பருவ வயது தொடங்குவது பள்ளியில் என்றாலும் அது பூத்துக் குலுங்குவது கல்லூரியில்தான். கல்லூரிக் காலத்தில் எல்லாமே ஜாலிதான். எதற்கெடுத்தாலும் சிரிப்பு. எதைப் பற்றியும் கவலையின்றி, துள்ளித் திரிந்து இளமையைப் போதும் போதும் எனக் கொண்டாடும் பருவம் அது. படிக்க வேண்டும் என்ற படபடப்பு ஒரு பக்கம் இருந்தாலும் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வமே அதை மீறி வெளிப்படும்.
விருப்பத்துக்கு ஆடி ஓடி அனுபவித்த கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாகச் சென்றுவிடுவார்கள். எங்கேயாவது எப்போதாவது அவர்கள் சந்தித்துக்கொள்ளும்போதும் கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த சுவையான சம்பவங்களை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி சிரிந்து மகிழ்ந்து அந்த நாட்களை அசைபோடுவார்கள். அதுவும் கல்லூரி முடித்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதே கல்லூரியில் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் எப்படியிருக்கும்? சும்மா கல்லூரி வளாகத்தையே கலங்கடித்துவிட மாட்டார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 1990-94 ஆண்டுகளில் படித்து முடித்த நண்பர்கள் கடந்த 27.12.2014 சனிக்கிழமை அன்று கல்லூரியில் மீண்டும் சந்தித்துக்கொண்டார்கள். நாற்பது வயதை ஒட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குடும்பத்துடன் குழுமியிருந்த காட்சி கண்ணுக்குக் குளுமையாக இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அனைவரும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்துள்ளனர்.
அதே போல் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்னையில் அனைவரும் சந்திப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. கல்லூரி முடித்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை அனைவரும் கல்லூரிக்குச் சென்றுவர விரும்பி, கல்லூரி நிர்வாகத்தை அணுகியுள்ளனர். கல்லூரி நிர்வாகமும் விருப்பத்துடன் தங்களது ஒத்துழைப்பை நல்க, வெற்றிகரமாக அங்கு அனைவரும் கூடிவிட்டனர்.
மாப்ள… என்னும் குரல் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து காற்றில் மிதந்துகொண்டே இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் பார்க்கும் நண்பர்களைக் கட்டிப் பிடித்து தங்கள் குடும்பத்து உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தற்போது பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்தபோதும் அன்று ஒரு நாள் அனைவரும் பழைய மாணவராகவே அடித்த லூட்டியை எப்போது மறக்க முடியாது என்றார் கப்பல் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிவரும் சின்னையா வல்டாரிஸ்.
உலகத்தின் பல நாடுகளுக்குச் செல்லும்போதும் கிடைக்காத சந்தோஷம் இந்தக் கல்லூரி வளாகத்தில் கிடைத்தது என்று கூறும் அவர், எப்போதுமே நண்பர்களைச் சந்திப்பதால் தனக்குப் புத்துணர்வு கிடைக்கிறது என்றார். தாங்கள் படித்தபோது பெண்களே இல்லாத நிலையைச் சொல்லிச் சொல்லிப் புலம்பினர் முன்னாள் மாணவர்கள்.
அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றும் பொறியாளரான ரமேஷ், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ரியாஸ், செந்தில் மணி போன்ற தன் நண்பர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார். எப்போது காலேஜ் கெட்டுகதர் நடந்தாலும் தான் வந்துவிடுவதாகவும் அந்த நாளில் மட்டும் மீண்டும் ஒருபோதும் நுழைய முடியாத கல்லூரி வாழ்வில் தான் மீண்டும் நுழைந்து திரும்பும் நிறைவு கிடைப்பதாகவும் அவர் கூறும்போது முகத்தில் அந்தப் பரவசம் மின்னி மறைந்தது.
கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்களை அழைத்து வந்து இந்த மாணவர்கள் கவுரவித்ததில் ஆசிரியர்கள் நெகிழ்ந்துவிட்டனர். ஆசிரியர் மாணவர் உறவு இணக்கமானதாக இருந்த நிலை இப்போது இல்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டனர் ஆசிரியர்கள். கல்லூரி முழுக்க கால் வலிக்க குடும்பத்தினருடன் அலைந்து திரிந்தனர் அந்த நண்பர்கள்.
நண்பர்களின் வழுக்கையும், நரையும், தொப்பையும் கேலிக்குரிய விஷயமாக மாறிப்போயிருந்தன. விடுதியில் தங்கியிருந்த நாட்களில் போட்ட கொட்டத்தைப் பேசியபடியே கல்லூரி வளாகத்தில் அலைந்துதிரிந்தபோது இந்த நாள் மட்டும் முடியாமல் நீண்டு கொண்டே செல்லக் கூடாதா என்று இருந்தது என்கிறார் சென்னையில் மென்பொருள் பொறியாளராக இருக்கும் ஜமேஷ்.
தாங்கள் படித்தபோது பனை மரக்காடாக இருந்த கல்லூரி தற்போது தென்னஞ்சோலையாக மாறியுள்ளதைப் பார்த்துப் பார்த்து வியந்துபோனார்கள். கல்லூரியில் நுழையும்போது பிரம்மாண்டமாக அனைவரையும் வரவேற்கும் ஆடிட்டோரியத்தின் பெருமையைப் பேசிச் சந்தோஷமடைந்த நண்பர்களை அவர்கள் தங்கியிருந்த கல்லூரி விடுதியின் நிலையும் வகுப்பறையின் நிலையும் சற்றுக் கலவரப்படுத்தியுள்ளன. ஆடிட்டோரியம் போல விடுதியும் கல்லூரி வகுப்பறையும் மேம்பட்டால் நன்றாக இருக்கும் என்று பேசியபடி கலைந்துசென்றனர். அவர்கள் இட்டுச் சென்ற சந்தோஷம் இன்னும் சில நாள் கல்லூரி வளாகத்தையே சுற்றிவரும் போல் தோன்றியது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago