வாழ்க்கையின் ஓட்டமும் உறவின் இயக்கமும் நம் மனத்தின் கட்டுகளுக்குள் அடங்காதவை. எந்தக் கணத்தில் அது எந்தத் திசையில் நகரும் என்று முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியாது. வாழ்க்கையும் உறவும் ஆழ்மன சக்திகளின் வெளிப்பாடுகள். ஆழ்மனம் நம் மேல்மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. ஆகவே வாழ்க்கை ஓட்டமும் உறவின் இயக்கமும்கூட நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் மேல்மனம் சார்ந்தவை. அதனால் மேல்மனத்தின் எல்லைகளுக்குள் வாழ்க்கையும் உறவுகளும் அடங்குவதில்லை. நம் மேல்மனத்தைத்தான் ‘நான்’ என்று நாம் நினைத்துக்கொள்கிறோம். இந்த நிலை இருக்கும்வரை வாழ்க்கையும் உறவுகளும் சிக்கல் நிரம்பியிருப்பது தவிர்க்க முடியாதது. ஆழ்மனத்தைப் பற்றிய பயங்களிலிருந்து விடுபட்டு நம் ஆழ்மனமும் நாம்தான் என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையும் உறவுகளும் முழுமை அடைய முடியும். அவற்றின் இலக்கணங்களும் நமக்குப் புரியவரும்.
பொறியியல் பட்டம் பெற்ற நான் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறேன். என் நெருங்கிய உறவினரின் மகளைச் சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். வருடா வருடம் ஊர்த் திருவிழாவில் பார்த்திருக்கிறேன் ஆனால் பேசியது இல்லை. அவள் தற்போது என்ன செய்கிறாள் என்ற விவரத்தை அறிய உறவினர் ஒருவரிடம் விசாரித்தேன். உடனே தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாக அவன் கூறினான். அந்தப் பெண்ணைப் பற்றி இனி நான் எதையுமே விசாரிக்கக் கூடாது என்றான். அது மட்டுமல்லாமல், தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகவும் தெரு முழுவதும் கூறியுள்ளான். இப்போது என்ன செய்வதென்று புரியாமல் நான் இருக்கிறேன். அந்தப் பெண்ணிடம் சென்று என் விருப்பத்தைத் தெரிவிக்கலாமா? இல்லை விட்டுவிடலாமா? ஒரு பெண்ணால் எனக்கும் அவனுக்கும் இடையே மனக்கசப்பு வந்துவிடக் கூடாது என்று எண்ணுகிறேன். நான் மிகுந்த மனக் குழப்பத்தில் உள்ளேன்.
தொடக்கத்திலிருந்து இதுவரை எல்லாமே உங்களுக்குள்ளே மட்டும்தான் நடந்துவந்திருக்கிறது. சிறு வயதிலிருந்தே அவளைப் பார்த்துவந்திருக்கிறீர்கள். ஆனால் பேசியது இல்லை. கடைசியில்கூட அவளைப் பற்றி வேறு யாரிடமோ விசாரித்திருக்கிறீர்கள். அவர் உங்களை இன்னும் குழப்பிவிட்டிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதும் உங்களுக்குத் தெரியாது. அவளைக் காதலிப்பதாகத் தெரு முழுவதும் அவர் சொல்லியிருப்பதுகூட உண்மைதானா என்று தெரியாது. இதில் அந்தப் பெண் என்ன நினைக்கிறாள் என்பது பற்றிக்கூட அந்த உறவினர் சொல்வதுதான் உங்களுக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு முற்றிலும் தெரியாது. இதுதான் நிலைமை.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தப் பெண் விஷயமாக அந்த உறவினருடன் மனக்கசப்பு வந்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாடு வேறு வைத்திருக்கிறீர்கள். அதுவும் உங்கள் மனத்தில்தான்.
இப்படி உங்கள் வாழ்க்கையை நீங்கள் உங்கள் மனத்தில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கொஞ்ச நாட்களுக்கு எந்த முடிவும் எடுக்காமல் இருங்கள். இப்போது நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அது மேலும் குழப்பத்துக்குள்தான் உங்களை இட்டுச் செல்லும். முதலில் உங்கள் மனத்தில் உங்களைப் பற்றியும் வாழ்க்கை பற்றியும் ஓரளவுக்காவது தெளிவு வரட்டும். அதன் பிறகு ஆழமாகச் சிந்தித்து முடிவெடுங்கள்.
நான் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் துறையில் வேலை பார்க்கிறேன். என் பெற்றோர் எனக்குப் பார்த்து, நிச்சயித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் நிச்சயமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. எனவே கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கிறோம் அவ்வப்போது சந்திக்கவும் செய்வோம். இப்படியாக எங்கள் வாழ்க்கை, விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். ஆனால் ஒரு கட்டத்தில் நாங்கள் நெருக்கமானபோதுதான் அவளுக்கு உறவுகொள்ள விருப்பமில்லை என்பது எனக்குப் புரியவந்தது. அந்த நாளுக்குப் பிறகு என்னைத் தவிர்க்க ஆரம்பித்தாள். அதன் பின்தான் அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதே எனக்குப் புரியவந்தது. பெற்றோருக்குக் கட்டுப்பட்டுத்தான் அவள் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்திருக்கிறாள். ஆனால் நான் அவளை ஆழமாகக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். நீண்ட நாட்கள் கழித்து இப்போது மீண்டும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறாள். ஆனால் இப்போதும் அவளுடைய பெற்றோர்தான் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைச் சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன். நான் அவளுடைய பண்பை நேசிக்கிறேன். அவளுடைய அத்தனை குணங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளை இழக்க நான் தயாராக இல்லை. நான் என்ன செய்ய?
‘நான் அவளுடைய பண்பை நேசிக்கிறேன். அவளுடைய அத்தனை குணங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளை இழக்க நான் தயாராக இல்லை,’ என்கிறீர்கள். உங்கள் இதயம் அவள் வேண்டும் என்று சொல்கிறது. உங்கள் மனம், அவளுக்கு உறவுகொள்ள விருப்பமில்லை என்னும் உண்மையை எதிர்கொண்டு நிற்கிறது. அவள் திருமணமே வேண்டாம் என்றுதான் நினைக்கிறாள். பெற்றோரின் கட்டாயத்தினால்தான் திருமணத்துக்கே சம்மதித்திருக்கிறாள். இந்த நிலையில் நீங்கள் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் உங்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கும்? அவளுடைய பண்புகளுக்காகவும் குணங்களுக்காகவும் அவளை ஏற்றுக்கொண்டு வாழ நீங்கள் தயாரா? எவ்வளவு நாட்கள் இந்த மாதிரி வாழ முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
உங்கள் உணர்ச்சிகளும் சிந்தனைப் போக்கும் எனக்குப் புரிகிறது. திருமணம் வாழ்நாள் முழுவதும் இருக்கப் போகும் உறவு. அதில் உணர்ச்சிபூர்வமான முடிவுகளுக்கு இடம் உண்டா? அவளை இழக்க நீங்கள் தயாராக இல்லை. ஆனால் இதில் அவளுடைய விருப்பம் என்ன? அதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? உறவு என்பது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
இவ்வளவு விஷயங்கள் பற்றியும் நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் உணர்ச்சிகளின் அடிப்படையில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கவனத்துடன் செயல்படுங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago