“சாண பிடிக்கிற தம்மா... சாண..! கத்திரி, கத்தி, அரிவாமனைக்குச் சாண பிடிக்கிறதம்மா சாண..!” சென்னைப் பெருநகரின் ஆரவார இரைச்சல்களையும் மீறி குடியிருப்புப் பகுதிகளில் ஒலிக்கும் அந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர்கள் யார், இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என நினைத்துப் பார்த்திருக்கிறோமா? நம்முடைய கத்தி, அரிவாமனைகளைச் சாணை பிடிப்பதுடன் வீட்டுக்குத் திரும்பிவிடுவோம்.
இவர்களில் பெரும்பாலானோர் சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரிச்சந்திராபுரம் என்னும் கிராமத்தில்தான் வாழ்ந்துவருகிறார்கள். அரசு பதிவேடுகளில் அரிச்சந்திராபுரம் என்று குறிக்கப்பட்டிருந்தாலும் ‘முஹம்மதுபுரம்’என்று அவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். இங்கிருக்கும் சுமார் 300 குடும்பங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் சாணை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். இதற்கு முன்னர் இவர்களின் மூதாதையர் திப்புசுல்தான் படையில் ஆயுதத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தாகச் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.
சிறந்த உழைப்பாளிகள்
அதிகாலை 4 மணி அளவிலேயே விழித்துக்கொள்கிறது இந்தக் கிராமம். அங்கிருந்து மின்சார விளக்குகள் இல்லாத சாலையில் 2 கிலோ மீட்டர் நடந்து திருவாலங்காடு ரயில் நிலையத்தை அடைய வேண்டும். சிலர் கிட்டதட்ட 20 கிலோ எடையுள்ள சாணை கால்மிதி எந்திரங்களைத் தோளில் சுமந்தவாறு நடக்கிறார்கள். இன்னும் சிலர் சென்னையில் வாடிக்கையாளர்களின் வீடுகளிலேயே அந்த எந்திரங்களை வைத்துவிட்டு வந்துவிடுவதால் வெறும் கையுடன் நடந்து ரயில் பிடிக்க விரைகிறார்கள். ஒரு ரயிலில் சுமார் 50 பேர் என்று அதிகாலையில் 300 பேர் தினமும் இரை தேடும் பறவைகள் போல சென்னையை நோக்கிப் பயணிக்கிறார்கள்!
சுகமான சுமை
“கஷ்டமான வேலையானாலும் இதுதான் எனக்கு பிடித்த தொழில்” எனப் புன்னகையுடன் சொல்கிறார் 37 வயதான கபீர். 7-வது வரை படித்துள்ள கபீர் 20 ஆண்டுகளாகச் சாணைத் தொழில் செய்துவருகிறார். இரு குழந்தைகளுக்குத் தகப்பனான இவர் பெரம்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் தொழில் புரிந்து வருகிறார்.
“அதிகாலையிலேயே புறப்பட்டுவிடுவோம். திரும்பிவர இரவு 8 மணியாகும். நாள் முழுக்க 20 கிலோ எடையைத் தோளில் தூக்கிக் கொண்டு சுற்றினால் 300லிருந்து 400 ரூபாய்வரை சம்பாதிக்கலாம். இதில் போக்குவரத்து, சாப்பாடு, சாணை மிஷினுக்கு பஸ்ஸில் போடுற லக்கேஜ் சார்ஜ் போக ஓரளவு வருமானம் கிடைக்கும். முதலில் நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள்.
இப்போது வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் இப்போது கூலியும் முன்புபோல யாரும் தருவது கிடையாது. மிகக் குறைவான கூலியே கிடைக்கிறது” என்கிறார். கத்தி, கத்திரிக்கோல், அரிவாள் மனை என்று சாணை பிடிக்கும் இவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய்வரை கூலி கேட்கிறார்கள். “சிலர் அடிமாடு விலையாய் ஒரு ரூபாய்க்கு சாணை பிடிக்கச் சொல்கிறார்கள்” எனச் சிரித்தபடி சொல்கிறார் கபீர்.
கத்தியும் செய்வோம்!
அரிச்சந்திராபுரத்தில் சாணை பிடிக்கும் தொழிலைத் தவிர ஒரு சிலர் காய்கறி நறுக்கும் கத்திகளைக் குடிசைத் தொழிலாகச் செய்கிறார்கள். மரம் அறுக்கும் பட்டறைகளிலிருந்து தேய்ந்துபோன மரம் அறுக்கும் பட்டைகளை வாங்கிவந்து சமையலறை கத்திகளைத் தயாரிக்கிறார்கள்.
கத்தி தயாரிக்கும் தொழிலில் ஐந்தாண்டுகளாக ஈடுபட்டுவரும் அப்துல் ரசாக், “ஆரம்பத்திலே சாணைத் தொழில்தான் செய்துவந்தேன். சாணை மிஷினைத் தோளில் சுமந்து என்னால் சுத்தித் தொழில் பார்க்க முடியாத நிலையில் தற்போது இந்தத் தொழிலைச் செய்கிறேன். காய்கறி நறுக்கும் சமையலறைக் கத்திகள் 20 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போய் வெளியிலே லாபம் வச்சு விக்கிறாங்க.” என்கிறார் அவர்.
படங்கள்: இக்வான் அமீர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago