நரம்பு வழியே மூளைக்குப் புது மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது. பறையோசையும் அதனோடு இணைந்த நடனமும் அரங்கில் இருந்தவர்களை இருக்கையை விட்டு எழுந்து ஆடச்செய்தது.
கண்டாங்கி சேலையும், கால் சலங்கையும் கட்டிக்கொண்டு அரங்கத்தை அதிர வைத்தனர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘முற்றம் கலைக்குழு’ மாணவர்கள். நாட்டுப்புறக் கலை மூலமாகச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த இளம் பட்டாளம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள்.
கதை சொல்லும் பறை
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை மாணவர்களுக்கான ‘கரிசல்’ விழா கலைப் போட்டிகள் மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. முதல் நாள் இரவு நாட்டுப்புற நடனங்கள் பிரிவில் பங்கேற்ற முற்றம் கலைக் குழுவினரின் பறையாட்டத்தால் அரங்கம் அதிர்ந்தது.
நம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட உடன் ‘நீங்க எத பத்தி கேக்குறதுனாலும் முதல எங்க தலைவர்ட்ட ஆரம்பிங்க’ என அனைவரும் கைகாட்டிய நபர் பிரேம்குமார் மகிழன்.
முற்றம் கலைக் குழுவைக் கடந்த 2008-ல் ஆரம்பித்துள்ளார்கள். இதில் ஊடகத் துறையில இருக்கிற அனைவரும் உறுப்பினர்கள். இந்தக் குழவில் இருப்பவர்களுக்குப் பறையாட்டம் மட்டுமல்லாது ஒயிலாட்டம், சாட்டைக் குச்சி, லெசிம், கும்மி, கரகாட்டம் போன்ற கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
“அழிந்து வரக்கூடிய நம்முடைய பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுத்து அதன் மூலமாகச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் எங்க குழுவோட நோக்கம்” எனக் கூறும் பிரேம்குமார் அத்துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர். அது மட்டுமல்லாது, நாட்டுப்புறக் கலைகளில் 14 வருடங்கள் அனுபவம் மிக்க இவர் இக்குழுவின் பயிற்சியாளராகவும் உள்ளார்.
பதினைந்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்கும் ‘கரிசல்’ திருவிழாவில் நாட்டுப்புற நடனப் பிரிவில் இவர்களின் பறையாட்டம் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து பரிசு வென்று வருகிறது.
புதிய தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!
பறையாட்டம் மட்டுமின்றி அனைத்து நிகழ்த்து கலைகள் மீதும் ஆர்வம் கொண்டிருக்கிறார் அர்ச்சனா. “ஆர்வங்கிறது ஏதோ பறையக் கையில பிடிக்கும்போது மட்டும் இருந்தா பத்தாது. சும்மா பஸ்ல போறப்ப வர்றப்ப கூட ஏதாவது ஒண்ணக் கையில வச்சுக்கிட்டு தாளம் போட்டுக்கிட்டே இருக்கனும்.
அப்படிப்பட்ட ஆர்வம் இருந்தாதான் பறையாட்டத்த சுலபமாவும் சீக்கிரமாவும் கத்துக்க முடியும். ‘முற்றம் கலைக் குழு’ என் ஆர்வத்துக்குச் சரியான களமாக அமைந்தது” என, நாட்டுப்புறக் கலைகள் மீதான தன் காதலை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இரண்டாம் ஆண்டு மாணவி அர்ச்சனா.
இன்றைய இளைஞர்களிடம் ஆர்வத்துக்குப் பஞ்சமே இல்லை. ஆனால் தமிழரின் பாரம்பரியக் கலையின் தனித்துவம் அவர்களைச் சென்றடையவில்லை. “நாட்டுப்புறக் கலைகள் சமூக விழிப்புணர்வுக்கான கருவி என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் கலை வளரும்” என உறுதியாகப் பேசுகிறார் அர்ச்சனா.
அர்ச்சனாவைப் பின்தொடர்ந்து பேசிய கார்த்திக், “நாட்டுப்புறக் கலைகளை ஒரு மாற்று ஊடகமாகவே நாங்க பார்க்கிறோம். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் பாரம்பரியக் கலைகளைக் காப்பது குறித்தும் போதுமான புரிதல் எங்களிடம் இருக்கிறது. இதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது” என்று பொறுப்பாகப் பதில் அளித்தார்.
மாற்றத்துக்கான இசை!
அரியலூர் அருகே உள்ள மருதூர் என்னும் ஊரில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் மதுப் பழக்கத்துக்கு ஆளாவதை அறிந்து இந்தக் குழு கடந்த வருடம் மருதூருக்குச் சென்றது. அங்கு மதுவுக்கு எதிரான வீதி நாடகத்தை அரங்கேற்றியது.
அதேபோல் இந்த ஆண்டும் சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று ஊடகத்தை மக்கள் எவ்வாறு புரிந்துகொள்வது எனும் கருத்தை மையமாகக் கொண்டு வீதி நாடகம் நடத்தியது.
தமிழரின் பாரம்பரியம் பறை
சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில்தான் பறையாட்டத்தை முதன்முறையாக நேரில் பார்த்துள்ளார் முதலாமாண்டு மாணவி அஸ்வினி. அந்தப் பறை இசை அவரை மிகவும் ஈர்த்துள்ளது. அதை வாசிக்கவும் ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த ஆசை இப்போது நிறைவேறிவிட்டது.
இந்தத் துறையில் அவர் சேருவதற்கு முற்றம் கலைக் குழுவும் ஒரு முக்கியக் காரணம். “தமிழ் தமிழ்னு மூச்சுக்கு முன்னூறு முறை பேசுற பலரும் தமிழரின் பாரம்பரியக் கலையான பறையாட்டத்தை வளர்ப்பதில் எந்த முயற்சி எடுக்கவில்லை” எனத் தன் ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டார் அஸ்வினி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago