ஃபேண்டம் உடன் மோதும் புதிய எதிரி யார்?

By கிங் விஸ்வா

சாகாவரம் பெற்ற மாயாத்மாவாகக் கருதப்படும் வேதாளரின் (ஃபேண்டம்) கட்டுப்பாட்டை மீறி, அவரது உயிருக்கே உலை வைக்கப் பார்க்கிறான் இரும்புக் கை கொள்ளைக்காரன். மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள ஃபேண்டம் ஆங்கில கிராஃபிக் நாவலில்தான் இந்தப் புதிய மோதல் வெடித்துள்ளது.

கதைச்சுருக்கம்: கட்டியா சிங் என்ற ஒரு கொள்ளைக்காரன், ஓபிர் என்னும் இடத்துக்குச் செல்லும் வழியைக் கேட்டு, பொகாலி கிராமத்தைச் சேர்ந்த முதியவரைச் சித்ரவதை செய்கிறான். இதைப் பற்றி ஒரு சிறுவன் தெரிவிக்க, அந்தக் கிராமத்துக்கு மனைவி டயானாவுடன் விரைகிறார் வேதாளர்.

இதற்கிடையில் இரும்புக் கை கொள்ளைக் காரன் சிங்கின் மிரட்டலுக்கு அடிபணிந்த முதியவர், ஓபிர் செல்ல வழியைச் சொல்வதுடன், சாகாவரம் பெற்ற மாயாத்மாவுடன் நீ மோதவேண்டி வரும் என்று எச்சரிக்கிறார். வேதாளரை நான் சமாளித்துக் கொள்வேன் என்று சொல்லும் சிங்கிடம் “வேதாளரைப் பற்றி ஒரு விஷயத்தை நான் சொல்லவே இல்லையே?” என்று ஒரு செக் வைக்கிறார் முதியவர்.

கிராமத்துக்குள் நுழையும் வேதாளர், காவலுக்கு இருப்பவர்களைத் துவம்சம் செய்துவிட்டு முன்னேறும்போது ஒரு மர்ம மனிதனால் தாக்கப்பட்டு மயக்கம் அடைவதுடன் முதல் பாகம் முடிகிறது.

அலசல்

பிராயச்சித்தம்: 24 வருடங்களுக்கு முன்பு செய்த தவறைத் திருத்தி, பிராயச்சித்தம் தேடிக்கொள்ளும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அப்படி ஒரு வாய்ப்பு கதாசிரியர் பீட்டர் டேவிட்டுக்கு இந்தக் கதை மூலம் கிடைத்துள்ளது.

வேதாளரின் ஆரம்ப காலக் கதைகளை கலெக்டர்ஸ் எடிஷனாக வெளியிட்டு வரும் பதிப்பாளர் டேனியல் ஹெர்மன், பத்தாண்டுகளாகப் புதிய வேதாளர் கதைகள் எதுவுமே உருவாக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி புதிய கதையை உருவாக்கும் அனுமதியைப் பெற்றார். அதற்குப் பிறகு அவர் சந்தித்த முதல் நபர் பீட்டர்தான்.

ஏனென்றால் பீட்டர், காமிக்ஸ் உலகின் அசாத்திய கதைசொல்லி. வேதாளர் கதை வரிசை மீண்டும் வந்தால், அதில் என்ன செய்ய முடியும், எப்படிப் புதுவெள்ளம் பாய்ச்ச முடியும் என்பதைப் பற்றி தனது இணையதளத்தில் நினைவுறுத்திக்கொண்டே வந்திருந்தார்.

இயல்பில் மாற்றம்

1988-ம் ஆண்டில் டி.சி. காமிக்ஸ் வேதாளரின் நான்கு பாகக் கதையை வெளியிட உரிமைபெற்றபோது, புதிய கதையை எழுதும் வாய்ப்பு கதாசிரியராக மாறத் துடித்துக்கொண்டிருந்த பீட்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தக் கதையில் எதிரி ஒருவனை வேதாளர் சுட்டுக் காயப்படுத்துவதாக இருந்ததை, வேதாளரை உருவாக்கிய லீ பாஃக் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனென்றால், வேதாளர் யாரையும் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்துவதில்லை, எதிரிகளின் துப்பாக்கியைச் சுட்டு அவர்களுடைய கையில் இருந்து ஆயுதங்களை வீழ்த்த மட்டுமே செய்வார்.

அதன் பிறகு வேதாளர் கதை வரிசையில் பணியாற்றும் வாய்ப்பு பீட்டருக்குக் கிடைக்கவே இல்லை. இப்போது டேனியல் ஹெர்மன் அவருக்கு மறுபடியும் வாய்ப்பை வழங்கியுள்ளது ஒரு காவிய நியாயம்.

தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை பீட்டர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா, இல்லையா என்பதை அடுத்த பாகங்கள் வந்த பிறகுதான் கணிக்க முடியும். எதிர்நாயகனாக ஒரு இரும்புக்கை கொண்டவரை அவர் நிறுத்தியிருப்பது ஒரு புதுமையே. பெண்கள் உரிமை பற்றிப் பேசும் தற்காலச் சூழலில் கதையில் டயானாவுக்கும் இணையான பங்கு வழங்கி இருப்பதைப் பாராட்ட வேண்டும்.

விறுவிறுப் பாகச் செல்லும் இந்தக் கதைக்கு ஐரோப்பிய, அமெரிக்க பாணியில் உயிர் கொடுத்துள்ளவர் ஓவியர் சால் வெலுட்டோ. இத்தாலியில் பிறந்து 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருபவர். வேதாளரின் கதைகளுக்கு 7 ஆண்டுகளாக முதன்மை ஓவியராக இருக்கும் சால் வெலுட்டோ, இத்தொடருக்கு வரைந்த டீசர் போஸ்டர் உலகம் முழுவதும் வேதாளர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ரசிகர்களின்விவாதம்: வேதாளரும் டார்ஜானும் மோதினால் எப்படி இருக்கும் என்று கதாசிரியர் பீட்டர் ஏற்கெனவே கொளுத்திப் போட்டிருந்தார். இந்தக் கதையில் வரும் ‘சாகாவரம் பெற்ற’ அந்த மர்ம மனிதர் யார் என்பதுதான் உலக வேதாளர் ரசிகர்களிடையே இப்போது நடந்துவரும் சூடான விவாதம்.

அது டார்ஜான்தான் என்று ஒரு சாரரும், இல்லை அது லீ பாஃக்கின் முதல் கதையில் டயானாவை மணக்க வந்த நபர்தான் என்று மற்றொரு சாரரும் விவாதம் நடத்த, அமைதியாக இருந்த வேதாளரின் ரசிகர் மன்றங்கள் வாதப் பிரதிவாதங்களால் தீப்பிடித்துக் கிடக்கின்றன.

தீர்ப்பு: வாசிக்கலாம். மூன்று தோட்டாக்கள் (3/6)

நாவல் : The Phantom
(Hermes Press, English, USA. Part 1 of 6 Part Mini Series)

கதை : பீட்டர் டேவிட்

ஓவியம் : சால் வெலுட்டோ

வெளியீடு : ஹெர்ம்ஸ் ப்ரெஸ் (குறுந்தொடர் 1-6, அக்டோபர் 2014 மார்ச் 2015)

அமைப்பு : சூப்பர் ஹீரோ காமிக்ஸ்

கதைக்கரு: வேதளரைத் தடுக்கும் சாகா வரம் பெற்ற இரும்புக் கை வில்லன் அறிமுகம்.

- கிங் விஸ்வா,
காமிக்ஸ் ஆர்வலர், பதிப்பாளர்.
தொடர்புக்கு: prince.viswa@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்