எந்தப் பெற்றோராலும் தம் பிள்ளைகளின் உணர்ச்சித் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாது. ஒரு குழந்தை தன் உள்ளத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தன் தாயைத்தான் எதிர்பார்க்கிறது. வளர்ச்சிப் பருவத்தில் சில தெளிவான கட்டங்கள் உண்டு. அது பற்றிய தெளிவில்லாத சில தாய்மார்கள் மிகவும் சீக்கிரமாகவே தன் குழந்தையைச் சமூகச் சட்டகத்துக்கு உட்படுத்தும் வேலையைத் தொடங்கிவிடுவதுண்டு. சில தாய்மார்கள் அளவுக்கதிகமான கண்டிப்புடன் நடந்துகொள்வதும் உண்டு.
தன் தாயுடன் கொள்ளும் உறவின் வழியாகத்தான் குழந்தை தான் இருப்பதையே தெரிந்துகொள்கிறது. தன் இருப்பின் பிரதிபலிப்பாகத்தான் தாயையே பார்க்கிறது குழந்தை. வளர்ச்சிப் பருவங்களின் அடுத்தடுத்த கட்டங்களில் குழந்தைக்குத் தாய் மட்டும் போதாது. அதன் தேவைகள் பல பரிமாணங்கள் கொண்டவை.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தன் அகத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தியாகாத குழந்தையின் மனம் வெளியுலகத்தில் யாரையோ தேடத் தொடங்கிவிடுகிறது. யாருடன் இருக்கும்போது நாம் நம்முடன் நெருக்கமாக உணர்கிறோமோ, அவர்களை மனம் சட்டென்று பிடித்துக்கொண்டுவிடுகிறது. அலைபாயும் நம் நெஞ்சில் அவர்கள் ஒரு நங்கூரம்போல் ஆகிவிடுகிறார்கள். நமக்கு அமைதியை அளிக்கிறார்கள். உள்ளத்தில் அன்பைப் பெருகச் செய்கிறார்கள். சந்தோஷத்தைத் தருகிறார்கள். அதாவது நாம் அவ்வாறு நம்பத் தொடங்கிவிடுகிறோம். அதன் பின், அவர்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை.
அதற்குப் பின்தான் பிரச்சினை தொடங்குகிறது. அந்த நபர் நம் மனத்தின் சமநிலைக்கு அவசியமாகப் போய்விடுவதால், அவர் நமக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற மனோபாவம் ஏற்பட்டுவிடுகிறது. அந்த நபரை நாம் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடுகிறோம். மற்ற யாரிடமாவது அவர் சிரித்துப் பேசினாலோ, நேரம் செலவழித்தாலோ நம்மால் அதைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
உள்ளே பயம் வருகிறது. வெளியே அது கோபமாய் வெளிப்படுகிறது. மனத்தில் முரண் ஏற்படுகிறது. உறவு சிக்கலாகிறது. நீண்ட காலமாக இருந்துவரும் உறவே முறிந்து போய்விடும் சாத்தியமும் இருக்கிறது. வாழ்க்கையின் ஓட்டத்தில் நாமும் கூடவே அக வளர்ச்சி அடைய வேண்டும். அப்போதுதான் இப்படி எந்த ஒரு கட்டத்திலும் சிக்கிக்கொண்டுவிடாமல் தப்பிக்க முடியும்.
நான் பிளஸ் 2 வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டை விட்டு நான் இதுவரை பிரிந்ததே கிடையாது. கிட்டதட்ட 5-ஆம் வகுப்பிலிருந்து நாங்கள் இணைந்தேதான் திரிந்திருக்கிறோம். 11-ஆம் வகுப்பில் குரூப் தேர்ந்தெடுக்கும்போதுகூட ஒரே குரூப்பை தேர்ந்தெடுத்தால்தான் சேர்ந்திருக்க முடியும் என்பதால் பையாலஜி, மாத்ஸ் தேர்ந்தெடுத்தோம்.
