நம் அனைவரின் மனங்களிலும் நம்மைப் பற்றிய ஒரு சித்திரம் இருக்கிறது. அந்தச் சித்திரம் பெருமளவுக்கு நாம் வாழும் சமூகத்தால் உருவாக்கப்பட்டது. உலகத்தைப் பொறுத்தவரை அந்தச் சித்திரம்தான் நாம். அது வெறும் சித்திரம்தான் என்பதுகூட யாருடைய நினைவிலும் இல்லை என்பதுதான் உண்மை. இந்தச் சித்திரத்தையே ‘நான்’ என்று நினைத்துக்கொள்வதால் நம் உண்மையான சுயம் பற்றிய கேள்விகூட யாருக்கும் எழுவதில்லை.
உண்மையில் யார் அதை நமக்குள் உருவாக்குகிறார்கள்? சிறு வயதில் நமக்கு நிகழும் அனுபவங்கள்தான் அந்தச் சித்திரத்தை உருவாக்குகின்றன. அதில் பெரும் பங்கு நம் பெற்றோருடையதுதான். நம் பெற்றோர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? அவர்கள் வேண்டுமென்று இதைச் செய்வதில்லை.
சமூக நியதிகளின்படி இதைத்தான் தாம் செய்ய வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். அதன்படி பார்த்தால் நம் பெற்றோர்களின் வழியாகச் சமூகம்தான் இதைச் செய்கிறது. அவர்களையும் அவர்களுடைய பெற்றோர்கள் இவ்வாறுதான் வளர்த்தார்கள். அவர்களும் சமூகத்தின் கைப்பாவைகள்தான்.
இந்த மனச் சித்திரத்தின்படி நாம் ஒவ்வொருவரும் நம்மை ஒவ்வொரு கணமும் மற்றவர்களுடனும் சமூகம் ஸ்தாபித்துள்ள மாதிரி மனிதனுடனும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறோம். நம்மைத் தொடர்ந்து உள்ளுக்குள்ளே குறைவாகவே, இழிவாகவே மதிப்பிட்டுக்கொள்கிறோம்.
‘நான் சரியில்லை’ என்ற எண்ணம் நம் எல்லோரின் மனத்திலும் இருக்கிறது. ஆனால் இந்த எண்ணம் நமக்குப் பிடிப்பதில்லை. அதனால் இதை ஈடுகட்டும் வண்ணமாக நம்மைப் பற்றி வெளியில் மிகவும் பெருமையாகப் பேசிக்கொள்கிறோம். அதை நிரூபிக்கும் நோக்கத்துடன் எதையாவது செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் தாழ்வு மனப்பான்மை நம்மை உள்ளே வாட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த மாதிரியான வாழ்க்கை நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. இதுதான் நம் ஆழ்மனத்தில் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை. இதன் காரணத்தால்தான் உண்மையான, நிலையான சந்தோஷத்துடன் வாழும் யாரையும் நம்மால் பார்க்க முடிவதில்லை. நாம் வேறு, நம் மனச் சித்திரம் வேறு என்னும் உண்மை நமக்குத் தெரியவரும்போதுதான் நம்மால் இந்த நிலையிலிருந்து விடுபட முடியும். உண்மை சார்ந்த மனச் சித்திரம்தான் நமக்கு சந்தோஷத்தைத் தர முடியும்.
எனக்கு வயது 21. பார்ப்பதற்குச் கறுப்பாகவும், சுமாராகவும் இருப்பேன். என்னுடன் முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை அவள் படித்தாள். பள்ளி நாட்களில் அவள் என் வகுப்புத் தோழி அவ்வளவுதான். ஆனால் கல்லூரி சென்ற பிறகு பல நாட்கள் கழித்து ஒரு நாள் ஊர்த் திருவிழாவில் அவளைப் பார்த்தபோது எனக்குள் அவள் மீது காதல் பூத்தது.
கல்லூரிப் படிப்பு முடித்த பின் சென்னையில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால் என் ஊரை விட்டு வந்ததாலோ என்னவோ தெரியவில்லை அவள் நினைப்பு என்னை ரொம்பவும் வாட்டியது. ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்திருப்பேன். ஆனால் அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வேலையை விட்டுவிட்டுச் சொந்த ஊர் திரும்பினேன்.
அவள் தேவதையைப் போல இருப்பாள். அவள் வீடு எங்கள் பள்ளியின் அருகில்தான் உள்ளது. ஒரு நாள் அவளைச் சந்தித்து அவளுடைய கைப்பேசி எண்ணை வாங்கி தினமும் எஸ்எம்எஸ் அனுப்பினேன். அவளும் பதிலுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவாள். ஒரு நாள் அவளிடமிருந்து எஸ்எம்எஸ் வரவில்லை என்றால் துடித்துப்போவேன். அவள் பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும்போது அதே பேருந்தில் நானும் போக ஆரம்பித்தேன்.
அவளுக்குத் தெரியாமல் அவளைப் பார்ப்பது, அவள் பார்த்துவிட்டால் வேலை விஷயமாக வந்தேன் எனப் பொய் சொல்லுவது இப்படி நாட்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நாள் அவளுடைய மொபைல் போன் பழுதாகிவிட்டதால் எங்களது எஸ்எம்எஸ் பரிமாற்றம் நின்றுபோனது. அன்று முதல் நான் அவளின் நினைப்பாகவே இருக்கிறேன். கையில் கிடைத்ததை உடைப்பது, கையில் கீறிக்கொள்வது, சுவரில் முட்டிக்கொள்வது இப்படி என்னை நானே துன்புறத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். இது என் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. நான் முழுப் பைத்தியமாக மாறிவிடுவேனோ என்னும் அச்சம் மேலோங்கியுள்ளது. இது குறித்து நீங்கள்தான் தகுந்த பதிலைக் கூற வேண்டும்.
நீங்கள் உங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும்போதே, ‘நான் பார்ப்பதற்குக் கறுப்பாகவும், சுமாராகவும் இருப்பேன்,’ என்கிறீர்கள். உங்களைப் பற்றி மிகவும் தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு இருப்பதாகத்தான் தெரிகிறது. உங்கள் பார்வை, உங்கள் வாழ்க்கைக் கண்ணோட்டம் எல்லாமே இதிலிருந்துதான் தொடங்குகின்றன. உங்கள் பிரச்சினையும் இதில்தான் இருக்கிறது. சிறு வயதிலிருந்தே தெரிந்த அந்தப் பெண்ணைப் பருவ காலத்தில் பார்த்தபோது அவள் மீது உங்களுக்கு ஆசை ஏற்பட்டது இயற்கையானதுதான்.
அவளிடம் உங்கள் ஆசையைச் சொல்வதை எது தடுத்தது? அவளுக்காக உங்கள் வேலையை விட்டு வரும் அளவுக்கு ஆசை இருப்பது வெறும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்காகவா? பஸ்ஸில் தூரத்திலிருந்து பார்ப்பதற்காகவா? அவளுடன் எஸ்எம்எஸ் பரிமாற்றம் இல்லை என்னும் ஒரே காரணத்திற்காக உங்களை நீங்களே துன்புறுத்திக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
உங்கள் தாழ்வு மனப்பான்மை காரணமாக உங்கள் காதலை அவளிடம் நேரடியாக வெளிப்படுத்தாமல் ஏன் உங்களையே இப்படித் துன்புறுத்திக்கொள்கிறீர்கள்? கறுப்பாக இருப்பது அழகல்ல என்று சொல்வது யார்? உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களை நீங்களே துன்புறுத்திக்கொள்வதை உடனடியாக நிறுத்துங்கள். நேராக அவளிடம் சென்று உங்கள் காதலைச் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவள் விஷயம். ஆனால் சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. போய்ச் சொல்லுங்கள்.
அவள் உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மேற்கொண்டு உங்கள் வாழ்க்கையின் பாதையில் செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையின் அதிமுக்கியமான நபர் நீங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குப் பிறகுதான் மற்ற எல்லோரும் என்னும் உண்மையைத் தெரிந்துகொண்டு வாழுங்கள். உங்கள் சந்தோஷம் உங்களிடம்தான் இருக்கிறது. அவளிடம் இல்லை.
நான் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில்தான் இருக்கிறேன். என் பெற்றோருக்கு ஜாதகத்தில் அதீத நம்பிக்கை உண்டு. அதுதான் என்னுடைய சிக்கலும்கூட. நான் பிறந்து முதல் இன்றுவரை ஜாதகப்படிதான் எல்லாமே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் என்னுடைய தனிப்பட்ட ஆசை, கனவுகள் அத்தனையும் நான் எனக்குளேயே பூட்டி வைத்திருக்கிறேன். ஜோதிடம் நம்பிக்கை தொடர்பாக பல முறை என் அப்பாவிடம் சண்டை போட்டிருக்கிறேன். இதனால் அவரை விட்டு விலகவும் ஆரம்பித்துவிட்டேன்.
என் பெற்றோரைவிடவும் என் உறவினர்களுடன் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் ஜாதகம் பார்த்துப் பார்த்தே என் அப்பா உறவினர்களிடமும் சண்டை போட்டு பிரிந்துவிட்டார். இப்பொழுது எங்களுக்கு சொந்தக்காரர்களும் இல்லை, நாங்களும் ஒருவரோடு ஒருவர் சகஜமாகப் பேசிக்கொள்வதில்லை. நான் மனித உறவுகள் மீது நம்பிக்கையோடு இருப்பவள். ஜாதகம் என்ற சொல்லைக் கேட்டாலே வெறுப்பின் உச்சத்துக்குப் போய்விடுகிறேன். ஆனால் சில சமயங்களில் ஜாதகத்தினால்தான் நம் குடும்பம் பிரிந்திருக்கிறதா, அதில் சொல்லப்படுவதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. இதில் எது சரி?
ஜாதகம் உண்மையா பொய்யா என்பது விஷயமல்ல. ஏன் உங்கள் பெற்றோரைப் போல் சிலர் ஜாதகத்தை இந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்பதுதான் கேள்வி. வாழ்க்கை பற்றிச் சிறிதும் தெளிவில்லாத காரணத்தால் மனத்தில் ஏற்படும் அச்சம்தான் அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. அச்சம் பார்வையைச் சிதறடிக்கும். மனத்தைச் சிதைக்கும். உண்மையை விடுத்துப் பொய்யை அணைத்துக்கொள்ளும்.
உங்கள் உறவினர்களோடு சண்டை போட்டு அனைவரிடமிருந்தும் பிரிந்து போனதற்கும், உங்கள் குடும்பத்துக்குள்ளேயே சந்தோஷம் இல்லாமல் போனதற்கும் காரணம் அச்சம் மட்டுமே. ஒரு புறம் ஜாதகத்தின் மேல் உங்களுக்கு வெறுப்பு இருக்கிறது. ஆனால் சிறு வயதிலிருந்தே இந்தச் சூழ்நிலையில் நீங்கள் வளர்ந்துவந்த காரணத்தால் ஒருவேளை ஜாதகம் என்பது உண்மையாக இருக்கக்கூடுமோ என்ற அச்சம் உங்களையும் பீடித்திருக்கிறது. இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அச்சத்தை விடுத்து வாழ்க்கையை நேரடியாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதனுடன் நேரடி உறவு கொள்ளுங்கள். தெளிவு பிறக்கும்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago