கொஞ்சம் சாகசம், கொஞ்சம் கலாட்டா

By என்.கெளரி

வீக் எண்ட் இல்லாத ஒரு வாழ்க்கையைப் பற்றி நாம் கற்பனை செய்யக்கூட விரும்பவதில்லை. வீக் எண்ட்டை வீட்டில் தூங்கியே கழிப்பவர்கள் ஒரு வகை. நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடாமல் வீக் எண்ட்டே கிடையாது என்று சொல்பவர்கள் மற்றொரு வகை. சமூக அக்கறையுள்ள செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வீக் எண்டை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்பவர்கள் இன்னொரு வகை.

இந்த மாதிரி இங்கே எல்லோருக்கும் ஒரு வீக் எண்ட் கலாச்சாரம் இருக்கிறது. இந்த வீக் எண்ட் கலாச்சாரம்தான் ஐடி துறையில் வேலைபார்க்கும் ராகுல் குமாரை ‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ (Chennai Weekend Extroverts) என்ற குழுவை ஆரம்பிக்கத் தூண்டியிருக்கிறது. ராகுல் குமார், இந்தக் குழு மூலம் இளைஞர்களை இணைத்து, வீக் எண்டில் சர்ஃபிங், போட்டோகிராஃபிக் வாக்ஸ், பைக் ரைட்ஸ், குதிரை ஏற்றம், நீச்சல், நடனம், காபி -டின்னர் சந்திப்புகளை ஏற்பாடு செய்துவருகிறார்.

வீக் எண்ட் ஃபீவர்

26 வயதாகும் ராகுல் குமாருக்கு பூர்வீகம் பாட்னா. தற்போது ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றிவருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை காரணமாகச் சென்னையில் குடியேறியிருக்கிறார் ராகுல் குமார். புதிய நகரம், புதிய நண்பர்கள், புதிய சூழல் எனத் தன் வீக் எண்ட்டை ஆரம்பத்தில் ரொம்பவே ‘மிஸ்’ செய்திருக்கிறார்.

தன்னைப் போலவே வீக் எண்ட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘மீட்அப்.காம்’-ல் இந்த ‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ குழுவை ஜூலை 2014-ல் ஆரம்பித்திருக்கிறார். “வீக் எண்ட்டில், பெரும்பாலானவர்கள் பீச், மால்கள் எனச் சுற்றிச் சுற்றி அலுத்துப்போயிருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களின் வீக் எண்டைக் கொஞ்சம் கலர்ஃபுல்லாக மாற்றலாம் என்றுதான் இந்தக் குழுவைத் தொடங்கினேன்.

அந்த முயற்சியை ஆரம்பித்தவுடனேயே நல்ல வரவேற்பும் கிடைத்தது. ‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ குழுவில் இப்போது முந்நூறுக்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கிறார்கள்” என்கிறார் அவர்.

புதுப்புது நண்பர்கள்

நண்பர்கள் இல்லாமல் எந்தக் கொண்டாட்டமும் முழுமையடை வதில்லை. அந்த வகையில், இந்தக் குழுவில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த விஷயம் ‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ இளைஞர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னையில்தான் வசிக்கிறேன்.

இந்தக் குழுவில் சேர்வதற்கு முன்புவரை, எனக்கு நான்கு நண்பர்கள் மட்டும்தான் இருந்தார்கள். இப்போது இந்தக் குழுவில் இணைந்த பிறகு பதினைந்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக நண்பர்கள் இல்லாத குறையை நான்கே மாதத்தில் ‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ போக்கிவிட்டது” என்கிறார் அர்ஜுன். இவரும் ராகுலுடன் சிஸ்கோ நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார்.

அர்ஜுனின் கருத்தை வலியுறுத்தும் தீனா, “வீக் எண்டில் என் தனிமை உணர்வைப் போக்கியதில் ‘சென்னை வீக் எண்ட் எக்ஸ்ட்ரோ வெர்ட்ஸ்’க்குப் பெரிய பங்கிருக்கிறது. அத்துடன், பல்வேறு பின்னணியைக் கொண்ட நபர்களுடன் பயணம் செய்வதால் அவர்களுடைய கலாசாரத்தையும் தெரிந்துகொள்வதற்கு இந்த வீக் எண்ட் சந்திப்புகள் உதவுகின்றன” என்கிறார்.

சாகசங்களும் பாதுகாப்பும்

‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ ஒவ்வொரு வீக் எண்ட் செல்ல வேண்டிய இடங்களை வாட்ஸ் அப்பில், குழுவில் இருப்பவர்கள் அனைவரிடமும் பேசிய பிறகே முடிவுசெய்கிறார்கள். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்கள். சர்ஃபிங், பைக் ரைடிங், குதிரை ஏற்றம், மிட்நைட் காபி எனச் சாகசப் பயணங்களை இவர்கள் விரும்பினாலும் பாதுகாப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்.

“எங்கள் குழுவுடன் பாண்டிச்சேரி வரைகூட பைக்கில் சென்றுவந்திருக்கிறோம். ஆனால், பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான எல்லா அம்சங்களையும் சரிப்பார்த்த பிறகே பயணிப்போம். பைக் ரேசிங்கிற்கு ஸ்ட்ரிக்டாக ‘நோ’ சொல்லி விடுவோம்’’ என்கிறார் ராகுல் குமார்.

இந்தக் குழு எல்லாத் தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். “வீக் எண்டில் பயணம் செய்ய விரும்பும் என் போன்ற பெண்களுக்கு ‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ குழு பெரிய கிஃப்ட். ஆரம்பத்தில், எப்படிப் புதியவர்களுடன் பயணம் செய்வது என்ற தயக்கம் இருந்தது. ஆனால், நேரில் சந்தித்ததும் எல்லோரும் வெகு சீக்கரமே நண்பர்கள் ஆகிவிட்டோம்.

ஒருவேளை, பயணம் முடிந்து வீடு திரும்புவதற்கு தாமதமானால், குழு நண்பர்களே வீட்டில் டிராப் செய்துவிடுவார்கள். இதனால், வீக் எண்ட் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடிகிறது” என்கிறார் விப்ரோ நிறுவனத்தில் வேலைபார்க்கும் பவுலாமி. இவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.

உற்சாகத் தேடல்கள்

மிட்நைட்டில் காபி சாப்பிடுவதற்காக மட்டும் ஸ்டார் ஹோட்டலுக்குச் செல்வது, த்ரில்லான ட்ரெக்கிங், பொறுப்பான மாரதான், தட்சிண சித்ராவிற்கு ஆர்ட் டூர், ஈசிஆரில் லாங் டிரைவ் என ஒவ்வொரு பயணத்தையும் ஏதோவொரு புதுமை இருக்கும்படி திட்டமிடுகிறார்கள். இந்தப் புதுமையை விரும்பிதான் முஸ்கான் ‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ குழுவில் சேர்ந்திருக்கிறார்.

“எனக்கு எப்போதும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அதற்கு இந்த வீக்எண்ட் குழு பெரிதாக உதவுகிறது. ஒவ்வொரு வீக்கும் புது ஃப்ரெண்ட்ஸ், புது இடங்கள் என இப்போது என் வீக்எண்ட் ரொம்ப ஜாலியாகச் செல்கிறது” என்கிறார் இவர்.

வீக் எண்டை உற்சாகமாகவும், புதுமையாகவும், சாகசங்கள் செய்தும் கழிக்க வேண்டும் என்று விரும்பும் இளைஞர்கள் ‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ போன்ற குழுக்களில் தங்களை இணைத்துக்கொள்வதில் எந்த ஆச்சரியமுமில்லை.

‘சென்னை வீக்எண்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்ஸ்’ குழுவைப் பற்றித் தெரிந்துகொள்ள: >http://www.meetup.com/Chennai-WeekEnd-Extroverts/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்