நான் அவளோடு மட்டும்தான் பேசுவேன், பழகுவேன். ஒரு நாள் அவள் பள்ளிக்கு வரவில்லை என்றால் அன்றைக்கு எனக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. ஆனால் அடுத்து இருவருக்கும் ஒரே கல்லூரியில் சீட் கிடைக்குமா எனத் தெரியவில்லை. அதை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. இதனாலேயே என்னால் படிப்பில்கூட கான்சன்ட்ரேட் பண்ண முடியவில்லை.
ஐந்தாம் வகுப்பிலிருந்தே இருவரும் ஒன்றாகப் பழகிவருகிறீர்கள். அப்போது ஏற்பட்ட நெருக்கம் ஏழு வருடங்களாக இன்னும் தொடர்ந்துவருகிறது. நல்லதுதான். ஆனால் உங்கள் உறவும் ஏன் உங்களுடன் சேர்ந்து வளரவில்லை? ஏன் அது இன்னும் அங்கேயே, தங்கிவிட்டது? ஏன் அதில் எந்த முதிர்ச்சியும் நிகழவில்லை? உங்கள் கேள்வியைப் படிக்கும்போது, வளர்ந்த பெண் கேட்கும் கேள்வியாகத் தெரியவில்லை. சற்று சிந்தியுங்கள். உறவின் ஓட்டமும் வாழ்க்கையின் ஓட்டமும் ஒன்றுதான். வாழ்க்கையை வாழவேண்டும். உறவை அனுபவிக்க வேண்டும். கூடவே அக வளர்ச்சி அடைய வேண்டும்.
இல்லாவிட்டால் பயமும் தவிப்பும்தான் மனத்தில் நிறையும். உங்கள் பயத்தின் காரணமாக வாழ்க்கையின் சகல அம்சங்களையும் கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள். இது உங்கள் மனத்தில் சிக்கலையும் குழப்பத்தையும் மன அழுத்தத்தையும்தான் விளைவிக்கும். மாறாக, வாழ்க்கையின் ஓட்டத்தை ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்றுக்கொண்டு நீங்களும் கூடவே சென்றால், உறவும் வாழ்க்கையும் ஒவ்வொரு கட்டத்திலும் புதிய பரிமாணங்களைத் திறந்துகாட்டிக்கொண்டே செல்லும். எந்த விதக் கட்டுப்பாடும் அவசியமில்லை. அன்பும் சந்தோஷமும் இயல்பாக நிறைந்திருக்கும்.
நான் கடந்த 10 வருடங்களாகத் திருமணத்திற்குப் பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் இண்டர்நெட்டில் சாட்டிங் செய்யாத அழகான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். மதம் வயது பிரச்சினை இல்லை. நான் ஒரு கம்யூனிஸ்ட். நல்ல வேலையில் உள்ளேன். நல்ல சம்பளம் வாங்குகிறேன். ஆனால் எனக்கேற்ற பெண் கிடைக்கவே இல்லை. என்னிடம் என்ன பிரச்சனை? எனக்கு ஒரு பதில் சொல்லுங்கள்.
நீங்கள் பெண் தேடிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது தவிர்த்துக்கொண்டிருக்கிறீர்களா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. என்ன மாதிரியான பெண் வேண்டாம் என்று உங்களுக்கு இருக்கும் தெளிவின் அளவுக்கு என்ன மாதிரியான பெண் வேண்டும் என்ற தெளிவு இருக்கிறதா என்று சிந்தியுங்கள். உங்களைப் பற்றியே உங்களுக்கு என்ன தெளிவு இருக்கிறது? நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்கிறீர்கள்.
அது உங்கள் நம்பிக்கை சார்ந்த விஷயம். அந்த நம்பிக்கை நீங்கள் அல்ல. நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாகப் பிறக்கவில்லை. உங்களைப் பற்றி இன்னும் தீவிரமாகச் சிந்தியுங்கள். இதுபற்றி நண்பர்களிடம் பேசுங்கள். தேவையென்றால் உளவியல் ஆலோசகரை அணுகுங்கள்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago