காதல் என்பது இன்று மிகவும் மலினப்பட்டுப் போயிருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது இயல்பாக ஏற்படும் கிளர்ச்சியைக் காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். காதலித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இன்று எல்லோரையும் பீடித்திருக்கிறது. அது ஒரு சமூகத் தகுதியாக ஆகிவிட்டிருக்கும் நிலைமைதான் இன்று இருக்கிறது.
காதல் என்பது உயிரின் துடிப்பு. ‘நான் இருக்கிறேன்’ என்பதைத் தெரிந்துகொள்ளும் விழிப்புணர்வுதான் காதல். அந்த விழிப்பு முதலில் ஒருவர் நமக்காகவே நம்மை அங்கீகரிக்கும்போதுதான் ஏற்படுகிறது. இதுதான் ‘உறவு’ என்பதன் அடிப்படை. ‘நான்’ இருந்தால்தான் உறவு இருக்க முடியும். இந்த ‘நான்’ என்பது திமிரோ கர்வமோ அல்ல. அது சுயத்தின் கம்பீரம்.
திரைப்படங்கள், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வரும் கதைகள், போன்ற பொழுதுபோக்குச் சாதனங்கள் சொல்லித்தரும் இயந்திரத்தனமான வாழ்க்கை முறையின்படி ’காதல்’ என்பதும் ‘உறவு’ என்பதும் மிகவும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
இயந்திர கதியில் வாழும் வாழ்க்கையில் அச்சம் பெருமளவுக்கு நம்மைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அச்சம் அன்பை அழிக்கிறது. நம் கண்களைக் கட்டிவைக்கிறது. அச்சத்தின் பிடியில் அகப்பட்டு, கண்ணிருந்தும் குருடர்களாக நாம் இருக்கிறோம். சுயத்தின் கம்பீரம்தான் நம்மை அச்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியும்.
நான் சமீபத்தில்தான் என் படிப்பை முடித்துவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். இதற்கு முன்னால் அவள் தன் மாமாவைக் காதலித்ததாகவும் ஆனால் அவரிடம் வெளிப்படுத்தவில்லை என்றும் சமீபத்தில் என்னிடம் கூறினாள். அதைத் தவிரவும் அவள் வீட்டில் குடியிருக்கும் ஒருவரைக் காதலித்து அவன் பெயரைத் தொடையில் எழுதி இருக்கிறாள். அவன் இவளிடம் கல்யாணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி மூன்று முறை உறவு கொண்டிருக்கிறான். இருவருக்குள்ளும் கடிதப் பரிமாற்றம் வேறு இருந்திருக்கிறது. இப்பொழுது என்னைக் காதலிக்கிறாள். “நான் உன்னிடம் உண்மையாக இருக்க வேண்டும் என மனதார நினைக்கிறேன்” எனச் சொல்கிறாள். நானும் அவளைக் காதலிக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ளலாமா? அது சரியான முடிவாக இருக்குமா என்பது எனக்கு மன உளைச்சலாகவே உள்ளது. இதற்கு தீர்வு என்ன?
‘நானும் அவளைக் காதலிக்கிறேன்’ என்கிறீர்கள். அப்படியென்றால் என்ன? அவள் செய்ததை எல்லாம் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமா? அது உண்மையில் உங்களால் முடிகிறதா? அந்தப் பெண் சொல்வது உங்களைப் பாதிக்கிறது. இதனால் உங்களுக்கு மன உளைச்சலாக இருக்கிறது. உண்மையிலேயே நீங்கள் அவளைக் காதலித்தால் அவளது கடந்த காலம் பற்றிய மன உளைச்சல் ஏன் வருகிறது?
காதலிப்பது என்பது உங்களுக்குப் பெருமையாக இருக்கக்கூடும். உடனடியாக நடப்பதை மட்டும் பார்க்கிறீர்கள். ஆனால் திருமணம் செய்துகொள்வது என்பது ஒருநாள் இரண்டு நாள் விஷயமல்ல. உங்கள் ஆயுட்கால வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு? இதில் அந்தப் பெண்ணுக்கும் உங்களுக்கும் பொறுப்புணர்வு என்பது எங்கே இருக்கிறது? தீர்க்கமான சிந்தனை ஏதுமின்றி விளையாட்டுத்தனமாக நீங்கள் இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago